நீதிமன்றங்களா? பாசிசக் கையாட்களின் கூடாரங்களா?

நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.

மோடி அரசின் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில், இந்திய போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதற்காக அனைத்துத் துறைகளிலும் காவி பாசிஸ்டுகள் நுழைக்கப்பட்டு வருகின்றனர். அதிலும், நீதித்துறையில் உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் நுழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே, தங்களுக்கான கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை அணுகும் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் முதுகில் குத்திய வரலாறுதான் இந்திய (அ)நீதித்துறையின் வரலாறு. அப்சல் குரு வழக்கு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவை அதற்கான சாட்சியங்களாகும்.

இதில் நீதித்துறை முழுவதும் கருப்பு கவுன் அணிந்த காவிகள் புகுத்தப்பட்டால் அதன் எதிர்விளைவு எத்துணை கோரமானதாக இருக்கும் என்பதை, சமீபத்திய இந்துத்துவ தீர்ப்புகளும், நீதிபதிகளின் இஸ்லாமிய வெறுப்பு-இந்துமதவெறிக் கருத்துகளும் எடுத்துரைக்கின்றன.

இது இந்துக்களின் நாடு’ (மனு)நீதிபதியின் கொக்கரிப்பு

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியன்று உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்ற நூலக அரங்கில், பயங்கரவாத இந்துத்துவ அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் சார்பில், ‘பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவ்வுரையில், “இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில்தான் இந்நாடு செயல்படும். இதுதான் சட்டம். இதை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் பெரும்பான்மைக்கு ஏற்பச் செயல்படுகிறது. ஒரு குடும்பம் அல்லது சமூகப் பின்னணியில் இதைக் கவனியுங்கள்-பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால் இந்த வெறியர்கள் (கத்முல்லா)… இது சரியான வார்த்தையாக இல்லாமல் இருக்கலாம்… ஆனால் நாட்டிற்கு கேடு விளைவிப்பதால் நான் அதைச் சொல்ல தயங்கமாட்டேன். அவர்கள் நாடு முன்னேறுவதை விரும்பாதவர்கள், அவர்களிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நமது கலாச்சாரத்தில், குழந்தைகள் கடவுளை நோக்கி வழிகாட்டுதலுடன் வளர்க்கப்படுகிறார்கள், வேத மந்திரங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அகிம்சையின் விழுமியங்களுடன் வளர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், வேறு சில கலாச்சாரங்களில், குழந்தைகள் விலங்குகளைப் படுகொலை செய்வதைக் கண்டே வளர்கிறார்கள். இதனால் அவர்கள் சகிப்புத்தன்மையையும் இரக்கத்தையும் வளர்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம்” என்று அப்பட்டமாக தனது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கக்கினார்.

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த இந்துமதவெறி நச்சுப் பேச்சானது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிரானது என்று மூத்த வழக்கறிஞர்கள் பலரும் கடும் கன் கண்டனம் தெரிவித்தனர்.நீதிபதிகளை நியமிக்கின்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலீஜியமும் சேகர் குமாரை நேரில் வரவழைத்து விசாரித்தது. ஆனால், தற்போதுவரை நீதிபதி சேகர் குமார் மீது கண்துடைப்பு நடவடிக்கைகளைக்கூட உச்சநீதிமன்றம் மேற்கொள்ளவில்லை.

அதேபோல், நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-இன் படி, நீதிபதி சேகர் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென, கபில் சிபல் தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரித்தால் மட்டுமே இத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பதால், நாடாளுமன்றத்தின் மூலம் சங்கி சேகர் குமார் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று எதிர்பார்ப்பதும் கானல் நீரே ஆகும்.

மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் வெறிக்கூச்சல் குற்றமில்லையாம்..

