பேராசிரியர் சாய்பாபா படுகொலையும் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையும் நம்மிடம் உணர்த்துவது என்ன?

பாசிசக் கும்பலுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் அச்ச உணர்வையும், சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல்களையும் இயல்புநிலையாக மாற்ற முயற்சிக்கிறது.

ன்னுடைய லாபவெறிக்காக இந்திய உழைக்கும் மக்களையும் இயற்கை வளங்களையும் சூறையாடிய ரத்தன் டாடாவின் மரணத்தை ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ரத்தன் டாடா மரணித்த அதே நாளில்தான், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கடுத்து மூன்று நாட்களில், அக்டோபர் 12-ஆம் தேதி “ஊபா” எனும் கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பத்தாண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா மரணமடைந்தார். ஆனால், ரத்தன் டாடாவின் சொத்தில், அவரின் வளர்ப்பு நாய்க்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு குறித்து மும்முரமாக செய்தி வெளியிடும் ஊடகங்கள், இவ்விரு சம்பவங்கள் குறித்தும் வாயை திறக்கவில்லை.

ஸ்டான் சுவாமி, சாய்பாபா தொடரும் பாசிச மோடி அரசின் படுகொலைகள்

கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை எதிர்த்து செயல்பட்டார் என்பதற்காக பேராசிரியர் சாய்பாபா 2014-ஆம் ஆண்டு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகப் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாசிச மோடி அரசால், சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா

90 சதவிகிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபா, அரசுக்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்காகவே வடிவமைக்கப்பட்ட “அண்டா சிறையில்” (முட்டை வடிவிலான) அடைக்கப்பட்டு ஈவிரக்கமின்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு பாசிச மோடி அரசால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிந்துரைத்த சிகிச்சைகளும் மருந்துகளும் அவருக்கு மறுக்கப்பட்டது. சிறையில் கொரோனா மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும் உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவரது உடலின் இடது பக்கம் செயலிழந்த போதும் ஒன்பது மாதங்கள் கழித்தே சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியால் துடிக்கும் போதும் உரிய சிகிச்சை அளிக்காமல் வலி நிவாரண மாத்திரைகளை வழங்கி அவரது உடல் உறுப்புகளை பாதிப்படைய வைத்தது சிறை நிர்வாகம்.

மேலும், சாய்பாபாவிற்கு அவருடைய தாயாரின் இறப்பிற்கு செல்வதற்கு கூட பிணை வழங்கப்படவில்லை. 2022-இல் மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று விடுதலை செய்தபோது, உச்சநீதிமன்றம் ஒருநாள் கூட அவரை வெளியில் விட அனுமதிக்காமல் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக ரத்துச் செய்தது.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் சாய்பாபா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சாய்பாபா, “நான் சிறைக்குச் சென்றபோது, எனது இயலாமையைத் தவிர வேறு எந்த நோயும் இல்லை. இப்போது, என் இதயம் 55 சதவிகிதம் மட்டுமே செயல்படுகிறது. மேலும், நான் தசை சிக்கல்களை எதிர்கொள்கிறேன். எனது கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. எனது வலது கை ஓரளவுதான் செயல்படுகிறது. என் மருத்துவர் எனக்கு பல அறுவை சிகிச்சைகள் தேவை என்று கூறுகிறார்” என உடல்ரீதியாக தான் எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அம்பலப்படுத்தியிருந்தார்.

பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான பாதிரியாரும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் ஸ்வாமியை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி படுகொலை செய்ததைப் போலவே, சாய்பாபாவையும் படுகொலை செய்துள்ளது பாசிச மோடி அரசு. ஸ்டான் ஸ்வாமி சிறையிலேயே மரணமடைந்தார்; சாய்பாபா சிறையில் இருந்து விடுதலையாகிய ஏழு மாதங்களில் மரணமடைந்துள்ளார்.

கொலை குற்றவாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பாசிஸ்ட்டுகள்

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றமானது கௌரி லங்கேஷை படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் எட்டு பேரை பிணையில் விடுதலை செய்தது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் இதுவரை 16 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காவி குண்டர்கள்தான் கௌரி லங்கேஷை படுகொலை செய்தனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருந்த போதிலும் விசாரணையை நடத்தாமல் திட்டமிட்டு இழுத்தடித்து, தற்போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக் காரணம்காட்டி பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

மேலும், அக்டோபர் 11-ஆம் தேதி பிணையில் வெளிவந்த குற்றவாளிகள் பரசுராம் வாக்மோர், மனோகர் யாதவே ஆகிய இருவரையும் ஸ்ரீராம் சேனை உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் “பாரத் மாதா கி ஜே” என்று கூச்சலிட்டும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்றுள்ளனர்.

இதுபோன்ற பயங்கரவாதிகளை கொண்டாடுவதை காவி கும்பல், ஒரு வழக்கமாக மாற்றிவருகிறது. பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளையும் காவி கும்பல் இவ்வாறுதான் கொண்டாடியது. இதன்மூலம், பாசிசக் கும்பலுக்கு எதிராக குரலெழுப்பும் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் மத்தியில் அச்ச உணர்வையும், சிறுபான்மையினர் மீதான பாசிசத் தாக்குதல்களையும் இயல்புநிலையாக மாற்ற முயற்சிக்கிறது.

