டந்த செப்.23, சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளி ஒன்றில், கையில் கம்போடு ஓடி வரும் ஒருவரை ஒரு போலீசு கூட்டமே அடிக்க ஓடி வருகிறது. அந்தக் கூட்டத்தில் இருந்து இரண்டு போலீசு, துப்பாக்கியால் அந்த நபரை நோக்கி மிக அருகாமையில் இருந்து சுடுகிறது. கீழே விழுந்தவர் மீது பத்து போலீசு சூழ்ந்து தாக்குதல் தொடுத்திருக்கிறது.
நெஞ்சிலும் காலிலும் குண்டடிபட்டு கீழே விழுந்து அசைவற்றுக் கிடக்கும் அந்த நபரின் மீது ஒரு புகைப்படக்காரன் ஓடி வந்து நெஞ்சில் மிதிக்கிறான். கைகளால் அசைவற்ற அந்த நபரின் கழுத்தில் அடிக்கிறான். போலீசு கும்பல் அவனை இழுத்துச் செல்கிறது. மீண்டும் வந்து தனது ஆத்திரம் தீர மிதிக்கிறான் அந்த பயங்கரவாத புகைப்படக் காரன்.  மனித இனத்தின் இழிவான ஒரு உருவத்தை அந்தக் காணொளி அப்படியே எடுத்துக் காட்டுகிறது.
அந்த புகைப்படக்காரனின் பெயர் பிஜய் பனியா. அசாமின் தர்ராங் மாவட்ட நிர்வாகத்திற்காக வேலை செய்யும் பிஜய் பனியா, சிபஜாரில் மக்களை நிலங்களை விட்டு வெளியேற்றும் நிகழ்வைப் படம் பிடிக்க அனுப்பப்பட்டவன். போலீசின் குண்டுக்குப் பலியாகி இறந்து கிடந்தவரின் பெயர் மொய்னுல் ஹக். வயது 33. சிபஜார் பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர்.
படிக்க :
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
அந்த காணொளியை பார்த்த அனைவரும் பிஜய் பனியாவின் செய்கையை பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார்கள். சாகக் கிடக்கும் நபர் அல்லது இறந்து கிடக்கும் நபர் மீது இப்படி வெறியாட்டம் போடும் அளவுக்கு வன்மம் ஒருவருக்கு எங்கிருந்து வருகிறது?
சில பத்தாண்டுகளாக அசாம் மாநிலத்தில் நடந்துவரும் சிறுபான்மையின வெறுப்பு மற்றும் மதவாத அரசியல்தான் ஒரு புகைப்படக் காரனை வெறிகொண்ட ஓநாயாக மாற்றியிருக்கிறது. ஒரு தரப்பு மக்களை ‘அந்நியர்கள்’ என சுட்டிக்காட்டி அவர்களை பெரும்பான்மை மக்களின் எதிரியாகவும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவர்கள் வந்து பறிப்பதாகவும் கூறி நடத்தப்படும் இழிவான அரசியல் விளைவு அது.
கடந்த புதன்கிழமை இரவு, பெரும்பாலும் வங்காளத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்த கிராம மக்களுக்கு வெளியேறும் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் வீடுகளை காலி செய்யும்படி விரட்டப்பட்டார்கள். அந்த நிலங்களை இயற்கை விவசாயம் செய்ய அங்கிருக்கும் உள்ளூர் மக்களுக்கு கொடுக்கப் போவதாகக் கூறி அவர்களைக் காலி செய்தது மாவட்ட நிர்வாகம்.
“அந்நியர்களிடமிருந்து” உள்ளூர் மக்களின் நலன்களை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ற பெயரில் தான் இந்த வெளியேற்றத்தை நடைமுறைப்படுத்தியது அசாம் அரசு. எல்லை போலீசு படை முதல் அரை நீதித்துறை தீர்ப்பாயங்கள் வரை, “அந்நியர்களுக்கு” எதிரான வெறுப்பு ஊட்டி வளர்க்கப்பட்டிருக்கிறது. இந்த போலீசுப்படை தீர்ப்பாயங்கள் யாவும் சொல்லிக் கொள்ளப்படும் சட்டங்களைக் கூட மதிப்பதில்லை.
வங்காளத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் பிரிவினரை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை புலம்பெயர்ந்தவர்கள், ஊடுருவல்காரர்கள், அந்நியர்கள் என்றும் விரட்டயடிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் ஒரு பிம்பத்தை கட்டமைத்திருக்கிறது, ஆளும் வர்க்கம். அதனை வலுவாக்கியதோடு அரசியலாக்கி மக்கள் மனதில் வன்மத்தையும் வளர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்.
