இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே

11
28

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்சாரே 82 வயதானவர். பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து சுடப்பட்டார் பன்சாரே. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் 20-ம் தேதி உரிரிழந்தார். அவரது மனைவி உமா பன்சாரே காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

கோவிந்த் பன்சாரே
கோவிந்த் பன்சாரே

கோவிந்த் பன்சாரே கொல்லப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு சிவாஜி பல்கலைக்கழகத்தில் கோட்சேவின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை குறிப்பிட்டு, “கோட்சேயை புகழும் மனநிலை ஆபத்தானது” என்று பேசியிருந்தார். சிவசேனை மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் போட்டி போட்டுக் கொண்டு கோட்சேவை புகழ்வது மகாராஷ்டிரத்தில் அன்றாட செய்திகள். “சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்பின் நடவடிக்கைகளை காவல்துறை கண்காணிக்க வேண்டும்” என்று எழுதியதற்காக பன்சாரே ஒரு முறை மிரட்டப்பட்டார்.

மராட்டியம் அறிந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது, பன்சாரேவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “அடுத்தது நீங்கள்?” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது. பன்சாரேவும், தபோல்கரும் இந்து விரோதிகள் என்று ஹெச். ராஜாவின் மொழியில் மதவெறி பிரச்சாரம் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

கோவிந்த் பன்சாரே கொலைக்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. பெருமாள் முருகனை முடக்க இந்துத்துவ-சாதிய சக்திகளுக்கு நாமக்கல் தனியார் பள்ளி முதலைகள் கைகொடுத்ததை போன்றது அது. ‘பன்சாரே எதிர்த்து வந்த சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கரங்கள் அவரது கொலைக்கு பின்னால் இருக்கக்கூடும்’ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர். சாலைகள் தனியார்மயத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார் பன்சாரே.

நரேந்திர தபோல்கர்
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட போது…

சிவசேனை-பா.ஜ.க கூட்டணி 1990-ல் ஆட்சியை பிடித்த போது சாலைகள் தனியார்மயத்தை பெருமளவுக்கு ஊக்குவித்தது. ஐ.ஆர்.பி (Ideal Road Builders) என்ற நிறுவனம் மராட்டியம் முழுவதும் பல சாலைகளை போட்டு, சுங்கச் சாவடி அமைத்து பெரும் வசூல் கொள்ளையில் இறங்கியது. ஐ.ஆர்.பி.யின் நிலப்பறிப்புக்கு எதிராக தகவல் பெறும் உரிமை சட்டப்பட்டி சில விபரங்களை கோரிய சதீஷ் செட்டி என்பவர் 2010-ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன் பிறகு கோவிந்த் பன்சாரே ஐ.ஆர்.பி.க்கு எதிராக உக்கிரமான போராட்டங்களை முன்னெடுத்தார். பன்சாரே கொல்லப்பட்ட பிப்ரவரி 16-ம் தேதி ஐ.ஆர்.பிக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ-க்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.

மராட்டியத்தில் 2005-லிருந்து 2013 வரை பன்சாரே கொலை சம்பவம் போன்று 53 தாக்குதல் சம்பவங்கள் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக  பதிவாகியுள்ளன. 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் கொடுரமாக அங்ககீனப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த கொலைகளுக்கு எதிரான வழக்குகள் நகராமல் இருக்கின்றன. 2013-ம் வருடம் நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக அப்போது இருந்த பிரிதிவ்ராஜ் சவான் ‘மகாத்மா காந்தியை கொலை செய்த மனஅமைப்பு தாபோல்கரின் கொலைக்கு பின்னால் இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார். குற்றவாளிகளின் பின்னணி தெரிந்திருந்தும் முதலமைச்சராக செயல்பட்ட எஞ்சியிருந்த காலத்தில் கொலையாளிகளை பிடிக்க பிரிதிவ்ராஜ் சவானால்  இயலவில்லை.

கோவிந்த் பன்சாரே
பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

“தாஜ் ஹோட்டல் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசப்பை பிடிக்க முடிந்தவர்களால் தாபோல்கர் மற்றும் பன்சாரேவின் உயிர்களை காவு வாங்கிய கயவர்களை பிடிக்க முடியாதது ஏன்” என்ற கேள்வி முக்கியமானது. இந்துத்துவம் இந்த சமூக உடலின் ஆபத்தான எச்சதசையாக வளர்ந்து இருக்கிறது. வெட்டி எறியும் அறுவை சிகிச்சைக்கு அந்த எச்சதசை காத்திருக்கிறது.

பன்சாரேவின் இறுதி ஊர்வலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியது, சமூக நலனுக்காக உழைக்கும் கம்யூனிஸ்ட்கள் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டியது.

இது தொடர்பான செய்தி

– சம்புகன்

சந்தா