கடந்த 12 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் “இந்திய அரசலமைப்பு சட்டமும் ஜனநாயகமும்” (Indian Constitution & Education) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கம் ஒடிசா மாநிலத்தில் செயல்படும் “சிட்டிசன்ஸ் மன்றம்” (Citizens Forum) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் நாயக் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிமை சமூக அமைப்பினர், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பிரீட்டோ, கணேசன் ஆகிய இருவர் இதில் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கத்தில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சுராஜித் மஜும்தார் துவக்க உரையாற்றினார். அவர் இந்திய அரசமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்தி பேசிக் கொண்டிருந்த பொழுது. அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் பேராசிரியர் பேசுவதற்கு குறுக்கீடு செய்து கொண்டிருந்தார். உடனே அவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீப் கேள்வி கேட்பதற்கு என்று நேரம் ஒதுக்கப்படும் நீங்கள் அப்பொழுது உங்கள் கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருந்திருக்கிறார்.
மேலும் இருவர் அவருடன் சேர்ந்து பேராசிரியர் சுராஜித் பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி வந்து பல்கலைக்கழகங்களில் இது போன்று கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தாங்கள் ஆர்.எஸ்.எஸ் இன் மாணவர் படையான ஏ.பி.வி.பி (ABVP) நிர்வாகி என்றும் கூறியிருக்கிறனர்.
படிக்க: கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!
சிட்டிசன்ஸ் மன்றத்தின் நிர்வாகி பிரதீப் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திரா ஜெனா ஆகிய இருவரையும் ஏ.பி.வி.பி குண்டர்கள் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் இதை தடுக்கச் சென்ற மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பிரீட்டோவையும் தாக்கி இருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி யின் குண்டர்கள் நடத்திய தாக்குதல்களை மனித உரிமை செயல்பாட்டாளர் கணேசன் அவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார் இதைப் பார்த்த ஏ.பி.வி.பி குண்டர்கள் அவரது செல்போனை பிடுங்கி அவரை தாக்க துரத்தி சென்றிருக்கின்றனர்.
***
இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 – ஆம் தேதி ஐஐடி பாம்பே-வில் (IIT-B) இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற இருந்தது
அக்கருத்தரங்கத்தில் “நவீன இந்தியாவில் இடதுசாரிகளின் கலாச்சாரங்கள்” (Cultures of the Political Left in Modern India) என்ற தலைப்பில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. இது உலகத் தர பல்கலைக்கழக குழுவிடம் (Institute of Eminence Cell) நிதி பெற்று நடத்தப்பட இருந்தது – அதாவது இந்திய அரசின் நிதி கொண்டு நடத்தப்பட இருந்தது.
இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வு மாணவர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தனர்.
இக்கருத்தரங்கையொட்டி 150 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; அதில் 15 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதில், மார்க்சிய – லெனினியத்திற்கும் நாட்டுப்புற கலாச்சாரத்திற்கும் உள்ள உறவு, 1889 ஆம் ஆண்டில் துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஜோதிபா பூலே-வின் செய்தித்தாளின் பங்கு போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு டிசம்பர் 11 அன்று வெளிவந்தது.
இக்கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்ட பொழுது கருத்து கூறிய ஐஐடி பாம்பேவின் இயக்குனர் “உலகத் தர பல்கலைக்கழக நிதியிலிருந்து இக்கருத்தரங்குக்கு நிதி அளிக்க முடியாது. இதன் தலைப்பு அதற்கு உட்பட்டதில்லை” என்று கூறினார். உலகத் தர பல்கலைக்கழகம் (Institute of Eminence) என்பது பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி வழங்கப்படும்.
சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (Legal Rights Observatory – LRO) என்ற வலதுசாரி கூட்டமைப்பு இந்த கருத்தரங்கை கடுமையாக விமர்சனம் செய்து, இதை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது.
அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் டேக் (tag) செய்து, “ஐஐடி-க்கள் என்பன தொழில்நுட்ப கல்விக்கும் ஆராய்ச்சிக்குமானவை. இடதுசாரி / கம்யூனிச சித்தாந்தங்களுக்கு நிதியை வீணாக்குவது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டது.
படிக்க: ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
ஐஐடி பாம்பேவில் இப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, அது தொடர்பான கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கருத்தரங்கின் தலைப்பிலிருந்து என்.ஆர்.சி (NRC) என்ற வார்த்தையை நீக்கிய பிறகு அனுமதி வழங்கப்பட்டது.
2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பல முறை இது போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டில், “காஷ்மீர்: இந்திய தேசியத்தின் இருண்ட பக்கம்” (Kashmir: The Blind Side of Indian Nationalism) என்ற விரிவுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, 2019 ஆம் ஆண்டில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சரத்து 370 ரத்து’ (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து) குறித்தான விவாதத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் அந்த விவாதத்தை பூங்காவில் நடத்திக் கொண்டனர்.
***
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் “இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை மாணவர்கள் திரையிட இருந்த போது பல்கலைக்கழக நிர்வாகம் மின்தடை செய்து ஆவணப்படத்தை திரையிடவிடாமல் செய்தது. ஆனால் மாணவர்கள் அதையும் மீறி தன்னுடைய செல்போனிலும் மடிக்கணினியிலும் அவ்வாவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ்-யின் மாணவ குண்டர்படையான ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது கற்களை எறிந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியது.
இன்றைய மாணவர்களும் நாளைய இளைஞர்களும் பல விஷயங்களையும் அரசியலையும் கற்றுக் கொள்ளும் இடம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்தான்.
ஆனால் இன்றைக்கு மாணவர்கள் அரசு கொண்டுவரும் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் குறித்து விவாதங்களை முன்னெடுத்தாலோ அல்லது கருத்தரங்குகளை நடத்தினாலோ அதற்கு தடை விதிக்கப்படுகிறது. அதைமீறி மாணவர்கள் நிகழ்வுகளை நடத்தினால் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற கலவரக்காரர்களால் தாக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது.
இன்னும் எத்தனை நாள்தான் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி போன்ற குண்டர்களிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கப் போகிறோம்!
மாணவர்களே! இளைஞர்களே! அமைதி காத்தது போதும்; வாருங்கள் அமைப்பாய்த் திரள்வோம்!
இன்பா