உ.பி: தொடரும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள்!

தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

0

மாவோஸ்டுகளுடன் தொடர்புடையதாக கூறி தேசிய புலனாய்வு அமைப்பு செப்டம்பர் 5 அன்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ், வாரணாசி, சந்தோலி, அசம்கர் மற்றும் தியோரியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் எட்டு இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

செப்டம்பர் 5 அன்று அதிகாலை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் செய்லபட்டுவரும் பகத்சிங் மாணவர் மோர்ச்சா என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளது. [தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு எண். RC- 01/2023/NIA/LKW revival of NRB of CPI (Maoist).]

அதேபோல் சமூக ஆர்வலர்கள் மணீஷ் ஆசாத், சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் சீமா ஆசாத், வழக்கறிஞர்கள் விஸ்வவிஜய், சோனி ஆசாத், தொழிலாளர் அமைப்பின் அமைப்பாளர் ரித்தேஷ் வித்யார்த்தி ஆகியோரின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியுள்ளது.

சீமா ஆசாத், விஸ்வவிஜய், சோனி ஆசாத் மற்றும் ரித்தேஷ் வித்யார்த்தி ஆகியோரை கைது செய்து சட்டவிரோதமாக அழைத்து சென்றுள்ளனர் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட இரண்டு மாணவர்களை (பகத்சிங் மாணவர் மோர்ச்சா-ன் தலைவர் அகன்ஷா ஆசாத், இணைச்செயலாளர் சித்தி) தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களின் இருவரின் கைபேசிகளை சட்டவிரோதமாக பறித்து, தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

படிக்க : “ஒரே நாடு, ஒரே தேர்தல்”: பூச்சாண்டி காட்டும் பாசிஸ்டுகள்!

அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பாக்-அசம்கர் விவசாயிகள் இயக்கத்தின் செயல்பாட்டாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினருமான ராஜேஷ் கிரியாவின் வீட்டிலும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியுள்ளது.

சந்தோலி மாவட்டத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியுள்ளது. புலிகள் காப்பகம் அமைப்பதற்காக தங்கள் நிலங்களை அரசு ஆக்கிரமித்ததை எதிர்த்து கைமூர் பீடபூமியின் பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்போராட்டத்தில் முதன்மை பங்காற்றிய கைமூர் முக்தி மோர்ச்சா என்ற அமைப்பின் தலைமையை ஒடுக்குவதற்கானவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக கைமூர் முக்தி மோர்ச்சாவின் அமைதிப் போராட்டங்கள் மீது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பல செயல்பாட்டாளர்களை பல முறை கடத்தி சித்திரவதை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைமூர் முக்தி மோர்ச்சாவின் செயல்பாட்டாளர்கள் மீதான போலீசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நிலங்களை ஆக்கிரமித்து கார்ப்பரேட்டுக்கு படையல்வைக்கும் அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவாகவும், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.

படிக்க : ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்

இந்த கைது மற்றும் சோதனை நடவடிக்கைக்கு, அரசு அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரம் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பகத்சிங் மாணவர் மோர்ச்சா மற்றும் சமூக ஆர்வளர்கள் மீதான ஜனநாயக விரோதச் சோதனைகள் மற்றும் 4 செயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கைகளை கண்டிப்பதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், இந்த சோதனைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் செயற்பாட்டாளர்களை உடனே நிபந்தனையின்றி விடுவிக்கவும் கோரியுள்ளது. மேலும், இந்திய அரசின் அடக்குமுறைகளும் ஜனநாயக விரோத நடைமுறைகளும் மிகவும் வெளிப்படையாகிவிட்ட இந்த நேரத்தில், ஜனநாயக மனப்பான்மை கொண்ட, நீதியை நாடும், அமைதியை விரும்பும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பில் இறங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஏற்கனவே, இந்நாட்டில் உழைக்கும் மக்களுக்காக போராடும் பல்வேறு செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் நிலையில், மேற்கூறிய தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் சமூக செயல்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் தீவிரமடைந்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது. மோடி அரசின் பாசிச ஒடுக்குமுறைகளின் இருந்து சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாக்க வேண்டியது உழைக்கும் மக்கள் அனைவரின் கடைமையாகும்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க