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி இரவு 10:50 மணியளவில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பதன்யா ஜூம்மா மசூதிக்குள் நுழைந்த கும்பலொன்று, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று வெறிக்கூச்சலிட்டது. ‘உங்களை விட்டு வைக்க மாட்டோம்’ என்று பெரி சமூக இஸ்லாமியர்களை மிரட்டியது. இதுகுறித்து ஹைதர் அலி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

செப்டம்பர் 13, 2024 அன்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி நாகப் பிரசன்னா, “‘ஜெய் ஸ்ரீராம்’ என்று யார யாராவது கோஷங்களை எழுப்பினால் அது எப்படி மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்பது அப்பகுதியில் இந்துக்களும், நல்லிணக்கத்துடன் புகார்தாரரே வாழ்ந்து கூறியுள்ள இந்தச் சம்பவத்தை எந்த புரியவில்லை. முஸ்லிம்களும் வருவதாக நிலையில், வகையிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகக் கூற முடியாது” என்று காவிக் கும்பலுக்கு சாதகமாக தீர்ப்பெழுதினார்.

அத்துடன், இவ்வழக்கில், பிரிவுகள் 447 (அத்துமீறல்), 295A (மத நம்பிக்கைகள் அல்லது மதத்தை அவமதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட செயல்), 505 (பொது அமைதியின்மையைத் தூண்டும் செயல்), பிரிவுகள் 503 (மிரட்டல்), 506 (மிரட்டல் விடுத்ததற்கான தண்டனை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றை பதிவதற்கான முகாந்திரமில்லை என்று கூறி ‘இந்துராஷ்டிர’ நீதியை நிலைநாட்டினார்.

இத்தீர்ப்பை எதிர்த்து ஹைதர் அலி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து, டிசம்பர் 16, 2024 அன்று நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரின் அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “ஒரு மதம் சார்ந்த குறிப்பிட்ட வார்த்தையையோ அல்லது பெயரையோ முழக்கமிடுவது எவ்வாறு கிரிமினல் குற்றமாகும்?” என்று கேள்வியெழுப்பியதன் மூலம் உச்சநீதிமன்றமும் தன் பங்கிற்கு ஹைதர் அலியின் முதுகில் குத்தியது. அத்துடன், குற்றவாளிகள் வழக்குரைஞர்களாக மாறி குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதே ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டு இந்து மதவெறிக் குண்டர்கள் பாபர் மசூதியை இடித்தனர்; குஜராத்தில் இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்தனர்; ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி அப்பாவி இஸ்லாமியர்களை நாள்தோறும் அடித்துப் படுகொலை செய்கின்றனர்.

அத்தகைய கொலைவெறிக் கூச்சலை மசூதிக்குள் எழுப்புவதில் என்ன தவறு எனக் கேள்வியெழுப்புகிறது இந்திய இக்கேள்விக்குப் பின்னால், நீதித்துறை. இந்தியா இந்துக்களுக்கானது, இஸ்லாமியர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள், அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை என்ற இந்துத்துவ சித்தாந்தமே ஒளிந்திருக்கிறது. இதிலிருந்தே இவ்வழக்கின் தீர்ப்பு, பாசிசக் கும்பலுக்குச் சாதகமாகவே அமையும் என்பது உறுதியாகிவிட்டது.

000

இந்த சம்பவங்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ தாராளவாதிகளால் கொண்டாடப்பட்ட ‘ஜனநாயகவாதியாக’க் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பாபர் மசூதி இடிப்பு வழக்கிற்கு தீர்ப்பு வழங்க கடவுளை வேண்டினேன் என்று சமீபத்தில் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல, கடந்த மே மாதம் 20-ஆம் தேதியன்று தன்னுடைய பணி ஓய்வு நிகழ்வில் உரையாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன்தாஸ், தான் ஆர்.எஸ்.எஸ்-இல் பணியாற்றி வந்ததையும் மீண்டும் பணியாற்ற விரும்புவதையும் பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதியாக உள்ள ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புகளும், பேச்சுகளும் அவர் ஓர் அப்பட்டமான சங்கி என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகின்றன. ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பை மீறி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட விக்டோரியா கெளரி பா.ஜ.க. மகளிரணியில் செயல்பட்டவர் என்பது ஊரறிந்த உண்மை.

இவையெல்லாம், பொதுவெளியில் அம்பலமானவை மட்டுமே. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் நமது மது கவனத்திற்கு வராத நூற்றுக்கணக்கான கருநாகங்கள் நீதித்துறையில், அதுவும் உயர் பொறுப்புகளில் நுழைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நீதிபதிகளின் சங்கித்தனங்கள் வெளிப்படும்போதும், பணி ஓய்விற்குப் பிறகு முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படும் போதும்தான் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் என்பதை மக்களால் அடையாளம் காண முடிகிறது.

