டைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்கின்ற விதத்தில் 2024-ம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும், ஆகையால் 27 அமாவாசைதான் இந்த ஆட்சி என்று அடித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.
எடப்பாடி ஏதோ பூச்சாண்டி காட்டுகிறார் அல்லது ‘அருமையான நகைச்சுவை’ என்றுதான் நாம் அவற்றைக் கருதியிருப்போம். ஆனால் ஒரு அடிமைக்கு தனது எஜமானன் மேலுள்ள ஆழமான நம்பிக்கையையே அது பிரதிபலித்தது.
மோடி தலைமையில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, தனது இந்துராஷ்டிர இலக்கை அடைவதற்காக பல்வேறு சட்டரீதியான ஆயத்தப் பணிகளை, பரிசோதானைகளை செய்துவருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமைச் சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச்சட்டம், புதிய கல்வி(காவி)க் கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உஃபா), என்.ஐ.ஏ, சொத்துசேதத் தடுப்புச் சட்டம், ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது என பல்வேறு சட்டங்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டலாம்.
அதன் வரிசையில் தற்போது, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தலை நடத்துவதுதான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையாக சொல்லப்படுகிறது.
படிக்க :
♦ இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
இதைக் கொண்டுவருவதற்காக தொடக்கத்திலிருந்தே பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்திருக்கிறது. இந்த ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தில் பேசிய  மோடி, “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது விவாதப் பொருள் அல்ல; அது இன்றைய காலக்கட்டத்திற்கான தேவை; அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் ‘வளர்ச்சிக்கு’ முட்டுக்கட்டையாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
2014-ல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017-ம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது. 2018-ம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையுடன் இணைந்ததுதான் ஒரே வாக்காளர் பட்டியல் கொண்டுவரவேண்டும் என்பதும். இதை நடைமுறைப்படுத்துவதன் முதல்படியாகவே கடந்த ஆண்டு இறுதியில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மோடி அரசு.
000
இந்நிலையில் கடந்த மார்ச் 10-ம் தேதியன்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” என கூறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
பிரதமர் அலுவலகத்துடனான இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா (இடையில்) மற்றூம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுப் சந்திரா பாண்டே, ராஜிவ் குமார்.
ஏனெனில், மோடி அரசு இதை பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோதிலிருந்து, பா.ஜ.க. எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இதனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமாக இயங்கும் ஒரு அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ‘அப்படி ஒரு கற்பனையெல்லாம் தேவையில்லை’ என்று கருதச் செய்யும்படி தலைமைத் தேர்தல் ஆணையரின் பேச்சு அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தால் இன்னும் சட்டமாக்கப்படாத ஒரு திட்டத்தைப் பற்றி, ஒரு அரசின் உயர் அதிகாரி ஆளும்கட்சிக்கு சாதகமாக தனது கருத்தை தெரிப்பது ஜனநாயக அமைப்பு முறைக்கு விரோதமானதாகும்.
இதேபோல, கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி பிரதமரின் முதன்மைச் செயலாளர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணையவழிக்கூட்டம் நடத்திப் பேசியதும் பெரும் விவாதப் பொருளானது. சி.பி.ஐ, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வின் கைப்பாவைதான் என வெளிப்படையாக தெரிந்திருப்பதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறினார்.
000
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை ஏன் கொண்டுவரவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் பல காரணங்களைச் சொல்லிவருகிறார்கள். “நாட்டில் ஆண்டுதோறும் ஏதாவதொரு தேர்தல் நடந்துகொண்டே உள்ளது. இந்த தேர்தல்களை நடத்துவதற்கு அரசு அதிகளவு செலவழிக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சிப் பணிகளும் பாதிப்படைகிறது. அடிக்கடி தேர்தல் நடப்பதால்தான் தேர்தலில் மக்கள் பங்கேற்பு முழுமையாக இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தேர்தல் நடந்தால் மக்கள் அதிகளவில் வாக்களிப்பார்கள்” என நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும் அளவிற்கு பொய்களை அடுக்குகிறார்கள்.
முதலில், தேர்தல்களை நடத்துவதற்கு அதிகளவு செலவாகிறது என்று கூறுவது எப்படி அப்பட்டமான பொய் என்பதை பார்ப்போம்.
