இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மீதான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்லாமிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் மற்றொருபுறம் அவர்களின் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தகர்ப்பதன் மூலமாக, சொந்த நாட்டிற்குள்ளேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாகவும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் மாற்றி வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.
‘மசூதிகளுக்குள்ளே கோவில்கள்’
பாசிஸ்டுகளின் ‘ஆன்மீகத் தேடல்’
பாபர் மசூதிக்கடியில் ராமன் கோவில் இருந்தது என்ற கட்டுக்கதையின் மூலம் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு ராமனுக்கு கோவில் கட்டியுள்ள காவிக் குண்டர் படை, தற்போது வாரணாசி-ஞானவாபி மசூதி தொடங்கி இந்தியா முழுவதும் மசூதிகளுக்கடியில் கோவில்கள் இருப்பதாகக் கூறி கரசேவையை தொடங்கியிருக்கிறது.
★ மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சம்பல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியானது ஹரிஹர இந்துக் கோவிலை இடித்து, முகலாய மன்னர் முகமது பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று தீவிர இந்துத்துவவாதியான உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியை மேற்பார்வையிட வழக்குரைஞர் ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதற்கட்ட சர்வே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட சர்வே பணியின்போது, சர்வே பணிக்கு வந்த அதிகாரிகளுடன் இந்து மதவெறியர்களும் சேர்ந்துக் கொண்டனர். காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தவே, தற்காப்புக்காக சம்பல் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தரப்பிரதேச போலீசு மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி அநியாயமாக ஐந்து இஸ்லாமியர்களை படுகொலை செய்தது யோகி ஆதித்யநாத் அரசு.
★ ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற தலமான, 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவாஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவானது ஒரு பழமையான சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சேனா என்ற அமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இதற்கான ஆதாரம் என்ற பெயரில் இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா மூன்று அம்சங்களை முன்வைக்கிறார்.
முதலாவதாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது அஜ்மீர் நகராட்சி ஆணையராக இருந்த ஹர்பிலால் சர்தா, 1911-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தில் இந்த தர்கா ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக, இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு இந்து சேனாவின் சார்பாக ஒரு குழு சொந்த முறையில் அந்த தர்காவில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வில் தர்காவின் சுவர்கள் மற்றும் கதவுகளில் இந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் போன்றவை அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மூன்றாவதாக, எங்களது முன்னோர்கள் உட்பட அஜ்மீரில் உள்ள பலர் தர்கா இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்ததாகவும் அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் கூறுகின்றனர். எனவே, அந்த இடம் சிவலிங்கத்திற்கு சொந்தமாகும். அந்த அடிப்படையில் நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மூன்று காரணங்களையும் சான்றுகளாக வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ள அஜ்மீர் நீதிமன்றம், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், தர்கா கமிட்டி மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகிய மூன்று தரப்பினருக்கும் நவம்பர் 27-ஆம் தேதி நோட்டீசு அனுப்பியுள்ளது.
★ ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படும் கேசவ் தேவ் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று காவிக் கும்பல் வதந்தியைக் கிளப்பியது. இந்நிலையில், இதனை அடிப்படையாக வைத்து மசூதியை அகற்றுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
★ குதுப்மினாரை விஷ்ணுமினார் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அது இந்து கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் காவிக் குண்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எரிகின்ற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தரம்வீர் சர்மா, “டெல்லியில் இருப்பது குதுப்மினார் இல்லை. அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டதில்லை. அது, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரியக் கோபுரம்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
★ கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட சுமார் 240 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது, நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்னும் இந்துத்துவ அமைப்பு.
மசூதி இருந்த இடத்தில், அனுமன் கோவில் இருந்தது என்று பாரசீக ஆட்சியர்களுக்கு திப்பு கடிதம் எழுதியதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளது என்றும் மசூதியின் தூண்கள், சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் இந்து மதத்தைச் சார்ந்தது என்றும் எனவே வழிபாடு நடத்த மசூதியின் கதவுகளைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் மஞ்ச் அமைப்பின் செயலாளர் மஞ்சுநாத்.