இவ்வாறு நீதித்துறை முழுவதும் காவிக் கும்பலைச் சார்ந்தவர்கள் புகுத்தப்படுவதென்பது, தற்போது நிலவுகின்ற இந்தப் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பிற்கு பதிலாக, இந்துராஷ்டிரக் கட்டமைப்பை நிறுவத் துடிக்கும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிசக் கும்பலின் திட்டத்துடன் இணைந்ததாகும். பாசிசக் கும்பலின் இத்திட்டத்திற்கு நிலவும் போலி ஜனநாயக கட்டமைப்பும் அரசியலமைப்பும் பக்கபலமாகவும் பாசிசத்தை அடைகாக்கும் கருவிகளாகவும் உள்ளன என்பதே யதார்த்தமாகும்.

சான்றாக, நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை அமைப்பதன் மூலம் தமது கையாட்களை நீதித்துறையில் ஆதிக்கம் பெற வைக்க விரும்பியது, மோடி-ஷா கும்பல். அதற்கான வாய்ப்புகள் உடனடியாகக் கிடைக்காத நிலையில், பழைய கொலீஜியம் அமைப்பின் மூலமாகவே ஆர்.எஸ்.எஸ். கையாட்களை புகுத்தி, கடந்த பத்தாண்டுகளில் இந்திய நீதித்துறையை சங்கப் பரிவாரக் கும்பல்களின் கூடாரமாக மாற்றிவிட்டது.

அதேபோல், பாசிசக் கும்பல் விரும்பும் ‘மனுநீதி’யை நிலைநாட்டும் வகையிலான மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன. இதன்காரணமாக, இத்தனை ஆண்டுகளாக ஒளிந்துகொண்டிருந்த நீதித்துறைக்குள் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள், மோடியின் மூன்றாம் முறை ஆட்சிக்குப் பிறகு முகமூடிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு தங்களது பாசிச முகத்தை பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக, வருங்காலங்களில் இஸ்லாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கி இந்தியாவை இந்துராஷ்டிரமாக்கும் பாசிஸ்டுகளின் திட்டத்தை நிறைவேற்ற இந்திய நீதித்துறை முன்னணியில் நிற்கும் என்பது திண்ணம். சமீபகாலமாக, “வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஆனது உண்மையான மதத் தன்மையை நிர்ணயிப்பதைத் தடுக்கவில்லை” என்ற சந்திரசூட்டின் வாய்மொழி உத்தரவைப் பயன்படுத்தி, காவிக் கும்பல் நாடுமுழுவதுமுள்ள மசூதிகளை குறிவைத்துவருவதும், அதற்கு நாடுமுழுவதிலுமுள்ள நீதிமன்றங்கள் பக்கபலமாக நிற்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

ஆனால், பாசிசத்தை வீழ்த்தப் போவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளோ, நீதித்துறை பாசிசமயமாகி வருவது குறித்து துளியும் கவலைப்படுவதோ வாய்திறப்பதோ இல்லை. மின்னணு வாக்கு இயந்திர மோசடி, தேர்தல் மோசடி, நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவது என எதுவாயினும் நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் திரும்பத் திரும்ப பாசிஸ்டுகளிடம் மண்டியிடுகின்றனர். இதுகுறித்தெல்லாம் வாய்திறந்தால், நிலவுகின்ற கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும், இதே கட்டமைப்பை வைத்துப் நாட்டை ஆள வேண்டுமென்ற தமது விருப்பத்திற்கு இணங்கி வாக்களிக்க மாட்டார்கள் என அஞ்சி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றன.

ஆனால், பாசிஸ்டுகள் வளர்வதற்கும், பாசிசம் அரங்கேறுவதற்கும் சாதகமாக உள்ள இக்கட்டமைப்பிற்குள் தங்களது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாது என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்துகொண்டு வீதிக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை. எனவே, உண்மையான ஜனநாயகத்தை வழங்குகிற பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்ற மாற்றுக் கட்டமைப்பை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது, இந்தியாவிலுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க