கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 3
பாகம் 2
குஜராத் படுகொலையின் நாயகனான மோடி, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் ரவுடி சாமியார் யோகி ஆகியோர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள முயன்று வருகிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
கடந்த அக்டோபர் மாதம் ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது’ என்ற பெயரில் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது அசாம் அரசு. வீடுகளை இடிப்பதற்கு முதல்நாள் இரவுதான் அப்பகுதி மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மாற்று ஏற்பாடுகளை செய்து தராததோடு, காலி செய்வதற்கான அவகாசமும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இதைக் கேட்ட ‘குற்றத்திற்காக’ ஒரு அப்பாவி முஸ்லீம், போலீசு மிருகங்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்து கிடந்தவரின் மார்பின் மீது உடன் வந்த புகைப்படக்காரன் வன்மத்தோடு ஏறி குதிக்கின்ற காட்சி சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு நாடே அதிர்ச்சியடைந்தது. நெஞ்சைப் பதைபதைக்கவைத்த இச்சம்பவத்திலிருந்து முஸ்லீம் மக்களின் மீதான ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் வன்மத்தை புரிந்துகொள்ள முடியும்.
2021-ம் ஆண்டு மே மாதம் சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து டிசம்பர் மாதம் வரை அம்மாநிலத்தில் 31 போலி மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. “இந்த போலி மோதல் கொலைகள் காட்டுமிராண்டித்தனமானவை” என்று தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது. அம்மாநில போலீசின் கணக்கின்படி போலி மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 55 ஆகும். ஆனால், போலீசின் யோக்கியதை நமக்குத் தெரியும். எனவே உண்மை விவரம் இதைவிட மோசமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
படிக்க :
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
இந்த போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களாவர். “அசாமை போதைப் பொருள் வியாபாரம், கால்நடைக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒழித்த மாநிலங்களாக்கும் வரை இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் அதிகரிக்கவே செய்யும்” என்று பாசிஸ்டுகளுக்கே உரிய திமிருடன் பதிலளித்துள்ள முதல்வர் சர்மா, முஸ்லீம்களையும் பழங்குடிகளையும் போதைப் பொருள் மற்றும் கால்நடை கடத்தல்களில் ஈடுபடுபவர்களாக சித்தரிக்கிறார்.
மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது பிஸ்வா சர்மா அரசு. இந்துக்கள், ஜெயின், சீக்கியர்கள் என ‘மாட்டுக்கறி உண்ணாதவர்கள்’ வாழும் பகுதிகள் மற்றும் இந்துக் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கு இச்சட்டம் தடைவிதிக்கிறது. இச்சட்டத்தின்படி, முறையான ஆவணங்கள் இல்லாமல் கால்நடைகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வது கடத்தல் குற்றமாகும்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் காவி கும்பல் முஸ்லீம்களை குறிவைத்து கலவரங்களையும் வெறியாட்டங்களையும் சட்ட உத்தரவாதத்துடன் நடத்துவதற்கான ஏற்பாடே இச்சட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றம், போதைப்பொருட்கள் கடத்தல், பசு கடத்தல் என்ற பெயர்களில் காவி கும்பல்களாலும் ஹிமாந்த பிஸ்வா சர்மா அரசாலும் அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எதுவும் இந்தியாவின் இதர மக்களை உலுக்குவதைப் போல அசாம் மக்களை உலுக்குவதில்லை. மாறாக அசாமியர்களிடையே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
பொதுவாக அசாமியர்களிடையே உள்ள “வங்கதேச குடியேறிகள்-அந்நியர்கள்” என்ற இன அடிப்படையிலான வெறுப்பும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் “முஸ்லீம்” என்ற மத அடிப்படையிலான வெறுப்பும் இணைந்து அசாமை முஸ்லீம்களை நான்காந்தர குடிமக்களாக நடத்தும் இந்து ராஷ்டிரமாக மாற்றியிருக்கிறது. இந்தநிலையை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். பல்லாண்டுகாலம் அசாமியர்களிடையே வேலைசெய்திருக்கிறது.
அசாமில் ஆர்.எஸ்.எஸ்-இன் பன்முக வடிவங்கள்
அசாமில் காவிமயமாக்கல் நடவடிக்கையானது, 1944-ஆம் ஆண்டு ராம் சிங் தாக்கூர் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அசாமிற்கு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அசாமிற்கு வந்த தொடக்க காலத்தில் பீகார் மற்றும் மராத்தி மாநிலங்களிலிருந்து சென்ற மார்வாடிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-க்கு புரவலர்களாக இருந்தனர்.
பழங்குடி இனமக்களை இந்துத்துவமயமாக்க, அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் திணிக்கும் சங்கபரிவாரக் கும்பல்.
