சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகும் பேராசிரியர் சாய்பாபா !

சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.

0
நாக்பூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனையில் இருக்கும் டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா, கழிப்பறை மற்றும் குளியல் அறைகளை கண்காணிக்கும் வகையில், சிறை நிர்வாகத்தால் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றாவிட்டால், இரண்டு நாட்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
மாவோயிஸ்ட் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் சாய்பாபாவுக்கு 2007-ம் ஆண்டு கட்சிரோலியில் உள்ள கீழ்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சாய்பாபாவின் மனைவி வசந்த குமாரி மற்றும் அவரது சகோதரர் ராமதேவுடு ஆகியோர், மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு மே 14 அன்று கடிதம் மூலம், இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு “அவருக்கு தனியுரிமையை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பத்தின் கடிதத்தின்படி, மே 10 அன்று சாய்பாபா அடைக்கப்பட்டுள்ள சிறையறைமுன் பரந்த கோணம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இது “கழிவறை இருக்கை, குளிக்கும் இடம் அனைத்தையும் உள்ளடக்கிய முழு அறையையும் படம் பிடிக்கும். எனவே, அவர் கழிவறையை பயன்படுத்த முடியாது. குளிக்க கூட முடியாது. ஏனெனில் கேமரா 24/7 மணி நேரமும் எல்லாவற்றையும் வீடியோ பதிவு செய்கிறது. பேரா. சாய்பாபாவின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் கேமராக்களினால் அவரது தனியுரிமை, வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவற்றை கேலி செய்கிறது சிறை நிர்வாகம்.
படிக்க :
கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!
பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரத அறிவிப்பு !
இந்நிலையில் அவர் கேமராவை அகற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி(இருதய நோய்), உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம், முதுகெலும்பில் பிரச்சினை, முன்புற உயிரணு நோய், கடுமையான கணைய அழற்சி மற்றும் மூளையில் நீர்க்கட்டி போன்ற நோய்களால் அவதிபடுகிறார் பேராசிரியர் சாய்பாபா.
சில நாட்களுக்கு முன், சாய்பாபாவின் வழக்கறிஞர் ஆகாஷ் சரோதே, பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஜாடி என்று கூறி அவரிடம் கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறினார். “நான் அவருக்கு பிளாஸ்டிக் பாட்டிலை தருவதற்கான அனுமதியை சிறை அதிகாரிகளிடம் பெற்றிருந்தேன், அதன் பிறகுதான் பாட்டிலை கொடுக்க சென்றேன். பேராசிரியருக்கு கண்ணாடி பாட்டிலை எடுத்துச் தண்ணீர் குடிக்க முடியாது, ஏனெனில் அது கனமானது மற்றும் தோள்களில் கடுமையான வலி ஏற்படுத்தும். ஆனால், வேறு உலோக பாட்டில்களும் சிறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை” என்றார்.
தலோஜா சிறையில் ஸ்டான் சுவாமிக்கு குழாய் அமைப்பு கொண்ட தண்ணீர் பாட்டிலை தரமறுத்தது போன்று, நாக்பூர் மத்திய சிறையும் சாய்பாபாவிற்கு தண்ணீர் பாட்டில் வழங்க மறுக்கிறது. மேலும், சிறை என்பதே மிகவும் கொடிய நடைமுறை அதில் உள்ள அறையில் சிசிடிவி கேமரா வைத்து உதவி செய்பவர்களை கண்காணிப்பதும், கழிவறை, குளியல் அறைகளை நேரடியாக கண்காணிப்பது பேராசிரியர் சாய் பாபாவின் தனியுரிமை மீதான தாக்குதல்களாகும். இது சிறைச்சாலை எனும் கொடூர கொட்டகைக்குள்ளும் சித்தரவதை செய்யும் ஓர் செயல்பாடு.
இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் முதலாளிகள் (கிரிமினல்கள்), போதை பொருள் விற்கும் கிரிமினல்கள், கொலை – கொள்ளை – பாலியல் வன்முறை – கலவரங்களை நடத்தும் காவி பயங்கரவாதிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும்போது, ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், புரட்சியாளர்களை சிறையிலடைக்கிறது, சித்திரவதை செய்கிறது, கொலைசெய்கிறது இந்த காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.
ஆகவே, சமூக செயல்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை ஒடுக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி வீழ்த்துவோம்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க