02.09.2023
ஒரே நாடு, ஒரே தேர்தல்!
மோடி – அமித்ஷா பாசிச கும்பல் நாட்டு மக்கள் மீது தொடுத்திருக்கும்
போரை எதிர்கொள்வோம்!
பத்திரிகை செய்தி
ஒரே நாடு , ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
செலவினங்களை குறைப்பது, வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசுக்கு இருக்கக்கூடிய நிர்வாக மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளை சரி செய்வது என ஒப்புக்கு சப்பில்லாத பல்வேறு சால்ஜாப்புகளையே மோடியின் ஊடகங்கள் பிரச்சாரங்களாக தொடங்கிவிட்டன.
நரேந்திர மோடி உலகம் சுற்றுவதற்கு பல ஆயிரக்கணக்கான கோடிகள், இராணுவத்துக்கு பல லட்சம் கோடிகள், சமீபத்திய சிஏஜி அறிக்கையில் அம்பலமான பல லட்சம் கோடிகள் என ஊழலும் ஊதாரித்தனங்களும் மேற்கொண்டு நாறிப் போய் இருக்கிறது பாசிச மோடி அரசு. இப்படிப்பட்ட யோக்கியவான்கள் தான் செலவினங்கள் அதிகமாகிறது, ஆகவே ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பல்வேறு தேசிய இனங்கள் வாழக்கூடிய இந்த நாட்டின், தேசிய இனங்களின் அனைத்து வகையான உரிமைகளையும் பறித்து இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களாக மாற்றக்கூடிய பாசிச நடவடிக்கை. இந்த பாசிச நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு கேடுகெட்ட பாசிச அணுகுமுறையை பாசிச மோடி – அமித்ஷா கும்பல் முன்னெடுத்திருக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா வேண்டாமா என்பது தொடர்பாக எந்த மாநிலத்திடமும் கருத்து கேட்கவில்லை. பெரும்பான்மை மக்கள் பங்கு பெறக்கூடிய தேர்தல் தொடர்பாக இந்த நாட்டின் மக்களிடத்திலும் கருத்து கேட்கவில்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் தேர்தல், என்றெல்லாம் பெருமையாக பீற்றிக் கொண்ட ஜனநாயகத்தையும் ஆழ குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார்கள் மோடி அமித்ஷா – பாசிச கும்பல்.
மொத்த நாட்டையும் அதானி அம்பானி பாசிஸ்ட்டுகளுக்கு விற்பதற்கு மாநில உரிமைகள் தடையாக இருக்கின்றன என்பதை உண்மை. மாநிலத் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவதன் மூலம் மாநில தேர்தல் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இதன் உண்மையாக நோக்கமாக இருக்கிறது.
பாசிச கும்பல் தனக்கு ஏற்றபடி மொத்த நாட்டையும் மாற்றிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தான் தேர்தலையும் மாற்றுகிறது.
இந்த கேடுகெட்டத் தேர்தல் அமைப்பிற்குள் நாம் சாதிக்க முடியும் என்பதே மூடநம்பிக்கை. இதை மண்டும் மீண்டும் மோடி, அமித்ஷா பாசிச கும்பல் நமக்கு உணர்த்துகிறது.
ஆர் .எஸ் எஸ் – பாஜக பாசிச கும்பல் தோற்றுக் கொண்டிருப்பதன் அடையாளம் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பாசிச நடவடிக்கைகள்.
படிக்க: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !
அச்சப்படுவதற்கு ஏதுமில்லை, இந்த நாட்டின் மக்கள் மீது வெளிப்படையான போரை அறிவித்திருக்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல்.
எதிரிகள் நம் மீது போரை அறிவித்திருக்கும் போது நாம் பதுங்குவதற்கும் மறைவதற்கும் இடம் ஏதும் இல்லை. ஆர் .எஸ் .எஸ்- பாஜக; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக என்று உரத்து முழங்குவோம்! நம் முழக்கத்தின் அதிர்வுகளில் பாசிச கோட்டைகள் தூள் தூளாக நொறுங்கட்டும்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்கு குறைவான எதுவும் ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி -அதானி பாசிசத்துக்கு மாற்று இல்லை !
வேண்டாம் பாஜக! வேண்டும் ஜனநாயகம்!
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321