‘செண்டர் ஃபார் மீடியா ஸ்டடீஸ்’ என்ற அமைப்பு தேர்தல் செலவுகளை பற்றி ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு மொத்தம் 30 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இந்த செலவு என்பது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் என அனைவரும் இணைந்து செய்த மொத்த செலவு. இதில் அரசு செய்த செலவு வெறும் 3 ஆயிரத்து 500 கோடி. அதாவது மொத்த செலவில் 11 சதவிகிதம் மட்டுமே.
இது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமானதுதான் என்றபோதும், இதிலிருந்து மொத்த தேர்தல் செலவில் அரசின் செலவு ஒப்பீட்டளவில் குறைவானதே என்பதை அறியலாம்.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன்களின் மொத்த தொகை 10 இலட்சத்து 72 ஆயிரம் கோடி. இவர்களுக்கு தேர்தல் நடத்துவதால்தான் கஜானா காலியாகிறதாம்.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு மொத்தம் 60 ஆயிரம் கோடி செலவாகியுள்ளது. இதில் 45 சதவிகிதம், அதாவது 27 ஆயிரம் கோடியை பா.ஜ.க. என்ற ஒரு கட்சி மட்டுமே செலவழித்துள்ளது. ஒருவேளை இதனால்தான் தேர்தல் அதிகம் செலவு பிடிக்கிறது என்று சொல்கிறார்களா தெரியவில்லை.
அடுத்து, ‘வளர்ச்சிப் பணிகள்’ பாதிக்கப்படுவதைப் பார்ப்போம். இந்த விசயத்தை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதற்குமுன் பா.ஜ.க. எதை ‘வளர்ச்சிப் பணிகள்’ என்று சொல்கிறது என்பதை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.
கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், சிறுதொழில் அழிப்பு என மோடி ஆட்சி உழைக்கும் மக்களுக்கு நரகமாகவே இருக்கிறது. ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு, பாரத்மாலா, சாகர்மாலா, மீத்தேன் எரிவாயுத் திட்டம், அணு உலை விரிவாக்கம், வேளாண் சட்டதிருத்தம், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கம், பல லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி, வரிச்சலுகைகள் என கார்ப்பரேட் முதலாளிகள் குதுகலிக்கும் வகையிலான பணிகளைத்தான் மோடி ஆட்சி சிரமேற்கொண்டு செய்துவருகிறது. இதைத்தான் அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகள்’ என்கிறார்கள்.
புள்ளிவிவரம் ஒன்றின்படி, 2020-2021-ல் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 261 சதவிகிதம் உயர்ந்தது. அதேபோல, இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிதமாக உயர்ந்துள்ளது. அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் இந்த ‘வளர்ச்சிப் பணிகளில்’ சீரான வளர்ச்சி இல்லாமல் போகலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் வருத்தம்.
சான்றாக வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதை எடுத்துக் கொள்வோம். கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க, இந்திய விவசாயித்தை கூறுபோட்டு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டன வேளாண் சட்டங்கள். இதை எதிர்த்து விவாசாயிகள் ஓராண்டுகாலம் போராடினார்கள். இப்போராட்டத்தில் 750 விவசாயிகள் தியாகியானார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் பணியாத மோடி, ஐந்து மாநிலத் தேர்தல் வரவே (இது ஒரு காரணம் மட்டுமே என்றாலும்) வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கிறார். இதனால் அவரது நண்பர்கள் (அம்பானி, அதானி) மோடியிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றது. எனவேதான் அடிக்கடி நடக்கும் தேர்தல்களை ஒழித்துக் கட்டுவது பா.ஜ.க.விற்கு தேவையாக இருக்கிறது.
000
அடிக்கடி நடக்கும் தேர்தல்கள், தங்கள் புரவலர்களான பார்ப்பன – பனியா கார்ப்பரேட் கும்பலின் நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்-இன் ‘பாரத தேசம்’ என்ற வரையறைக்கும் அது ஒத்திசைவானதாக இல்லை.
நம் நாட்டில் அதிகார மாற்றத்திற்குப் பிறகு, மொழி வரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநில அரசுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்த ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அவர்களின் தலைவர் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனை கொத்து’ என்ற நூலில் “நமது புனிதத் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு, ஒரே நாடு – ஒரே சட்டமன்றம் – ஒரே நிர்வாக மையம்தான் தேவை” என்று கூறியுள்ளார்.