1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன. இதைத் தவிர வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், விவேகானந்தா பள்ளிகள், படிப்பு வட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சரி பள்ளிகள் என அசாமில் புற்றீசல்கள் போல பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இவற்றுள் உள்ளூர் பழங்குடி மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக “வனவாசி கல்யாண் ஆசிரமம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பழங்குடியின மக்களை இந்துத்துவமயமாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக பழங்குடியின மக்களுக்கு ‘உதவி செய்வது’ என்ற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை 3,200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் இவற்றின் மூலம் கிடைத்த ஐக்கியத்தைப் பயன்படுத்தி, படிப்படியாக வழிபாட்டிலும் பண்பாட்டளவிலும் பழங்குடி மக்களை ‘இந்துக்களாக’ மாற்றியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உற்பத்தி செய்த ஓராசிரியர் பள்ளிகள்
வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது காவிமய நடவடிக்கைகளை சுலபமாகச் செய்வதற்கு வழிசெய்துகொடுப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான். வழக்கமான பள்ளி  நேரம் முடிந்த பின்பு 3 மணி நேரம் இந்த ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இவை கிராமத்தினருக்கும் சங்கப் பரிவாரத்திற்கும் இடையேயான தொடர்புப் பாலமாக செயல்படுகின்றன. 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான் இதன் அடிப்படை. இங்கு ஆசிரியர் என்பவர் “குரு” அல்லது “ஆச்சார்யா” என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆசிரியர்கள் பட்டதாரி இளைஞர்களாவர்.
இப்பள்ளிகளில் 6 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு “ஐந்துவித கல்வி” கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆரம்பக் கல்வி; சுகாதாரக் கல்வி; கிராம வளர்ச்சி; விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது இளம் பிஞ்சுகளிடத்தில் இந்துத்துவ நஞ்சூட்டுவதற்கான ஒரு வடிவமாக இருக்கிறது.
விளக்கு ஏற்றி இந்து தெய்வங்களைப் புகழ்ந்து பாடும் சமஸ்கிருத பாடல்களை பாடிய பிறகே, வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இரண்டு மணிநேர வகுப்புக்குப் பிறகு ஒரு மணி நேரம் யோகா சொல்லித் தரப்படுகிறது. இப்பள்ளிகளில், பழங்குடியின மொழிகள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழியிலேயே பாடங்கள் நடைபெறுக்கின்றன. மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதைத் தாண்டி வாரத்தின் இரண்டு நாட்கள் கிராமத்திலுள்ள பொது இடங்களில் பஜனை நடத்துவது, விநாயகர் வழிபாடு செய்வது மற்றும் அனுமன் பாடல்களை பாடுவது போன்ற வேலைகளும் இப்பள்ளிகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அசாமில் வேலை செய்யத் தொடங்கி 22 ஆண்டுகளில் 4,650 ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள 4,650 ஓராசியர் பள்ளிகளில் 70 சதவிகிதம் தேயிலை தொழிலாளர்கள், பழங்குடிகள் அதிகமுள்ள வட அசாமில் உள்ளன. வட அசாமும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளும் அசாமில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு  அடிப்படையாக இருப்பதற்கான காரணத்தை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
அசாமின் வரலாற்றைத் திரித்து புரட்டிய காவிகள்
காஷ்மீர் மட்டுமல்லாமல் திரிபுரா, அசாம் உட்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் இராணுவத்தின் துப்பாக்கி முனையால்தான் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம்தான் இன்றளவும் ‘தேசிய ஒற்றுமை’ நிலைநாட்டப்படுகிறது. இம்மாநில மக்கள் இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து தனிநாடு கோரிக்கையின் கீழ் பல ஆண்டுகளாக போராடிய பாரம்பரியமிக்கவர்கள். எனவே அசாமியர்களை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்றால் முதலில் அவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்க வைப்பது முன்நிபந்தனையாக இருந்தது.
அசாமியர்களிடையே ‘இந்திய தேசிய’ உணர்வூட்டுவதற்கும் அதன்வழியாக இந்து ராஷ்டிர இலட்சியத்தை ஏற்றுக் கொள்ள வைக்கவும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உதவியது “வித்யா பாரதி” என்ற அதன் சொந்த கல்வி நிறுவனமாகும்.
1944-ஆம் ஆண்டில் வெறும் 182 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 115 நடுநிலைப் பள்ளிகளையும் 121 தொடக்க மற்றும் 341 இடைநிலைப் பள்ளிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் 1.4 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். பழங்குடி மக்களின் வரலாற்றிற்கும் பண்பாட்டிற்கும் சற்றும் தொடர்பில்லாத இராமாயணமும் மாகாபாரதமும் மாணவர்களுக்கு வகுப்புகளாக எடுப்படுகின்றன. மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை ஊட்டுவதற்காக “தாய்நாட்டில் படிப்பது” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை இந்தியாவின் பிற பகுதிகளில் படிக்க வைக்கிறது வித்யா பாரதி. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற தனது மாணவர் அமைப்பின் மூலம் இம்மாணவர்கள் மத்தியில் வேலைசெய்கிறது ஆர்.எஸ்.எஸ்.
