கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி, பீமா கோரேகான் போரில் மராத்தா பார்ப்பன bமகர் சமூகத்தினரால் வெல்லப்பட்டதன் 200 ஆம் ஆண்டை நினைவுகூறும் விதமாக மகாராஷ்டிரா மாநிலம் ஷானிவார் வாடாவில் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. மகர் சமூகத்தினரால் பேஷ்வாக்கள் வீழ்த்தப்பட்டதை நினைவுகூறும் நிகழ்வை சகித்துக்கொள்ள முடியாத மிலிந்த எகபோடே, சம்பாஜி பீடே தலைமையிலான இந்துமதவெறியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை நடத்தினர்.
மிலிந்த் எகபோடே, சம்பாஜி பீடே ஆகிய இருவரும் வன்முறையை தூண்டினார்கள் என்பது ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அவர்களை பிணையில் மகாராஷ்டிரா அரசு விடுவித்தது. மாறாக, சோமா சென், சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன் போன்ற பல தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதே வன்முறைக்குக் காரணம் என்று கூறி அவர்களை கொடிய பாசிச கருப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்தது.
ஜூன் 6 ஆம் தேதி மகாராஷ்டிரா போலீசு சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை தொடங்கியது. கைது நடவடிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக நினைவுநாள் கூட்டம் மாவோயிஸ்ட் நிதியால் நடத்தப்பட்டது என்றும், பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்துள்ளார்கள் என்றும் கட்டுக்கதையை உருவாக்கியது. மோடி அரசின் ஏவல் படையான தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) இந்த வழக்கு சென்ற பிறகு மேலும் சில செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். இன்றுவரை 16 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரவர ராவ், ஹனி பாபு போன்றவர்களின் மின்னணு சாதனங்களை புனே போலீசு ஹேக் செய்து போலியான ஆதாரங்களை நுழைத்தது அம்பலமான பிறகும், நினைவுநாள் கூட்டத்திற்கும் நடந்த வன்முறைக்கும் எந்த சம்மந்தமில்லை என்று இந்த வழக்கை விசாரித்த போலீசு அதிகாரி கணேஷ் மோர் தெரிவித்த பிறகும் 16 செயல்பாட்டாளர்களையும் ஆறு ஆண்டுகளாக ஈவிரக்கமின்றி மோடி அரசு சித்தரவதை செய்து வருகிறது.
படிக்க: எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!
கடந்த காலத்தில் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட 84 வயதான பாதிரியாரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஸ்டேன்சாமியை சித்தரவதை செய்து படுகொலை செய்தது; உயிரிழக்கும் தருவாய்க்கு சென்ற பிறகே கவிஞரான வரவர ராவிற்கு பிணை வழங்கியது போன்ற சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் சித்தரவதை செய்யும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
நாடு முழுவதும் தன்னுடைய பாசிச சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வரும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளை பாசிச சட்டமான ஊபா மூலம் அச்சுறுத்தி அவர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாகும்.
பிணையிலும் தொடரும் என்.ஐ.ஏ.வின் அடக்குமுறை
பீமா கோரேகான் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 16 செயல்பாட்டாளர்களில் 7 செயல்பாட்டாளர்களுக்கு பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், தன்னுடைய ஏவல் படையான என்.ஐ.ஏ மூலம் அவர்கள் மீது அடக்குமுறைகளை மோடி அரசு செலுத்தி வருகிறது.
அண்மையில் மே 14 அன்று பத்திரிகையாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான கௌதம் நவ்லகாவிற்கும், ஏப்ரல் 5 அன்று நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியரான சோமா சென்னுக்கும் உச்சநீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. நவ்லகாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே மும்பை உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், என்.ஐ.ஏ.வின் மேல்முறையீட்டால் அது நிறுத்திவைக்கப்பட்டு தற்போதே பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் தலைமையிலான அமர்வு, நவ்லகா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், இந்த வழக்கில் 370 சாட்சிகள் இருப்பதால் விசாரணை முடிவடைய நீண்ட காலம் எடுக்கும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் ஏற்கெனவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
படிக்க: ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு ! பாசிச UAPA சட்டங்களை ரத்து செய் !
