லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் !

உ.பி முழுவதும் காவி பாசிசம் நிறைந்துள்ள நிலையில் கல்வி நிறுவனங்களிலும் தனது குண்டர் படையை அதிகரித்து, சாந்தன் போன்ற தலித் சிறுபான்மை பேராசிரியர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக் கும்பல்.

0

டந்த மே 10 அன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ரவிகாந்த் சாந்தன், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) குண்டர்களால் தாக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு எதிராக போலீசில் புகாரளிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறார் பேராசிரியர். ஆனால், அவரை போலீசு வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறது.

லக்னோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ரவிகாந்த் சாந்தன், ஞானவாபி மசூதி – கான்ஷி விஸ்வநாத் மந்திர் பிரச்சினை பற்றிய விவாதத்தின் போது, படாபி சீதாராமையாவின் “இறகுகள் மற்றும் கற்கள்” என்ற கதையை விளக்கினார். சாந்தன் மாணவர்களுக்கு அப்புத்தகத்தின் குறிப்பைக் கொடுத்தார். அதில் அவர் ஞானவாபி மசூதி மற்றும் கன்ஷி விஸ்வநாத் மந்திரின் வரலாற்றை மேற்கோள் காட்டினார். இது வலதுசாரி மாணவர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால், ஏ.பி.வி.பி.யை சார்ந்த மாணவர்கள் மே 10 அன்று பேராசிரியரின் விவாதம் தொடர்பான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பல்கலைக் கழக வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினர். மேலும், மதியம் லக்னோ பல்கலைக் கழகத்திலிருந்து ஏ.பி.வி.பி மாணவர்கள் சிலர் வெளியில் இருந்து வந்த குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு சாந்தனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியாக என்ற அக்கும்பல், தாசில்தார் அலுவலகத்தை அடைந்ததும், அவர்களிடம் பேச வந்த பேராசிரியர் சாந்தனை தாக்கியுள்ளனர்.

பல்கலைக் கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி குண்டர்களால் பேராசிரியர் தாக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு பிறகு, வாரணாசியின் ஞானவாபி மசூதியைச் சுற்றி நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து ஏ.பி.வி.பி கொடுத்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சாந்தன் மீதே போலீசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

படிக்க :

சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !

இந்தி துறையின் பேராசிரியரான சாந்தன், தன் மீதான ஏ.பி.வி.பி குண்டர்களின் தாக்குதல் குறித்து கையால் எழுதப்பட்ட புகார் கடிதத்தை உள்ளூர் போலீசு நிலையத்தில் கொடுத்தார். தன் குடும்பத்தினருக்கும் தனக்கும் அச்சுருத்தல்கள் வருவதாகவும், தான் ஒரு தலித் என்பதால் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாவதாகவும் கூறி, ஏ.பி.வி.பி மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேரின்மீது போலீசிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளார். பேராசிரியரின் புகாரின்மீது போலீசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. மாறாக பேராசிரியர் சாந்தனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

போலீஸ் கமிஷனர், பேராசிரிய சாந்தன் கொடுத்த புகாரில் சில பிழைகள் இருந்ததால் புகார் பதிவு செய்யவில்லை. பிழைகளை திருத்தம் செய்துவிட்டு பேராசிரியர் திரும்பி வந்ததும் புகாரை பதிவு செய்வது குறித்து போலீசுத்துறை பரிசீலிக்கும் என்று கூறினார். போலீசுத்துறையின் அணுகுமுறையால் மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றத்திற்குச் செல்வதாகவும் சாந்தன் கூறினார்.

ஏ.பி.வி.பி மாநிலக் குழு உறுப்பினர் அமன் துபே அளித்த புகாரின் பேரில், பேராசிரியர் மீது போலீசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் – 153-ஏ, 504, 505 (2) மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பிரிவு 66 (திருத்தம்) சட்டம் 2008 ஆகிய பிரிவுகளின்கீழ் பேராசிரியர் சாந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது போலீசு.

சந்தனுக்கு எதிராக புகார் அளித்த ஏ.பி.வி.பி தலைவர் அமன் துபே, “கான்ஷியில் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் செய்த குற்றங்களை மறைக்க முயன்ற பேராசிரியர் சாந்தனுக்கு எதிராக ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்துள்ளது”. ஒரு செய்தி இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் பேராசிரியர் இந்து மதகுருக்களை அவமதித்ததாகவும் துபே குற்றம் சாட்டினார்.

பேராசிரியரை தாக்கிய ஏ.பி.வி.பி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பேராசிரியர் சாந்தன் மீதே வழக்கு பதிவு செய்துள்ளது லக்னோவின் காவி போலீசு. அரசு அதிகாரத்தின் உதவியுடன் தனக்கு எதிரான கருத்துக்களை கூறினார் என்று ஓர் தலித் பேராசிரியர் பல்கலைக்கழகத்தில் இருக்கும் தனது குண்டர் படையான ஏபிவிபி மாணவர்களை வைத்தே தாக்குதல் தொடுக்கிறது காவிக்கும்பல்.

உ.பி முழுவதும் காவி பாசிசம் நிறைந்துள்ள நிலையில் தற்போது கல்வி நிறுவனங்களிலும் தனது குண்டர்படையை அதிகரித்து, சாந்தன் போன்ற தலித் சிறுபான்மை பேராசிரியர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது காவிக்கும்பல். இந்த காவிக் குண்டர்களிடமிருந்து சிறுபான்மை சமூகத்தை சார்ந்த மற்றும் முற்போக்கு பேராசிரியர்களை பாதுகாக்க வேண்டியதும், கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஊடுருவும் ஏ.பி.வி.பி காவிக்குண்டர் படைகளை அடித்து விரட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.


சந்துரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க