000
அசாமை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர அசாமின் பண்டைய வரலாற்றை   தங்களுக்கு ஏற்ப திரித்துள்ளது இந்த காவி கும்பல். அசாமை ஆண்ட தனவா வம்சத்தை சேர்ந்த மகிரங்க தனவாவைத் தோற்கடித்து நரகாவின் பகுமா வம்சம் ஆட்சிக்கு வந்தது. நரகாவிற்கு பிறகு அவரது மகன் பகதத்தா ஆட்சிக்கு வந்தான் என்றும் கௌரவர்களுக்காக குருஷேத்திரப் போரில் கலந்து கொண்டான் என்றும் கலிகா புராணத்தில் கூறியுள்ளதாக அசாமின் வரலாற்றைத் திரித்தார்கள் காவி பாசிஸ்டுகள்.
அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் வேருன்றுவதற்கு அடிப்படையாக இருந்த ஓராசிரியர் பள்ளிகள்.
இந்த ‘நரகா’ என்பவன் மகாபாரதத்தில் வருகிற நரகாசுரன் என்ற கதாபாத்திரமாக சொல்லப்படுகிறது. அசாமின் வரலாற்றை இராமாயண மற்றும் மகாபாரதக் குப்பைகளுடன் கலந்து திரிப்பதன் மூலம் அசாம் இந்து-இந்திய தேசத்தின் ஒரு பகுதியே என்ற கருத்தை ஆழமாக பதியவைத்தார்கள்.
மேலும் அசாமியர்களின் உள்ளூர் திருவிழாக்களான துர்கா பூஜை மற்றும் பிகு ஆகியவற்றின்போது, பந்தல் அமைத்து பாரதமாதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
முஸ்லீம்கள் ‘சட்ட விரோத’ குடியேறிகள்
அசாமின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள் வங்கதேச இந்துக்களும், முஸ்லீம்களுமாவர். இவர்கள் பெரும்பாலும் வங்கப் பிரிவினையின்போது அசாமில் குடியேறியவர்களாவர். 1979 மக்களவைத் தேர்தலில், அசாமில் வங்க தேசத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் அசாம் கண பரிஷத் ஆகிய அமைப்புகள் “சட்ட விரோத குடியேறிகளை அசாமிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று போராட்டத்தைத் தொடங்கின. இது “அசாம் இயக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
1985-ஆம் ஆண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, இத்தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் நடந்த காலத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வங்க தேசத்தவர்களை ‘அந்நியர்கள்’ என்ற வெறுப்புடன் அணுகிவந்த அசாம் பூர்வகுடி மக்களின் வரலாற்றுரீதியான உணர்வை தன்னுடைய இந்து ராஷ்டிர நோக்கத்திற்கேற்ப வளைத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகள் ‘அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற’ அம்மக்களின் கோரிக்கையை இந்துக்கள் நம்மவர்கள், முஸ்லீம்கள் மட்டுமே இந்த தேசத்திற்கு தொடர்பில்லாத அந்நியர்கள்; ஆகவே அவர்களை மட்டும் வெளியேற்ற வேண்டும் என அசாம் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்.
படிக்க :
♦ அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
♦ அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
தனது முப்பதாண்டு கால பிரச்சாரத்தின் மூலம் முஸ்லீம்கள் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டிய அந்நிய சக்திகள் என்று சித்தரிப்பதில் வெற்றியடைந்து கொண்டு வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல். 2019-ஆம் ஆண்டில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வங்க தேசத்திலிருந்து வந்து அசாம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் குடியேறிய இந்துக்களுக்கு, அந்நாட்டில் அவர்கள் ‘மதச் சிறுபான்மையினர்’ என்ற அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குகிறது. தனது இந்து ராஷ்டிர நோக்கத்திற்கு அசாமில் மக்கள் அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், தேர்தலில் பாராக் பகுதியில் பெரும்பான்மையாகவுள்ள வங்க இந்துக்களின் ஓட்டைப் பெறுவதும் இதன் நோக்கமாகும்.
ஆனால், அசாம் இயக்கத்தின் மூலம் பூர்வகுடி மக்கள் போராடி கொண்டுவந்த அசாம் ஒப்பந்தமோ 1971 மார்ச் 24-க்குப் பிறகு, அசாமில் குடியேறிய வெளிநாட்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துதான் அசாமில் பா.ஜ.க. ஆட்சியை வென்றது.
எனவே வங்க இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து 2019-ஆம் ஆண்டு, அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. வங்க இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்பதைப் பற்றி, “இந்தியா ‘இந்துக்களின் தேசம்’ என்பதால் இந்துக்களை பாதுகாப்பது நமது தார்மீகக் கடமை” என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அசாம் மாநிலத்தின் சுமையை – அதிக அளவிலுள்ள வங்கதேச குடியேறிகள் – இந்தியா முழுவதும் பகிர்ந்தளிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகும் 2021-ஆம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, சில முரண்பாடுகள் இருந்தபோதும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.தான் தங்களுக்கான கட்சி என அசாம் மக்கள் ஏற்றுக் கொண்டுவருவதையே காட்டுகிறது. தனது நூற்றுக்கணக்கான அமைப்புகளின் மூலம் பல ஆண்டுகாலம் அசாம் மக்களிடையே வேலை செய்து உருவாக்கிய செல்வாக்கின் விளைவாலேயே ஆர்.எஸ்.எஸ்-ஆல் இந்த தேர்தல் வெற்றியை சாதிக்க முடிந்தது.
(தொடரும்)

பாகம் 4


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க