இவை மட்டுமல்ல, மத்தியப்பிரதேசத்தில் உள்ள கமல் மௌலா மசூதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா-ஷாஹி ஈத்கா மசூதி, ஆக்ரா-ஜாமா மசூதி, ஜாவுன்பூர்-அடாலா மசூதி, பதாவுன்-ஷம்சி ஜாமா மசூதி, லக்னோ-திலா வாலி மசூதி, கர்நாடகாவில் உள்ள பாபா புதன்கிரி தர்கா போன்ற மசூதிகள், தர்காக்கள் என 12 வழிபாட்டுத் தலங்கள் இந்து கோவில்களை இடித்துக் கட்டப்பட்டதாக பல்வேறு வழக்குகள் காவிக் கும்பலால் தொடரப்பட்டுள்ளன.

“பாபர் மசூதி வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா மசூதிகளும் இலக்கில் உள்ளன”, “இன்னும் 1,800 கோவில்களை மீட்க வேண்டியுள்ளது” என்று கொக்கரித்தவாறே இம்மசூதிகளையும் தர்காக்களையும் வேட்டையாடத் துடிக்கிறது காவிக் கும்பல்.
இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்குமா நீதித்துறை?
மசூதிக்கடியில் இந்து கோவில் இருப்பதாக வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காவிக் கும்பல், உத்தரப்பிரதேசத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நூரிஜாமா மசூதியின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாகவே இடித்துத் தள்ளியிருக்கிறது. 68 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை, 158 ஆண்டுகள் பழமையான நூரிஜாமா மசூதி ஆக்கிரமித்துள்ளது என்ற அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, டிசம்பர் 10 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே மசூதியை இடித்தது காவிக் கும்பல். இது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகி ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நூரிஜாமா மசூதி இடிக்கப்பட்ட இரண்டே நாட்களில், 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு வரும்வரை, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாட்டின் எந்த நீதிமன்றங்களிலும் புதிய வழக்கு தொடரத் தடை விதித்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்க ஊடகங்களும், உச்சநீதிமன்றம் பாசிசக் கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்களையும் உரிமையையும் பாதுகாக்கும் என்றனர்.
ஆனால், உச்சநீதிமன்றம் திடீரென இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ‘சீற்றம்’ கொண்டு இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பது இது முதன்முறையல்ல. அப்படி வழங்கப்பட்ட உத்தரவுகளும் தீர்ப்புகளும் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவோ பாசிச சக்திகளுக்கு நெருக்கடி கொடுப்பதாகவோ இருந்ததில்லை என்பதே கடந்த கால அனுபவமும் வரலாறுமாகும்.
சான்றாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் வீடுகள், கடைகளை புல்டோசரால் இடித்துத் தள்ளுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. கட்டடங்களை புல்டோசரால் இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 13-ஆம் தேதியன்று இத்தகைய வழக்குகளில் கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய பத்து வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், “கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் நீதித்துறை ஆய்வு செய்வதற்கும் உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லையென்றால் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றது.
இதுவரை பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நீதி வழங்குவது குறித்தும் இழப்பீடு தருவது குறித்தும் வாய்திறக்காத, காவிக் குண்டர்களைத் தண்டிப்பது குறித்து மூச்சுக்கூட விடாத இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை பலரும் வரவேற்றனர்.
ஆனால், தீர்ப்பு வந்த ஒரு மாதத்திலேயே அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, நூரிஜாமா மசூதியை இடித்துத்தள்ளி மீண்டும் தனது புல்டோசர் ராஜ்ஜியத்தை தொடர்ந்துள்ளது, உத்தரப்பிரதேச யோகி அரசு. சொல்லப்போனால், நூரிஜாமா மசூதியை இடிப்பதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போதுதான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிலும், மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் திட்டமிட்டே டிசம்பர் 10-ஆம் தேதி மசூதியை இடித்துள்ளது யோகி அரசு.
