உழைக்கும் மக்கள் நலனுக்காக இறுதி வரை குரல் கொடுத்த பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி!
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் பேராசிரியர் சாய் பாபா. சிறையில் இருந்து வெளிவந்த சில மாதங்களே ஆன நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். 90 சதவீதம் உடல் ஊனமான நிலையிலும், அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்காமல், சிறையிலேயே அவரை 90% கொன்றது பாசிச மோடி அரசு.
படிக்க : பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!
மக்களுக்காகக் குரல் கொடுத்தால், எழுதினால், பேசினால் இதுதான் கதி என ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் எழுதப்படாத விதியை வைத்துள்ளன. ஊரை அடித்து உலையில் போட்டு, பழங்குடிகள் வாழ்வை அழித்து, பல இலட்சம் தொழிலாளர் உழைப்பைச் சுரண்டிய டாட்டாக்கள் இன்று வளர்ச்சியின் நாயகனாக கொண்டாடப்படுகிறார்கள்; பலராலும் ஸ்டேட்டஸ் வைக்கப்படுகிறார்கள். சிங்கூரில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்ற, டாட்டாவின் ரத்தம் கறை படிந்த கைகளை உழைப்பின் உயர்வின் அடையாளமெனக் கூறி, நம்மையே நுகர்ந்து பார்க்கச் சொல்கிறார்கள்.
எப்படி மக்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு காணாமல் செய்யப்படுகிறார்களோ, அதுபோல் மக்களுக்காகப் பேசுபவர்களும் காணாமல் செய்யப்படுகிறார்கள். இதையெல்லாம் பார்க்காமல் டாட்டாவின் ஃபார்வர்டு மெசேஜ்க்கு பலியானவர்களுக்குத் தெரியாது சாய்பாபா நமக்கானவர் என்று…
படிக்க : உ. பி: தொடரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைத் தாக்குதல்கள்
சென்று வாருங்கள் தோழரே…
வளர்ச்சி என்ற மாயப்பிம்பம் வீழும் போது,
டாட்டாக்களும் அம்பானிகளும் அதானிகளும் வீழ்த்தப்படுவார்கள்.
இந்த சமூகமும், சமூக ஊடகங்களும் மக்கள் நலனைப் பேசுவதாய், மக்களுக்கான போராளிகளைப் போற்றுவதாய் மாறும்.
உழைக்கும் மக்களின் நலனுக்காய் நீங்கள் சிந்திய உதிரம் வீண் போகாது!
சென்று வாருங்கள் தோழரே…
ரவி