கொல்கத்தா பாலியல் வன்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத் தலையீட்டை எப்படிப் பார்ப்பது?

தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

டந்த 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த பெண் மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

இப்படுகொலை நாடு முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைசெய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கோரியும் நாடு முழுவதும் காலவரையற்ற போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து ஆகஸ்ட் 20 முதல் விசாரித்து வருகிறது. விசாரணையின் போது மருத்துவமனைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்து நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “சில இடங்களில் மருத்துவர்களை சந்திக்க நோயாளிகள் இரண்டு ஆண்டு வரை காத்திருக்கின்றனர். ஏழை மக்களை அப்படி விட முடியாது. முதலில் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். நீங்கள் பணிக்கு திரும்பிய பிறகு, அதிகாரிகள் உங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். மருத்துவர்கள் வேலை செய்யாவிட்டால் சுகாதாரத்துறை எப்படி இயங்கும். மருத்துவர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய பணிக்குழு அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும். மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் இக்குழு கேட்கும்” என்று கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் (ஆர்டிஏ), டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனை ஆகியவை 11 நாள்கள் நடத்திவந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் உறைவிட மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “பாதுகாப்பு வழிகாட்டுதலை அமல்படுத்தும்வரை பணி நேரத்திற்குப் பிறகு எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்” என்று கூறப்பட்டுள்ளது.

***

மருத்துவர்களின் 36 மணிநேர பணிச்சுமை குறித்தோ, போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்தோ, இதன் பின்னால் உள்ள மருத்துவம் தனியார்மயமாக்கப்படுவது குறித்தோ உச்சநீதிமன்றம் எந்த கருத்தையும் கூறவில்லை; எந்த உத்தரவையும் பிறக்கவில்லை.

பிரதமர் மோடி இதில் தலையிட வேண்டும், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கை குறித்தும் உச்சநீதிமன்றம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மாறாக, தாங்கள் இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அனைத்தும் சரியான திசையில் செல்வதாக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்துள்ளது. இது போல் பல வழக்குகள், விசாரணை நாடகங்கள், மறுபடியும் பாலியல் படுகொலைகள்‌.‌. இது தொடர்கதையாக நடந்து கொண்டே இருக்கிறது.

போராடுபவர்களும், போராட்டத்திற்கு துணையாக இருக்கும் ஜனநாயக சக்திகளும் இந்த கட்டமைப்பைப் புரிந்து கொண்டு தங்களின் போராட்ட உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. ஒரு மாற்றுக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

நன்றி: மக்கள் அதிகாரம், நெல்லை மண்டலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க