ஆர்வலர் கோவிந்த் பன்சாரே கடந்த 2016, பிப்ரவரி 16 அன்று மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் காலை நடைப்பயணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் வழியில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் கொண்ட கும்பலால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பன்சாரே கொலை வழக்கு குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் விசாரணையை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியது. “விசாரணை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியம், தவறினால், குற்றம் செய்தவர்கள் அச்சமடையமாட்டார்கள்” என்று அது கூறியது.
“பன்சாரேவின் குடும்பத்தினர் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த நீதிமன்றம் 2016 முதல் விசாரணையை கண்காணித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எஸ்.ஐ.டி தொடர்ந்து அறிக்கைகளை சமர்ப்பித்து வருகிறது. ஆனால், இன்று வரை அவர்கள் தலைமறைவாக உள்ளனர்” என்றது நீதிமன்றம்.
படிக்க : இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
பன்சாரே பிப்ரவரி 16, 2015 அன்று கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே சுடப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி, மகாராஷ்டிரா அரசு, மூத்த வழக்கறிஞர் அசோக் முண்டர்கி மூலம், மாநிலத்தின் சிறப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில், விசாரணையை எஸ்ஐடியிடம் இருந்து ஏடிஎஸ்-க்கு மாற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று கூறியது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மருமகள் மேகா பன்சாரே கடந்த ஜூலை 7-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தனது மனுவில் கோரியிருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்றுவரை வழக்கை விசாரித்து வந்த மாநில சிஐடியின் சில அதிகாரிகள் ஏடிஎஸ்-க்கு உதவுவார்கள் என்று கூறியது. குழு விரைவில் அமைக்கப்படும். அதன் விசாரணையில் மகாராஷ்டிரா ஏடிஎஸ்க்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு எஸ்ஐடி மற்றும் சிபிஐயிடம் கேட்டுக் கொண்டது.
ஜூன் 2019 இல், கோவிந்த் பன்சாரே கொலை தொடர்பாக காவி பயங்கரவாதி சரத் கலாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். தபோல்கர் மற்றும் லங்கேஷ் கொலையிலும் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேகா பன்சாரே சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபய் நேவாகி, ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த விசாரணையில், கொலைகளுக்கு பின்னணியில் உள்ள தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். பன்சாரே, 2013ல் மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆர்வலர் நரேந்திர தபோல்கர், 2015ல் கல்வியாளரும் ஆர்வலருமான எம்.எம்.கல்புர்கி, 2017ல் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் உள்ளிட்ட பிற ஆர்வலர்களின் கொலைகளில் பெரிய சதி இருப்பதாக பன்சாரேயின் உறவினர்கள் தரப்பில் வழக்கறிஞர் அபய் நேவாகி வாதிட்டார்.
படிக்க : மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?
பன்சாரே கொலை வழக்கை வேண்டுமென்ற கிடப்பில் போட்டுவருகிறது போலீசுத்துறை. முழுவிசாரணையும் நடத்தப்படுமானால் பெரிய சதி திட்டங்கள் அம்பலமாகும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முற்போக்காளர்களை, சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்கும் காவி பயங்கரவாதிகள் இங்கு சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உழைக்கும் மக்களுக்கான குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்; அரசால் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசையும், அதன் உதவியுடன் உளவி வரும் காவி பயங்கரவாதிகளையும் களத்தில் இறங்கி வீழ்த்துவது அவசியமாகிறது.
புகழ்