பல்வேறு தேசிய இனங்களை பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய, தங்கள் கைகளில் வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களை வைத்துள்ள மாநில அரசுகள் இந்துராஷ்டிர அதிகார மையத்திற்கு எதிரானதாகும். வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு, இந்நிலப்பரப்பு பல்வேறு சமஸ்தானங்களாக இருந்ததைப் போல மீண்டும் மாற வேண்டும்; கிராம அளவிலான உள்ளூர் அதிகாரம் நிலவ வேண்டும். அனைத்து கிராம அதிகாரங்களையும் கட்டுப்படுத்துகிற ஒரே பேரரசு இருக்க வேண்டும் என்பதுதான் இந்துராஷ்டிர அரசு வடிவம். இரண்டாயிரம் ஆண்டுகாலமாக பார்ப்பனிய சாதிக் கொடுங்கோன்மையும் நிலப்பிரபுத்துவ சுரண்டலும் இந்த வடிவத்தில்தான் பாதுக்காக்கப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்று கூறினாலும் மொத்தமாக தேர்தல்களையே ஒழித்துக்கட்டி தனது பாசிச சர்வாதிகாரத்தை – இந்துராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் இலக்கு. அதற்கான தொடக்கமாக அவர்களுக்குப் பயன்படப்போவதுதான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’.
ஐ.டி.ஃப்.சி என்ற அமைப்பின் ஆய்வுப்படி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் 77 சதவிகிதம் ஒரே கட்சியே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறது. ஏனெனில் நாடு தழுவிய தேர்தலின்போது, தேசியப் பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படும். அதில் மட்டுமே மக்கள் தங்கள் கவனத்தை செலுத்துவார்கள் என்று பல அறிஞர்களும் கூறிவருகிறார்கள்.
56 இன்ச் மார்பு கொண்ட மோடி மட்டுமே, உள்நாட்டில் ‘முசுலீம் பயங்கரவாதிகளிடமிருந்தும்’ வெளியில் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் வரக்கூடிய தாக்குதல்களை முறியடித்து, நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தவர் என்ற கருத்தை தொடக்கம் முதலே தங்களது பிரச்சாரத்தின்மூலம் பெரும்பான்மையினரின் மனதில் ஆழமாக ஊன்றி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
படிக்க :
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !
சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !
மேலும், மோடிக்கு சவால்விடக்கூடிய ஒரு ‘மீட்பர்’ பிம்பம் தற்போதுவரை எந்த கட்சித் தலைவருக்கும் இல்லை. மேற்சொன்ன அதே காரணத்தால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். புல்வாமா தாக்குதல் அப்போது பா.ஜ.க.விற்கு நன்கு பயன்பட்டது. ஒவ்வொரு தேர்தலின்போதும் இதைப்போல ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கிளப்பிவிடும் தேசவெறி, மதவெறியை தேர்தலிற்குள்ளேயே நின்று முறியடிப்பது சாத்தியமில்லை.
சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமான வகையிலும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. தனது கனவான இந்துராஷ்டிரக் கொடுங்கோன்மையை நிறுவுவதில் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதில் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல்.
எப்பொழுது வேண்டுமானால் பாசிச சர்வாதிகாரம் நிறுவப்படலாம் என்ற அபாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை எப்படி வீழ்த்தலாம்’ என்று வியூகம் வகுத்துக்கொண்டிருக்கும் தேர்தல் கட்சிகளும் ‘அரசமைப்புச் சட்டத்தை ஆட்டவும் முடியாது, அசைக்கவும் முடியாது’ என்று போலி ஜனநாயகத்தை நிலையானது என கருதிக் கொண்டிருப்பவர்களும், கனவை உதறியெழ வேண்டிய தருணம் இது !

மதி

1 மறுமொழி

  1. இந்துத்துவ அமைப்புகளின் இன்றைய செல்வாக்கை, மோடியை எதிர்க்கவல்ல, கோட்பாட்டு அடிப்படையிலான தலைவரோ, அமைப்போ இல்லாதது பெரிய குறை. பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் எனப்படுவோரும் தமிழ்நாட்டிற்கு அப்பால் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க