டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்கள் நேற்று (அக்டோபர் 12, 2024 அன்று) ஹைதராபாத்தில் உள்ள நிஜாமின் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மரணித்தார். அவருக்கு வயது 57.

ஒரு வாரத்திற்கு முன்பு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சாய்பாபா. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்கள் (post-operative complications) காரணமாக அக்டோபர் 11 மாலை ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார்.

சக்கர நாற்காலியிலிருந்த சாய்பாபா, மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார் என்று பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மகாராஷ்டிரா போலீசு, ஆந்திரப் பிரதேச போலீசு மற்றும் இந்திய உளவுத் துறை (Intelligence Bureau) ஆகியவற்றின் கூட்டுக் குழுவால் மே 19, 2014 அன்று டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து மார்ச் 7, 2024 அன்று விடுவிக்கப்படும் வரை அவர் நாக்பூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக “அண்டா சிறை”யில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டார். அவர் 3,799 நாட்கள் சிறையிலிருந்தார்.

சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்பு மார்ச் 8 அன்று செய்தியாளர் சந்திப்பில் சிறையில் தான் சந்தித்த சித்திரவதைகள் குறித்து சாய்பாபா கூறினார். “சக்கர நாற்காலி இல்லாமல் எட்டரை ஆண்டுகள் ஒரே அறையிலிருந்தேன். கழிவறையைப் பயன்படுத்துவது, குளிப்பது அல்லது ஒரு குவளை தண்ணீர் எடுப்பது கூட தினசரி போராட்டமாக இருந்தது. சிறையில் என்னைப் போன்றவர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) ஒரு சாய்வுதளம் கூட இல்லை” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


படிக்க: சிறை அதிகாரிகள் என்னை ஊனமுற்றவராக உணரச் செய்துவிட்டனர்: பேராசிரியர் சாய்பாபா


சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. அவரது மனைவி வாங்கிக் கொடுத்த மருந்துகள் கூட அவருக்கு முறையாகச் சென்று சேரவில்லை. அதைப் பெறுவதற்குக் கூட சாய்பாபா பத்து நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிரியார் ஸ்டான் சுவாமியைப் போலவே பேராசிரியர் சாய்பாபாவும் பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக பேராசிரியர் சாய்பாபா சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளியான அவரை மிருகத்தைப் போல் நடத்தியுள்ளனர். சிறையில் முறையான மருத்துவ உதவி மறுக்கப்பட்டதன் காரணமாகவே சாய்பாபாவின் உடல் நிலை இவ்வளவு மோசமடைந்து அவர் இவ்வளவு விரைவாக மரணத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளார்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க