இந்நிலையில்தான் தற்போது மற்றுமொரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதுவும் களத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத பெயரளவிற்கான உத்தரவு மட்டுமே. ஏற்கெனவே சில மசூதிகளில் வழிபாடு நடத்துவதற்கான அனுமதியை சங்கப்பரிவார கும்பல்கள் நீதிமன்றத்தில் பெற்றுள்ளதால், அங்கெல்லாம் சங்கப் பரிவாரக் கும்பல் தனது நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய்திறக்கவும் இல்லை.
உண்மையில், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுகளும் தீர்ப்புகளும் இக்கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை குலைந்துவிடக் கூடாது என்ற வர்க்கப் பாசத்திலிருந்தே பிறப்பிக்கப்படுகிறது.
பாசிச மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான பாசிச ஒடுக்குமுறை என்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இஸ்லாமியர்கள் மீது கும்பல் வன்முறையை நிகழ்த்திவந்த இந்து மதவெறிக் குண்டர்களுடன் தற்போது போலீஸ், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் இணைந்து சட்டப்பூர்வத் தாக்குதல் தொடுப்பது புதிய போக்காக வளர்ந்து வருகிறது. இவையன்றி, ஜனநாயக நிறுவனங்கள் என்று சொல்லப்பட்டவை அனைத்தும் பாசிச மோடி அரசின் அடியாள் படையாக மாறிவிட்டது என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றனர். இச்சூழலில் தான் தலையிடவில்லை எனில் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் உச்சநீதிமன்றம் பெயரளவிலான சில உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் வழங்குகிறது.
நீதித்துறையின் கரசேவை
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்கு தொடரத் தடைவிதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாசிச சக்திகளுக்கு எந்த வகையிலும் கடிவாளமிடாது என்பதையும் தாண்டி, வழிபாட்டுத் தலங்கள் 1991 சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
பாபர் மசூதி இடிப்பு சம்பவமானது இந்தியாவின் மதச்சார்பின்மையின்மை என்ற முகமூடியைக் கிழித்து தொங்கவிட்டது. இதனை தடுப்பதற்காக ஓடோடிவந்த உச்சநீதிமன்றம், 1991-ஆம் ஆண்டு மத வழிபாட்டுச் சட்டத்தில், “நாடு ‘விடுதலை’ பெற்ற ஆகஸ்டு 15, 1947 தினத்தன்று இருந்த நிலையிலிருந்து, எந்த வழிபாட்டுத் தலத்திலும் மாற்றங்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும். எந்த வழிபாட்டுத் தலங்களையும் வேறு பிரிவினருக்கோ, ஒரு பிரிவுக்குள் உள்ள மற்ற பிரிவுக்கோ முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்கி மாற்றங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கிறது. வழிபாட்டுத் தலங்களில் மாற்றங்கள் கோரி ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தால் அவை காலாவதியாகிறது. இனிமேல் புதிதாக வழக்குகள் தொடரத் தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டது. இந்த உத்தரவு பாபர் மசூதி தவிர பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு இறுதித் தீர்ப்பின்போதும் இக்கூறுகள் வலியுறுத்தப்பட்டன. இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் சட்டமாக பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால், வாரணாசியில் உள்ள சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஞானவாபி மசூதியில் காவிக் குண்டர்கள் வழிபாட்டு உரிமை கோரிய வழக்கு விசாரணையின் போது, “ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை. அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே தடை செய்கிறது” என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய வியாக்கியானத்தை அளித்தபோதே இச்சட்டம் நீர்த்துப்போனது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், சந்திரசூட்டின் இந்த வாய்மொழி விளக்கத்தை சட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு கீழமை நீதிமன்றங்கள் மதுரா மசூதி உள்ளிட்ட பல மசூதிகளுக்குள் காவிக் குண்டர்களை அனுமதித்தன. ஞானவாபி மசூதி உள்ளிட்ட மசூதிகளில் காவிக் குண்டர்கள் வழிபாடு நடத்துவதும், நாடுமுழுவதும் உள்ள பல மசூதிகளை அபகரிக்க நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கிடப்பதும் புது போக்காகியுள்ளது.