000

கௌரி லங்கேஷை படுகொலை செய்த குற்றாவாளிகளுக்கு பிணை வழங்கியது குறித்து பேசிய ஆர்வலர் சிவசுந்தர், “கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணை முடியும்வரை சிறையில் இருக்கக் கூடாது என்று சொல்வது சரிதான். பிரச்சினை என்னவென்றால், இந்தக் கொள்கை மிகவும் பாரபட்சமாக செயல்படுத்தப்படுகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காவி பயங்கரவாதிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்

 

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பா.ஜ.க-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரலெழுப்பும் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளார்களை பொய்வழக்குகளில் சிறையிலடைத்து பிணை கூட வழங்காமல் சித்திரவதை செய்வதும், பாலியல் வன்முறை, சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் காவிக் குண்டர்களை நிரபராதி என்று விடுவிப்பதும் பிணை வழங்குவதும் ஒரு போக்காக மாறியுள்ளது.

ஒருபுறம் பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 11 குற்றவாளிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்; மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு பிணை வழங்கப்படுகிறது; ஹரியானா தேர்தலையொட்டி பா.ஜ.க-விற்கு பிரச்சாரம் செய்வதற்காக, கொலை மற்றும் பாலியல் வன்முறை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங் பிணையில் விடுதலை செய்யப்படுகிறான்.

ஆனால், இன்னொருபுறம் பாசிச மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் எந்தவித விசாரணையுமின்றி, பிணையும் வழங்கப்படாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; பீமா கொரேகான் வழக்கில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 16 செயற்பாட்டாளர்கள் மோடி அரசால் திட்டமிட்டு புனையப்பட்ட பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை ஏதுமின்றி ஐந்தாண்டுகளாக சிறையில் சித்திரவதைக்குள்ளாகி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்தும்டே உள்ளிட்ட ஆறு பேருக்கு பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணை வழங்கப்பட்டது. 84 வயதான ஸ்டான் ஸ்வாமி இறுதிவரை பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கூட பீமா கொரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 பேர் தங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேசமயம், பாசிசக் கும்பலின் இந்த அபாயகரமான போக்கிற்கு எதிராக பெரியளவில் சமூகத்தில் எதிர்ப்புகள் எழுவதில்லை என்பதுதான் இன்னும் ஆபத்தானதாக உள்ளது.

2017-ஆம் ஆண்டு கர்நாடகாவில், கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டபோது நாடுமுழுவதும் அதிர்வலை உருவானது. சர்வதேச முதலாளித்துவ பத்திரிகைகள் இப்படுகொலையை கண்டித்து எழுதின. கௌரி லங்கேஷ் படுகொலையை எதிர்த்து இளைஞர்கள் பலர் அரசியல் இயக்கத்திற்குள் நுழைந்தனர்.

ஆனால், இன்றோ “கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது பற்றி கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சிகளும் பேசவில்லை. செய்தி ஊடகங்களும் அதைப்பற்றி விவாதிக்காமல், மூடா, வால்மீகி ஊழல் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலையானது மக்களில் பலருக்கும் தெரியாது” என ஆதங்கத்துடன் கூறுகிறார் கர்நாடகப் பத்திரிகையாளரான அசோக்.

அதேபோல், பழங்குடி மக்களை கொன்றொழித்த டாடா-விற்கு இரங்கல் “ஸ்டேட்டஸ்” போடும் இளைஞர்கள், பழங்குடி மக்களுக்காக போராடிய பேராசிரியர் சாய்பாபாவின் மரணம் குறித்து தெரியவில்லை என்று சொல்வது அவமானகரமானதும் அதேநேரத்தில் ஆபத்தானதுமாகும்.

ஏனெனில், பாசிசம் மேலோங்கிவரும் இக்காலகட்டத்தில் இச்செயற்பாட்டளர்கள், அறிவுஜீவிகளின் தேவை அதிகமாக உள்ளது. இத்தகைய செயற்பாட்டாளர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்ப்பது பாசிச எதிர்ப்பு சக்திகளின் முக்கியமான பணியாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் பாசிச எதிர்ப்புணர்வை வளர்த்தெடுப்பதிலும் இது முக்கிய பங்காற்றும்.

அதேபோல், மோடி அரசால் பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதும் மோடி அரசால் விடுதலை செய்யப்படும் இந்துமதவெறி குண்டர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்றுத்தருவதும் நாம் எந்தளவிற்கு களப்போராட்டங்களை கட்டியமைக்கிறோம் என்பதில்தான் அடங்கியுள்ளது. எனவே, பாசிசத்தை வீழ்த்த செயல்பட்டுவரும் ஜனநாயக சக்திகள் மேற்கூறிய கடமையை நிறைவேற்றும் வகையில் களப்போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்; அப்போராட்டங்கள் கொடிய பாசிச கருப்புச் சட்டமான ஊபாவை ரத்து செய்யும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலை தடை செய்யும் வகையிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க