ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்

இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்த நாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.

ரே நாடு ஒரே தேர்தல்” இதுதான் தற்போது அரசியலில் விவாத பொருளாக உள்ளது. மோடி அரசால் திட்டமிட்டு விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது என்று சொல்வதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செப்டம்பர் 18 முதல் 22-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என திடீரென அறிவித்தார். அதே சூட்டுடன் செப்டம்பர் 1-ஆம் தேதி  “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைப்பதாக மோடி அரசு அறிவித்தது.

சென்ற முறை ஜூலை மாதம் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி கூட்டம் நடத்தியபோது பா.ஜ.க அதற்கு எதிராக டெல்லியில் தனது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடத்தியது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு பிறகு பா.ஜ.க இப்படி ஒரு கூட்டணியில் உள்ளது என்பதே அப்போதுதான் அனைவருக்கும் நினைவிற்கு வந்தது. ஊடகங்களும் இதைப் பேசுபொருளாக்கியது.

தற்போது இந்த மாதமும் “இந்தியா” கூட்டணி கூட்டம் நடத்தும் போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது அனைவரின் கவனமும் இதில் குவிக்கப்பட்டு விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.

இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்தநாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.


படிக்க: ஒரே நாடு,  ஒரே தேர்தல்! மோடி – அமித்ஷா பாசிச கும்பல்  நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை எதிர்கொள்வோம்!


அதற்காக இந்த திட்டத்தை நாம் குறை மதிப்பீடு செய்கிறோம் என்று அர்த்தமில்லை. இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் கண்டிப்பாக நிலவுகின்ற போலி ஜனநாயக கட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வந்து முழுமையான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ஏற்பாடாகும்.

000

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பா.ஜ.க-வின் நீண்ட நாள் திட்டமாகும். அத்வானி அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 2014-இல் மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க-வால் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1967-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 47 முறை வெவ்வேறு காரணங்களுக்காக மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரங்கள் பெரும்பாலும் மையத்திலேயே குவிக்கப்பட்டிருப்பதால்,  மாநில அளவிலான மக்களின் கோரிக்கைகள் முன்னுக்கு வரும்போதெல்லாம் மைய அரசு மாநில அரசுகளை ஒடுக்கி வந்துள்ளது. இந்தியாவில் சொல்லிக்கொள்ளப்படும் “கூட்டாட்சி” (Federalism) என்பதன் யோக்கியதை இதுதான். இதை  கார்ப்பரேட்களின் கொள்ளைக்காவும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ கனவிற்காகவும் சுத்தமாக ஒழித்துக் கட்டத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பாசிச கும்பல் எத்தனிக்கிறது.

மேலும், ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்கள் நடப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் சூழ்ச்சியாகும். சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சியின் வெற்றி/ தோல்வியை தீர்மானிப்பது, பிராந்திய அளவிலான மக்களின் பிரச்சினைகளின் மீது அந்த கட்சிகளின் நிலைப்பாடுகளை பொறுத்தே அமைகிறது. உதாரணமாக, 2016 சட்டமன்ற தேர்தலின் போது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொது விருப்பமாக இருந்தது. அதனால் அனைத்து கட்சிகளும் டாஸ்மாக் கடைகளை மூடுவது பற்றி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஒரே நேரத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் போது, மக்கள் தேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தள்ளப்படுவார்கள். இதனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடி புல்வாமா தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது போன்ற வாய்ப்புகள் ஏற்படும்.

இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தால், அரசுக்கு செலவினங்கள் குறையும் என்றும் ஊழல் குறைந்து மிகத் திறமையான நிர்வாகம் ஏற்படும் என்றும் காவி கும்பல் கதையளக்கிறது. ஆனால் காவிகளின் யோக்கியதை நாடறிந்தது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி தருவதில் நடக்கும் ஊழலை தடுக்கப்போவதாக சொல்லி மோடி அரசாங்கம் 2017-ஆம் ஆண்டு “தேர்தல் நிதி பத்திரம்” என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் தங்களது பெயரை குறிப்பிடாமலே நிதி அளிக்க வகை செய்யப்பட்டது. அதன்பிறகு நடந்தது என்ன? 2018 முதல் 2022 வரை உள்ள நான்கு ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட மொத்த நிதியான 9,208 கோடியில் 5,270 கோடி நிதி பாஜகவிற்கும் மட்டுமே சென்றிருக்கிறது. இது  தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்ட நிதியில் 57 சதவிகிதமாகும். மொத்த நிதியில் பாதிக்கும் மேல் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டுமே சென்றிருக்கிறது.