இருப்பினும், இச்சட்டத்தை தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவரும் காவிக் கும்பல் முற்றிலுமாக ரத்து செய்யத் துடிக்கிறது. இந்த பாசிச நோக்கத்திலிருந்துதான் வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, நீதி பெறுவதற்கு தடையாக இருப்பதாகவும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளும் சுப்பிரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இத்தகைய வழக்குகளை ரத்து செய்வதற்குப் பதிலாக, சிரமேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும். இத்தகைய வழக்கு விசாரணையில் அளிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமிய மக்களுக்கான அரண் என்று முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தானதாகும்.
எனவே, நீதிமன்றங்கள் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை என்பதை விட, சங்கப் பரிவாரக் கும்பல்களின் கரசேவைக்கு சட்ட வடிவம் கொடுத்து கரசேவையில் தனது பங்கை உறுதிப்படுத்தியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
போராட்டங்களே பாசிஸ்டுகளின் கோட்டைகளை நொறுக்கும்
உண்மையில், இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்கள் காவிக் கும்பலால் குறிவைக்கப்படுவதும் கட்டடங்கள் இடித்து நாசமாக்கப்படுவதும் பாசிசக் கும்பலின் இந்துராஷ்டிரம் என்ற கனவுடன் இணைந்ததாகும்.
இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடித்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பல், அதற்காக இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளையும் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும் பறித்துவருகிறது.
அதேபோல், இந்தியாவில் நாடு முழுவதும் சுமார் 1.2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துகளின் மீதான இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறித்து அதனை கைப்பற்றிக் கொள்வதற்காக வக்ஃப் சட்டத்திருத்தத்தையும் நிறைவேற்றத் துடிக்கிறது காவிக் கும்பல். இத்தனை கோடி ரூபாய் சொத்துகளையும் அபகரிப்பதுடன், இஸ்லாமியர்களின் பொருளாதார அடிக்கட்டுமானங்களை தகர்த்து சொந்த மண்ணிலேயே அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிரக் கனவுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
இஸ்லாமியர்களை தேர்தலில் வேட்பாளராக பாசிசக் கும்பல் நிறுத்தாததும், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கேள்வியுமின்றி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து அவர்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்குவதும் இந்த நோக்கத்துடன் இணைந்ததே ஆகும்.
பாசிசமயமாகியிருக்கும் நீதித்துறையானது பாசிசக் கும்பலின் நோக்கத்திற்கு பக்கபலமாகவே நிற்கிறது. சூழல் இப்படி இருக்கையில், நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களின் உரிமையையும் அதிகாரத்தையையும் நிலைநாட்டிவிட முடியும் என்று கருதுவது இஸ்லாமிய மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதிலேயே சென்று முடியும்.
எனவே, இனியும் பாசிசமயமாகிவரும் நீதிமன்றமும் இஸ்லாமிய மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுத்தராது. அது கரசேவை அமைப்பாக எப்போதோ மாறிவிட்டது. இந்த பாசிஸ்டுகளின் இஸ்லாமிய விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக களப்போராட்டங்களைக் கட்டியமைப்பதே உடனடி தீர்வுக்கு வழிவகுக்கும்.
மேலும், இந்துராஷ்டிரம் அமைக்கப்படுவது என்பது வெறுமனே இஸ்லாமிய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, அது தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள், தலித் மக்கள் என கோடானுகோடி உழைக்கும் மக்களை நரகத்திற்குள் தள்ளுவதாகும். இஸ்லாமியர்கள் பாசிஸ்டுகளின் முதல் பலி மட்டுமே. எனவே, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதே உடனடி தேவையாகும்.
பாரி
(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram