நாளந்தா பல்கலைக்கழகத்தில் சங்கிக்கு பதிலாக புதிய வேந்தர் நியமனம்:
காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
கடந்த ஏப்ரல் 28-அன்று நாளந்தா பல்கலைக்கழக வேந்தராக (Chancellor) அரவிந்த் பனகரியா நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியானது. முன்னாள் நிதி ஆயோக் துணை தலைவரும் தாராளவாதப் பொருளாதார கோட்பாட்டாளருமான பனகரியா, விஜய் பாண்டுரங் பட்கர்-க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் வேந்தரான விஜய் பட்கர் ஓர் அப்பட்டமான சங்கி. ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான விக்யான் பாரதியின் (Vigyan Bharti) தலைவராக இருந்தவர். ஜனவரி 25, 2017 அன்று வேந்தராக நியமிக்கப்பட்ட அவர் “விநாயகரின் யானைத் தலை என்பது பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதற்கான சான்று” போன்ற பிரதமர் மோடியின் முட்டாள்தனமான அபத்தமான வாதங்களை நியாயப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளந்தா பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கவே பாசிச கும்பலால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்.
இந்நிலையில், தற்போது சங்க பரிவார கும்பலை சேர்ந்த பட்கர் மாற்றப்பட்டு புதிய வேந்தராக பனகரியா நியமிக்கப்பட்டுள்ளதால், நாளந்தா பல்கலைக்கழகம் காவிமயமாக்கப்படுவது தடுக்கப்படும் என்றோ பல்கலைக்கழகத்தில் காவிகளின் அட்டகாசம் குறையும் என்றோ பொருள் அல்ல. மாறாக காவிமயமாக்கல் மேலும் அதிகரிக்கவே செய்யும். அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று பின்னணி குறித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.
நாளந்தா பல்கலைக்கழகமானது 5-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை 750 ஆண்டுகளாக இயங்கி வந்தது. சீனப் பயணியும் தத்துவஞானியுமான ஹுயென் சாங் (Huyen Tsang) இப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் இடிபாடுகள் இன்றளவும் ஒரு சர்வதேச பாரம்பரியமிக்க பொக்கிஷமாக கருதப்படுகிறது.
பீகார் முதல்வராக 2005 ஆம் ஆண்டு நவம்பரில் நிதிஷ் குமார் பதவியேற்றபோது நாளந்தா பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆதரவைக் கோரினார். பின்னர், 2006-ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்யப்போவதாக நிதிஷ் குமார் அறிவித்தார். அப்போதைய மன்மோகன் சிங் அரசாங்கமும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், மற்றும் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல கல்வியாளர்கள் பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பீகார் சட்டமன்றம் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கத்திற்கான மசோதாவை நிறைவேற்றியது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் அதற்கான சட்டம் (The Nalanda University Act, 2010) இயற்றப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாளந்தா பல்கலைக்கழகம் 2010-ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
18 நாட்டு பிரதிநிதிகளின் ஏற்புடன் நிர்வாகக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அமர்த்தியா சென் பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரானார். தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீராம் கல்லூரியின் பேராசிரியரான கோபா சபர்வால் (Gopa Sabharwal) அதன் முதல் துணைவேந்தராக நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்டார். சீனா, ஜப்பான் மற்றும் இலங்கையிலிருந்து மாணவர்களையும் அறிஞர்களையும் இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் ஈர்த்தது.
2014-ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அராஜகம் தொடங்கியது. கோபா சபர்வால் தனது மகளின் நண்பர் என்ற காரணத்தால் அமர்த்தியா சென்-ஆல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்று சில ஊடகங்களைக் கொண்டு செய்திகள் பரப்பப்பட்டன. மேலும், சென் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன.
2015-ஆம் ஆண்டுடன் அமர்த்தியா சென்-இன் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 18 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய நிர்வாக குழு அவரை இரண்டாவது முறையாக வேந்தராக தேர்ந்தெடுத்தது. ஆனால், அரசியல் தலையீட்டின் காரணமாக தன்னால் வேந்தராக தொடர இயலவில்லை என்று கூறி அவர் பதவி விலகிவிட்டார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அவரை பதவி விலக வைத்துவிட்டது என்று கூறுவது இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!
பின்னர், சிங்கப்பூரின் புகழ்பெற்ற கல்வியாளரும் கல்வி அமைச்சருமான ஜார்ஜ் யோ (George Yeo) குடியரசு தலைவரால் வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் உத்தரவின் பேரில், செய்தித்தாள்கள் மற்றும் சேனல்கள் வெளிப்படையாக பல்கலைக்கழகத்தின் சுயேட்சை தன்மையை கேள்வி எழுப்பின. வேந்தர் யோ மூலம் கம்யூனிஸ்டுகள் பல்கலைக்கழகத்தை கட்டுப்படுத்துவதாக கட்டுரைகளை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து சென்-ஐ போலவே யோ-வும் அரசியல் தலையீடுகள் இருப்பதாக காரணம் கூறி பதவி விலகிவிட்டார்.
அடுத்ததாக, ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் விஜய் பட்கர் அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மூன்றாவது வேந்தராக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் பல்கலைக்கழகத்தை காவிமயம் ஆக்குவதற்கான நடவடிக்கைகள் வீச்சாக மேற்கொள்ளப்பட்டன. இவருக்கு அடுத்ததாகத்தான் அரவிந்த் பனகரியா தற்போது வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா மற்றும் டெல்லியைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பனகரியாவின் நியமனத்தை இந்துத்துவத்தின் பிடியை இறுக்கும் நடவடிக்கை என்று கூறுகின்றனர். பனகரியா குறித்து பொருளாதார நிபுணரும், பாட்னா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் என்.கே.சௌத்ரி கூறுகையில், “பனகரியா ஒரு வலதுசாரி; உலக அளவில் அறியப்பட்ட ஒரு பொருளாதார நிபுணர். அவர் பட்கர் போன்றவர் அல்ல. ஆனால், பனகரியா மோடியின் நற்பெயருக்கு உரித்தானவர்; மோடி விரும்புவதை செய்து முடிப்பவர். பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்தி காட்டுவதற்கு பனகரியா தேவைப்படுகிறார்” என்று கூறினார்.
“பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது இருந்த தொலைநோக்கை நிறைவுசெய்ய முயற்சிப்பதைவிட, பட்கர் செய்ததை நிலைநிறுத்தும் வேலையையே பனகரியா செய்வார் என்பதை சொல்லத் தேவையில்லை,” என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிப் பேராசிரியரும், ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி-யுமான மனோஜ் ஜா கூறுகிறார்.
ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த பட்கரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமித்து மேற்கொள்ளப்பட்ட காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மனித முகம் கொடுப்பதற்காகவே தற்போது பனகரியா வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி ஆயோக்கில் மோடியின் செல்லப் பிள்ளையாக செயல்பட்ட பனகரியாவின் செயல்பாடுகள் நாளந்தா பல்கலைக்கழகத்தை மேலும் காவிமயமாக்கும் திசையிலேயே இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். வேந்தர் – துணைவேந்தர்களைக் கொண்டு ஜே.என்.யூ உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களையும் பாசிஸ்டுகள் காவிமயமாக்கி வருகின்றனர். அந்த வகையில், நாளந்தா பல்கலைக்கழகமும் விரைந்து காவிமயமாகி வருகிறது.
பொம்மி
நன்றி: தி வயர்