மேலும், தேர்தலுக்காக அரசு செலவு செய்யும் தொகையைவிட அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகளே அதிகமாகும். 2014 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமே 30,000 கோடி வரை செலவு செய்திருக்கின்றன. இதுவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு. இன்றைய நிலவரம் எப்படி இருக்கும் என்ற நாமே கற்பனை செய்து கொள்ளலாம். தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக, ஊழலை சட்டப்பூர்வமாக்கி உள்ளது. பண பலத்தின் மூலமாக பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி கொள்ளைப்புற வழியாக ஆட்சியை பிடிக்கும் ஊழல்போக்கில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது பாஜக. அப்படிப்பட்ட பாஜக தான் தேர்தல் செலவினங்கள் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஆடு நனைவது பற்றி ஓநாய் கவலைப்பட்ட கதை!

மிகையாக ஒன்று குவிக்கப்பட்ட அதிகாரங்களின் மூலமாக மாநில அரசுகளை கலைக்கும் அடாவடி போக்கு, கோடி கோடியாக பணம் இல்லாமல் தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலையில் இந்திய தேர்தல் சனநாயகத்தின் அவலநிலை வெட்டவெளிச்சமாக தெரிகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சி தேர்தலில் கூட “தான்  தேர்தலுக்காக 5 கோடி வரை செலவு செய்ததாகவும், அதனால் கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுத்தர முடியாது என்றும்” ஒருவர் கூறியது நமக்கு நினைவிருக்கிறது. நகராட்சிக்கே 5 கோடி என்றால் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு செலவாகும்? அதே சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெற்றால், இயல்பாகவே அதிக பணமுள்ள கட்சிதான் வெற்றி சாத்தியமிருக்கிறது. அந்த கட்சி பாஜக தான் என்பது சொல்லாமலே விளங்கும்.


படிக்க: ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!


பாசிச நோக்கங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் கொண்டு வரும் இந்த ” ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டம் என்பது, தற்போது எஞ்சியிருக்கும் சில மாநில உரிமைகளை பறிக்கவும், மாநில பிராந்திய கட்சிகளை ஒழித்துக்கட்டி, மக்களை  அடிமைப்படுத்தி மாநிலங்களை “இந்து ராஷ்டிரத்தின்” உரிமைகளற்ற சமஸ்தானங்களாக மாற்றும் நீண்டகால திட்டமாகும். இத்தகைய பயங்கரவாத திட்டத்தை பாசிச கும்பல் வைத்திருப்பது அபாயகரமான ஒன்றுதான்.

ஆனால் தற்போது இதை பாசிஸ்டுகளால் கொண்டு வர முடியாது என்பதே எதார்த்தமாக உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத போதும், களத்தில் இது பாசிஸ்டுகளுக்கு எதிராக  திரும்பும் என்ற நிலை உள்ளப்போதும் எதிர்க் கட்சியுகளையும் மக்களையும் தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்பதால் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாசிச கும்பல்.

ஒவ்வொருமுறையும் மோடி கும்பல் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுதான் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் உழன்று கொண்டிருக்கின்றன. அதைத்தான் பாசிச கும்பலும் விரும்புகிறது. ஊடகங்கள் மோடியை எந்தளவிற்கு விமர்சிக்க வேண்டும் என்பதை மோடியே தீர்மானிப்பது போல எதிர்க் கட்சிகள், ஜனநாயக, பாசிச எதிர்ப்பு சக்திகள் மோடியின் எந்த நடவடிக்கை விமர்சிக்க வேண்டும் என்பதையும் மோடிதான் தீர்மானிப்பார் என்பதுதான் நிலையாக உள்ளது.

காவி கும்பல் உருவாக்கும் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று விவாதிக்காமல் பாசிச கும்பலின் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தி அதற்கு எதிராக ஒரு மாற்று திட்டத்தை முன்வைத்து பாசிச எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் செயல்பட வேண்டியுள்ளது.


சீனிச்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க