கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி பத்திரிக்கையாளரும் பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.
நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து அக்டோபர் 11 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான பரசுராம் வாக்மோர், மனோஹர் யாதவே ஆகிய இருவரும் விஜயபுராவில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியும் சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலையும் அணிவித்தனர். அப்போது அவர்களுக்கு ஸ்ரீராம் சேனை உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் “பாரத் மாதா கி ஜே” என்று முழங்கியும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும், பிணையில் வெளிவந்துள்ள இருவருக்கும் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் இந்துத்துவ அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இன்று விஜயதசமி எங்களுக்கு முக்கியமான நாள். கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக அநியாயமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகியோரை நாங்கள் வரவேற்கிறோம். உண்மையான குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்து சார்பு தொழிலாளர்கள் என்பதால் இருவரும் குறிவைக்கப்பட்டனர்” என்று நாகூசாமல் பேசியுள்ளார்.
மேலும், இந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம் சேனையின் தலைவர் நீல்கந்தா கண்டாகல் குற்றவாளிகள் இருவரையும் குறிப்பிட்டு, “இந்த கொலைக்கும் ஜாமீனில் வெளிவந்துள்ள இருவருக்கும் எவ்வித தொடர்புமில்லை” என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
படிக்க: கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
ஆனால், இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களே கௌரி லங்கேஷை 2017 ஆம் ஆண்டில் சுட்டுப் படுகொலை செய்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்து மதவெறியர்களுக்கு எதிராக உறுதியாகப் போராடி வந்த கௌரி லங்கேஷிற்கு அவர் கொல்லப்படுவதற்கு முன்னால் இந்து மதவெறியர்களிடம் இருந்து பல முறை மிரட்டல்கள் வந்திருக்கின்றன என்று அவருடைய சகோதரியும் தாயாரும் தெரிவித்திருந்ததே அதற்குச் சான்றாகும். மேலும் அவர் படுகொலை செய்யப்பட்ட போது அவரது மரணத்தை இந்து மதவெறியர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாகக் கொண்டாடினார்கள்.
கௌரி லங்கேஷை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் படுகொலை செய்துள்ளனர் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளும் நிரபராதி என்று கூறப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நான்கு பேருக்குப் பிணை வழங்கியுள்ள கர்நாடக நீதிமன்றம், 2024 செப்டம்பர் 4 ஆம் தேதி மேலும் நான்கு பேருக்குப் பிணை வழங்கியுள்ளது. தற்போது மேலும் 8 பேருக்குப் பிணை வழங்கியுள்ளதன் மூலம் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 18 பேரில் 16 பேருக்கு இதுவரை பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடியின் பத்தாண்டுக்கால பாசிச ஆட்சியில் சமூக செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்தவர்களும் முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்தவர்களும் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையில் பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொடூரமாக படுகொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது; தற்போது, 2013 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசம் மூசாபர் நகர் கலவரத்தில் 600-க்கும் மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை ஆதாரங்கள் இல்லையென்று கடந்த வாரம் மூசாபர் நகர் உள்ளூர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது உள்ளிட்ட பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன.
கௌரி லங்கேஷின் நண்பரும் நடிகருமான பிரகாஷ் ராஜும் இந்த அடிப்படையிலிருந்தே “மோடி ஆட்சியில் பாலியல் குற்றவாளிகளும், கொலைக் குற்றவாளிகளும் விடுதலையாவது சட்டமாகிவிட்டது” என்று தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மோடியின் ஆட்சியில் ஒருபுறம் இந்துமதவெறியர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். மறுபுறம், பாசிச சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் போராடிவரும் ஸ்டேன் சுவாமி, சாய்பாபா போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய்க் குற்றஞ்சாட்டி தேசத்துரோக வழக்குகளைப் பதிவுசெய்து சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram