ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!

0

ஐடி பாம்பே-வில் (IIT-B) டிசம்பர் 12 அன்று நடைபெற இருந்த இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு, கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவையடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

“நவீன இந்தியாவில் இடதுசாரிகளின் கலாச்சாரங்கள்” (Cultures of the Political Left in Modern India) என்ற தலைப்பில் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இரு நாள் கருத்தரங்கு நடைபெற இருந்தது. இது உலகத் தர பல்கலைக்கழக குழுவிடம் (Institute of Eminence Cell) நிதி பெற்று நடத்தப்பட இருந்தது – அதாவது இந்திய அரசின் நிதி கொண்டு நடத்தப்பட இருந்தது. திடீரென ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பானது டிசம்பர் 11 அதிகாலை 1 மணியளவில் வெளிவந்தது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஆய்வு மாணவர்களும் மூத்த பேராசிரியர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள இருந்தனர். திடீர் ரத்து என்பது கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது.

இக்கருத்தரங்கையொட்டி 150 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; அதில் 15 தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அதில், மார்க்சிய – லெனினியத்திற்கும் நாட்டுப்புற கலாச்சாரத்திற்கும் உள்ள உறவு, 1889 ஆம் ஆண்டில் துப்புரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் ஜோதிபா பூலே-வின் செய்தித்தாளின் பங்கு போன்ற தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.


படிக்க: கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!


இக்கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது குறித்து ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்டபோது, “ஐஐடி பாம்பேவின் இயக்குனரிடமிருந்து, தவிர்க்க முடியாத காரணங்களால் இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக வழிகாட்டுதல் வந்தது. இதனை தொடர்ந்து இந்நிகழ்வை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டது” என்று கூறினர்.

இது குறித்து கருத்து கூறிய ஐஐடி பாம்பேவின் இயக்குனர் “உலகத் தர பல்கலைக்கழக நிதியிலிருந்து இக்கருத்தரங்குக்கு நிதி அளிக்க முடியாது. இதன் தலைப்பு அதற்கு உட்பட்டதில்லை” என்று கூறினார். உலகத் தர பல்கலைக்கழகம் (Institute of Eminence) என்பது பல்கலைக்கழக மானியக் குழுவால் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பொதுத்துறை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி வழங்கப்படும்.

சட்ட உரிமைகள் கண்காணிப்பகம் (Legal Rights Observatory – LRO) என்ற வலதுசாரி கூட்டமைப்பு இந்த கருத்தரங்கை கடுமையாக விமர்சனம் செய்து, இதை ரத்து செய்யுமாறு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் டேக் (tag) செய்து, “ஐஐடி-க்கள் என்பன தொழில்நுட்ப கல்விக்கும் ஆராய்ச்சிக்குமானவை. இடதுசாரி / கம்யூனிச சித்தாந்தங்களுக்கு நிதியை வீணாக்குவது ஒரு கிரிமினல் குற்றமாகும். இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டது.

ஐஐடி பாம்பேவில் இப்படி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவது இது முதல் முறையல்ல. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, அது தொடர்பான கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், கருத்தரங்கின் தலைப்பிலிருந்து என்.ஆர்.சி (NRC) என்ற வார்த்தையை நீக்கிய பிறகு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோல பலமுறை, அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டில், “காஷ்மீர்: இந்திய தேசியத்தின் இருண்ட பக்கம்” (Kashmir: The Blind Side of Indian Nationalism) என்ற விரிவுரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, 2019 ஆம் ஆண்டில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சரத்து 370 ரத்து’ (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து) குறித்தான விவாதத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், மாணவர்கள் அந்த விவாதத்தை பூங்காவில் நடத்திக் கொண்டனர்.


படிக்க: லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !


இவ்வாறு காவிகளின் தாக்குதல் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் சாய்பாபாவின் விடுதலையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்த மாணவர்கள் காவி பாசிஸ்டுகளின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யால் தாக்கப்பட்டனர். இந்துத்துவ அமைப்புகளை விமர்சனம் செய்யும் ஒரு புத்தகம் இந்தூர் சட்டக் கல்லூரி நூலகத்தில் இருந்ததை காரணம் காட்டி, கல்லூரி முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அப்புத்தகத்தின் ஆசிரியர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஏ.பி.வி.பி குண்டர்கள் கலகம் செய்தனர்.

காவி குண்டர்களின் அடாவடித்தனங்கள் ஒருபுறம் இருக்க, பல்கலைக்கழக / கல்லூரி நிர்வாகங்களே இடதுசாரி இயக்கங்கள் குறித்து அல்லது அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து நடத்தப்படும் விரிவுரைகள், கருத்தரங்குகள், விவாதங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கின்றன. இப்படி கருத்து சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்கதை ஆகிவிட்டது.

பொம்மி
செய்தி ஆதாரம்: வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க