வெறுப்புமிக்க இந்த பிம்பக் கட்டமைப்பு அசாம் மாநிலத்திற்கு வெளியேயும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது‌. அதனால்தான், 2019 தேர்தலின்போது அமித்ஷா வங்காளதேசத்திலிருந்து வரும் புலம்பெயர் முசுலீம்களை “கரையான்கள்” என்று குறிப்பிட்டார்.
அசாம் மாநிலத்தில் உள்ள பழைய இனப் பதற்றங்கள் இப்போது இந்துத்துவ அரசின் வன்மத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளன. வங்காள முசுலீம் ‘அந்நியர்களை’ எதிரிகளாகக் காட்டி உள்ளூர் மக்களின் நலனை முன் நிறுத்தி பாஜக 2016-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் முதலில் ஆட்சியை பிடித்தது. இதில், குறிப்பிடப்படாத விஷயம் என்னவெனில் உள்ளூர் மக்கள் என்பது முஸ்லீம் அல்லாத மக்களை மட்டுமே குறிக்கும் என்பதாகும்.
“சட்டவிரோத குடியேறிகளை” களையெடுக்கப் போவதாக சொல்லிக் கொண்ட “தேசிய குடிமக்கள் பதிவேடு” (NRC), தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, இது தெளிவாகிவிட்டது. இந்த சட்டம் வங்காள இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான பாதையமைத்துக் கொடுத்துவிட்டு, வங்காள முஸ்லீம்களுக்கு கதவை அடைத்து விடுகிறது.
பாஜக, அசாம் மாநிலத்தில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தபோது இந்த எண்ணம் இன்னும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளப்பட்டது. முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தன்னை தானே இந்து தேசியவாதி என்று அழைத்துக் கொள்ளும் இவர் அசாமியர்களின் நலன்களை இந்துத்துவத்தோடு இணைப்பதை அரசியலாக முன்னெடுக்கிறார்.
மாநிலத் தேர்தலின்போது வெளிப்படையாகவே, தேர்தலை “நாகரிகப்போர்” என்றும் அசாமை வங்காள முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார். தற்போது, இவர் அரசாங்கம் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. கலப்பு திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்துத்துவத்தின் மிக விருப்பமான “லவ் ஜிகாத்” என்னும் பொய்ப் பிரச்சாரத்தையும் செய்து வருகிறது.
அதிகாரத்திற்கு வந்த உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வங்காள முஸ்லீம்கள் சட்டவிரோத குடியேறிகளாக பார்க்கப்பட்டார்கள். ஆனால், இப்போது சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களது வாழ்வுரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது வெளியான சிபஜார் படுகொலை காணொளி, இந்த வெளியேற்றும் நடவடிக்கைகள் இனியும் தொடரும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது.
படிக்க :
அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
பிஜய் பனியாவின் வெறுக்கத்தக்க கோபம் அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுதான் நடந்துள்ளதாக நம்மால் எடுத்துக் கொள்ள முடிகிறது. பனியா கைது செய்யப்பட்டிருக்கிறான். ஆனால், போலீசுத்துறையும், பனியாவும் முன்னும் பின்னுமாக ஒத்திசைந்துதான் நடந்து கொண்டார்கள் என்பதை மறைக்கிறார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இது சிபஜாரில் மட்டுமல்ல; இது அசாம் மாநிலம் முழுவதும் நடக்கும் போலீசுத்துறை வன்முறை ஒரு தொற்றுபோல் இருப்பதை காட்டுகிறது.
இப்படிப்பட்ட அமைப்பாக்கப்பட்ட வன்முறையை சர்மாவின் ஆட்சி இரட்டிப்பாக ஆக்கியிருக்கிறது. அவரது அரசாங்கம், குற்றங்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்டதாகவும் போலீசுத்துறைக்கு முழுசுதந்திரம் அளிக்கப்பட்டிருப்பதாகவும்  கூறுகிறது.
உழைக்கும் மக்களை பாகுபடுத்தி ஒருவருக்கு எதிராக மற்றொரு தரப்பை நிறுத்தி, சக மனித இனத்தையே வேட்டையாடும் இழிவான காரியத்தை பாசிசம் அரங்கேற்றி வருகிறது. அது பாசிசத்தின் அடிப்படைப் பண்பு. பாசிசக் கும்பலின், குறுகிய இனவாத, மதவாத அரசியலை வெறுத்து ஒதுக்குவதோடு, மக்கள் வர்க்கமாக அணிதிரளும் போதுதான் பாசிசத்தின் பிடியில் இருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும்.

ராஜேஷ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க