எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுக்கு நவம்பர் 18 அன்று பம்பாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நவம்பர் 22 என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக மருத்துவ ஜாமீனில் உள்ளார். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் வழக்கமான ஜாமீனில் வெளியே உள்ளார். மூன்றாவது ஆனந்த் தெல்டும்டே ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளார்.
அதாவது, நவம்பர் 18 அன்று பம்பாய் உயர்நீதிமன்றம், தெல்டும்டேவுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் உத்தரவில், பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.கட்காரி மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 13 (சட்டவிரோத நடவடிக்கைகள்), 16 (பயங்கரவாதச் சட்டம்) மற்றும் 18 (சதி) ஆகியவற்றின் கீழ் அவர் குற்றங்கள் செய்யப்படவில்லை என்று கூறியது.
படிக்க : ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்
மேலும், சட்டப்பிரிவு 38 (பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்) மற்றும் 39 (பயங்கரவாத அமைப்புக்கு அளிக்கப்பட்ட ஆதரவு) ஆகியவற்றின் கீழ் மட்டுமே விசாரிக்கப்பட்டு என்று தனது ஜாமீன் உத்தரவில் கூறியுள்ளது உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், ஆனந்த் தெல்டும்டேவுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 22 அன்று மனு தாக்கல் செய்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த மனுவை நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தெல்தும்டேவிற்கு எதிராக முதன்மையான வழக்கு தொடர பட்டுள்ளது” என்ற அடிப்படையில் அவரது முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த போதிலும், அவருக்கு பம்பாய் உயர்நீதிமன்றம் தவறுதலாக ஜாமீன் வழங்கியுள்ளதாக என்.ஐ.ஏ வாதிட்டது.
தெல்டும்டே சிபிஐ(மாவோயிஸ்ட்)-யின் தீவிர உறுப்பினர் மற்றும் சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ரவுத், ஷோமா சென், ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் என்.ஐ.ஏ குற்றம் சாட்டியது.
மேலும் வரவர ராவ், கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் ஃபெரீரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், ஸ்டான் சுவாமி, ஹனி பாபு மற்றும் ஹர்ஷாலி போட்தார் ஆகிய அனைவரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பாக ஒரு பெரிய சதி மற்றும் பல்வேறு குற்றங்களைச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றும் என்.ஐ.ஏ கூறியது.
2018 ஆம் ஆண்டு புனேவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சாதி வன்முறை தொடர்பான பீமா கோரேகான் வழக்கில் தெல்டும்டே ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத்தின் நிகழ்ச்சியில் தெல்டும்டேவும் இருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு ஜாமீன் பெற்ற பின்பும், தேசிய புலனாய்வு அமைப்பு ஆனந்த் தெல்தும்டேவை ஜாமீனில் விடுவிக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென்பது ஓர் பாசிச நடவடிக்கையே ஆகும். சமூக செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களுக்கு எள்ளளவும் ஜனநாயகம் வழங்கக்கூடாது என்று தனது பாசிச ஒடுக்குமுறைகளை திட்டமிட்டு அவர்கள் மீது அரங்கேற்றி வருகிறது என்.ஐ.ஏ நிறுவனம்.
கல்பனா