ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து உரிமைகளும் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தும் வெட்டி குறுக்கப்பட்டு பாசிச இருள் நோக்கிய வண்ணம் சென்று கொண்டு இருக்கிறோம். இனிமேலும் இதன் வழியே நம்முடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூடப் பெற முடியாது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் –  ரிமோட் வாக்களிப்பு
இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள் !
காவி – கார்ப்பரேட் பாசிசம்  முறியடிக்காமல் நமக்கு வாழ்வு இல்லை !

17.01.2023

பத்திரிக்கை செய்தி

ஒரே நாடு – ஒரே மொழி, ஒரே நாடு  – ஒரே ரேஷன்  வரிசையில் ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தான் ஆட்சி செய்யாத மாநிலங்களை கலைத்தும் , எதிர்க்கட்சிகளையும் அதன் எம்.எல்.ஏக்களையும் வளைத்துப் போட்டு வந்த பாஜக ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களை கலைப்பதற்கான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு அதிமுக அடிமைக்கும்பலின் இரு அணிகளும் ஓடோடிப்போய் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பாசிச பாஜகவின் அடிமைக்கட்சிகள் தவிர மற்ற  தேர்தல்கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எனினும் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசக்கும்பலுக்கு தனது இந்து ராஷ்டிர கனவை நனவாக்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் அவசியமானதாக இருக்கிறது.

பல்வேறு காலங்களில் நடைபெறும் தேர்தல்களால் பெரும் பொருட்செலவு ஆவதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் 9 மாநிலங்கள் மட்டுமே  தங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்கின்றன. மற்ற மாநில சட்டமன்றங்கள் 2023,2024,2025 ஆகிய காலங்களிலேயே நிறைவு செய்கின்றன.

நாட்டை அம்பானிக்கும் அதானிக்கும் விற்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் மோடி   உலகம் சுற்ற வாங்கப்பட்ட விமானத்தின் விலை எட்டாயிரம் கோடி ரூபாய். இப்படி ஒன்றிய அமைச்சர்கள், பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்கென பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுகின்றன. இதையெல்லாம் தடுக்காமல் , செலவீனத்தை குறைக்காமல் தேர்தல் வெவ்வேறு காலங்களில் நடத்துவதால் ஏற்படும் செலவுகளை காரணம் காட்டுவது ஏமாற்றே.


படிக்க: ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்


மின்னணு ஓட்டு எந்திரத்தை ஆம்புலன்சிலும், இரு சக்கர வாகனங்களிலும் கடத்திக்கொண்டு போவதையோ பாஜக வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பில் மின்னணு ஓட்டு எந்திரங்களை வைத்திருப்பதையோ மின்னணு ஓட்டு எந்திரத்தை ஹேக் செய்வதையோ தடுக்க வக்கற்ற இந்திய அரசும் தேர்தல் ஆணையமும் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் உதவும் என்பது கேலிக்கூத்து ஆகும். ஏனென்றால் இப்படிப்பட்ட  முறைகேடுகளும் இந்து மதவெறி பாசிச கலவரங்களும் அராஜகங்களுமே மோடியை இருமுறை ஆட்சியில் நீடித்திருக்க வைத்து இருக்கின்றன.

இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பல்வேறு மாநில, இன – மொழி பேசும் மக்களின் உணர்வுகளும் பண்பாடும்  பாசிச பாஜகவுக்கு மாபெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடும் கேரளாவும் வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக இந்து ராஷ்டிரத்துக்கு எதிரான மன நிலையில் உள்ளன. பாஜக இம்மாநிலங்களில் இதுவரை ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு இவையே முக்கியக்காரணங்களாகும்.

ஆகவே, அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து குழித்தோண்டி இவர்கள் சொல்லும் ஜனநாயகம் மீது மண்ணள்ளி போடுகின்ற வேலைதான் ஒரே தேர்தல் . இதன்மூலம் தேர்தல் நேரத்தில் பயங்கரவாதப்’ பிரச்சினையையோ எல்லைப்’ பிரச்சினயையோ உருவாக்கி  அதன்மூலம் அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற பாசிச மோடி அமித்ஷா கும்பல் முயல்கிறது. தேர்தல் பங்கேற்பில் மாற்றுக்கருத்து இருப்பினும் கூட இது குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை மறுத்து மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

புலம்பெயர்ந்தோர் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக ரிமோட் முறையில் வாக்களிப்பு என்ற கிரிமினல் போர்ஜரி முறையை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம். தென்னிந்திய மாநிலங்களில்  குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள், வட கிழக்கு இந்தியர்கள் பிழைப்பு தேடி வருகின்றனர். இவர்களை எளிதில் தன் வசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள் ரிமோட் வாக்களிப்பு என்ற முறையை கொண்டு வருகின்றனர். இதற்கு வழக்கம் போல எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான வாக்குகள் வித்தியாசம் குறைந்துகொண்டே இருக்கிறது. அந்த வித்தியாசத்தை சரி செய்வதற்கான கருவியாக மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலுக்கு ரிமோட் வாக்களிப்பு முறை இருக்கும். கொரோனா காலத்தில் முதலாளிகளாலும் அரசாலும் கைவிடப்பட்ட லட்சக்கணக்கான வட இந்தியர்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார்கள். பலர் சோற்றுக்கு வழி இன்றி செத்தேபோனார்கள், அதற்கெல்லாம் வருத்தப்படாத பாசிச மோடி – அமித் ஷா கும்பல்  இப்போது புலம் பெயர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று  கூறுவதே மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டே தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகள் தங்கள் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து உரிமைகளும் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தும் வெட்டி குறுக்கப்பட்டு பாசிச இருள் நோக்கிய வண்ணம் சென்று கொண்டு இருக்கிறோம். இனிமேலும் இதன் வழியே நம்முடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூடப் பெற முடியாது.  காவி – கார்ப்பரேட்டுகள் தங்களின் பொற்கால ஆட்சியான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் தேர்தல் ஜனநாயகத்திற்காக கெஞ்சிக்கொண்டிருப்பதில் எவ்விதப்பலனும் இருக்கப்போவதில்லை. ஏற்கனவே நாம் சென்றுகொண்டிருக்கும் பாசிச இருள் சூழ்ந்த பாதைக்கு நேர் எதிரான புரட்சிகரப் பாதையைத்தவிர வேறேதும் நமக்கு வழி இல்லை.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி –அதானி பாசிஸ்டுகளின் பாசிச நடவடிக்கைகளை களத்தில் முறியப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே தலையாயக் கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க