அதேபோல், பேராசிரியர் சோமா சென்னுக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு, அவரின் வயது முதிர்ச்சி, உடல்நிலை, நீண்டகாலமாக காவலில் வைத்திருத்தல், தாமதமான வழக்கு விசாரணை மற்றும் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பிணை வழங்கியிருப்பதாக தன் தீர்ப்பில் கூறியுள்ளது.
பிணையில் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் தங்களுடைய தங்கும் இடம் பற்றிய விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்; மொபைல் போன் எப்பொழுதும் சார்ஜ் செய்யப்பட்டு உபயோகிக்கும் நிலையில் இருக்க வேண்டும்; ஜி.பி.எஸ். செயலில் இருக்க வேண்டும்; கண்காணிப்பு நோக்கங்களுக்காக என்.ஐ.ஏ. அதிகாரியின் மொபைல் போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் போன்ற அடக்குமுறைகள் மூலம் அவர்களை மனரீதியாக பலவீனப்படுத்தி மோடி அரசு முடக்க விழைகிறது.
மேலும், என்.ஐ.ஏ.வானது நவ்லகா தனது வீட்டுக் காவலுக்கு 1.75 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அநியாயமாக அறிவித்து, அதன் மூலம் அவருடைய பிணையை ரத்து செய்து மீண்டும் அவரை சிறையிலடைக்க முயல்கிறது. தற்போதும் முன்நிபந்தனையாக 20 லட்சம் ரூபாய் கட்டினால் தான் பிணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணை வழங்கப்பட்டவர்களைத் தவிர மற்ற செயல்பாட்டாளர்களும் தங்களுடைய பிணை மனுக்களை நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ள போதிலும், அவற்றின் மீதான விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகின்றது.
பாசிஸ்டுகள் கோழைகளே!
பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 செயல்பாட்டாளர்கள் மீது இன்றுவரை எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத நிலையில் ஊபா என்ற கொடிய கருப்பு பாசிசச் சட்டத்தையும் என்.ஐ.ஏ. என்ற நிறுவனத்தையும் பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்துள்ளது பாசிச மோடி அரசு. பிணை வழங்கிய பின்னரும் கூட சித்தரவதை செய்து வருகிறது.
இவ்வாறு மோடியின் பாசிச ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை விட, விசாரணைக் காலமே கொடுமையானதாக மாறிவருகிறது. தன்னுடைய பாசிச ஆட்சிக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்கள் மீது அதிகார வர்க்கத்தின் மூலம் சதி வேலைகளில் ஈடுபட்டு, அவர்கள் மீது ஊபா போன்ற கொடிய சட்டத்தை பாய்ச்சி சிறையிலைடக்க முடியும் என்ற புதிய நிலைமையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.
மக்களுக்கு நேர்மையாகவும் தன்னுடைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படுபவர்களைப் பார்த்து தொடைநடுங்கிப் போய் ஒரு கோழையைப் போல பாசிச மோடி அரசு நடுங்குகிறது. தங்களது பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தி பணியவைத்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் பாசிசக் கும்பலின் திட்டமானது துளி அளவு கூட வெற்றி பெறவில்லை. மாறாக, மோடி அரசுக்கு எதிராக செயல்படும் சமூக செயல்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களில் எவரும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளால் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை.
ஆகவே, பாசிசத்திற்கு எதிராக போராடும் ஜனநாயக சக்திகள் பீமா கோராகான் என்ற பொய் வழக்கையே ரத்து செய்து 16 சமூக செயற்பாட்டாளர்களும் விடுவிக்கப்படுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும். மேலும், கொடிய பாசிச சட்டமான ஊபாவும் என்.ஐ.ஏ.வும் தனக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்து ஒடுக்குவதற்கு மோடி அரசுக்கு ஆயுதங்களாக அமைவதால் ஊபாவை ரத்து செய்வது மற்றும் என்.ஐ.ஏ.வை கலைத்திடுவதற்கான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube