கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!

2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு ஏபிவிபி தங்குதடையின்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது

0

டிசம்பர் 1 அன்று பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்ய வலியுறுத்தி டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவ குண்டர் படையான ஏ.பி.வி.பி தாக்குதல் நடத்தியுள்ளது.

அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சார இயக்கம் (Campaign Against State Repression) என்ற 36 அமைப்புகளின் கூட்டு இயக்கம் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. டிசம்பர் 1 அன்று அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏ.பி.வி.பி குண்டர்கள் செங்கல், லத்தி, கம்பு போன்றவற்றைக் கொண்டு அம்மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த பகத்சிங் சத்ரா ஏக்தா மன்ச் (Bhagat Singh Chatra Ekta Manch) என்ற மாணவர் அமைப்பின் தலைவர் ரவீந்தர் சிங் கூறியதாவது: “சுமார் 10 – 12 மாணவர்கள் இணைந்து பேராசிரியர் சாய்பாபாவுக்கு நீதி வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தோம். அங்கு திடீரென வந்த 40 – 50 ஏ.பி.வி.பி மாணவர்கள் லத்தியை வைத்து தாக்கத் தொடங்கினர். ராஜ்வீர் என்ற எனது நண்பர் செங்கல்லால் தாக்கப்பட்டார்”.

படிக்க : ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

காயமடைந்த மாணவர்கள் அருகாமையில் உள்ள இந்து ராவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையை சூழ்ந்து கொண்ட ஏ.பி.வி.பி குண்டர்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர். போலீசுத்துறையின் முன்பாகவே, சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் மருத்துவமனைக்கு வெளியில் வந்தால் மீண்டும் தாக்குவோம் என்று கூறியுள்ளனர். ஏ.பி.வி.பி குண்டர்கள் சிலர் ஆம் ஆத்மி கட்சியினர் போல் தோற்றம் அளிப்பதற்காக அக்கட்சிக் கொடியை தங்கள் முட்டிகளில் கட்டி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 5, 2020 அன்று இதே போன்றதொரு தாக்குதல் முகமூடி அணிந்த ஏ.பி.வி.பி குண்டர்களால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. அதில் ஈடுபட்ட பலர் அடையாளம் காணப்பட்டும் தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.

***

மத்திய பிரதேச மாநில தலைநகரான இந்தூரில் உள்ள ‘அரசு புதிய சட்டக் கல்லூரி’யில் டிசம்பர் 1 அன்று ஏ.பி.வி.பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஆறு ஆசிரியர்கள் மீது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியைக் கொண்டு விசாரணை நடைபெற உள்ளது. இதனால் 5 நாட்களுக்கு அவர்கள் வகுப்பெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 ஆசிரியர்களில் 4 பேர் முஸ்லிம்கள். இந்த ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமைகளில் நமாஸ் செய்துவிட்டு வகுப்புகள் எடுப்பதில்லை என்றும், அரசு மற்றும் ராணுவத்தை பற்றிய எதிர்மறை எண்ணங்களை மாணவர் மத்தியில் விதைப்பதாகவும், மத அடிப்படைவாதத்தை வளர்ப்பதாகவும், லவ் ஜிஹாத், அசைவ உணவு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் ஏ.பி.வி.பி மாணவ குண்டர் படையின் தலைவர் தீபேந்திர தாக்கூர் அக்கல்லூரி முதல்வர் இனாமூர் ரஹ்மானிடம் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அக்கல்லூரி முதல்வர் ரஹ்மான், “புகாரில் கூறப்பட்டிருப்பது போல இக்கல்லூரியில் சூழல் இல்லை. இருப்பினும் ஏபிவிபி-யின் புகார் முக்கியமானதாக கருதப்பட வேண்டியது” என்று முரண் நகையுடன் பேசியுள்ளார்.

படிக்க : லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !

கல்வி நிலையங்களில் காவி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் கரங்கள் எவ்வளவு தூரம் நீண்டுள்ளது என்பதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன. 2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு காவி கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர் படை தங்குதடையின்றி கல்லூரிகள், மத்திய, மாநில பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது. இந்த காவி குண்டர் படையை எதிர்த்து மாணவர்கள்,பேராசிரியர்கள், பெற்றோர்கள் அணிதிரளவேண்டியது அவசியமாகிறது.

பொம்மி
நன்றி:
தி வயர், சப்ரங்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க