அசாம் தொகுதிகள் மறுவரையறை: வாக்குவங்கியை காவிமயமாக்கும் புதிய மாடல்!

காவிக் கும்பல் உருவாக்க இருக்கும் ‘புதிய’ இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது.

டந்த ஆகஸ்ட் மாதம் அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 14 நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையான தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. கும்பல் வெற்றி பெறும் வகையில் இத்தொகுதி மறுவரையறையைச் செய்துள்ளது.

அசாமில் மட்டுமல்ல, சென்ற ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டன. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள 53 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஜம்முவில் சட்டமன்றத் தொகுதிகள் 37-லிருந்து 43 ஆக உயர்த்தப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 68 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஷ்மீரில் சட்டமன்றத் தொகுதிகள் 46-லிருந்து 47 ஆக மட்டுமே உயர்த்தப்பட்டன. மொத்தத்தில், காஷ்மீர் பகுதியை விட ஜம்முவில் சட்டமன்ற தொகுதிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

அரசுக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை புகுத்தி காவிமயமாக்குவதுபோல, மக்கள் வாழும் பகுதிகளை தங்களுக்கு சாதகமான முறையில் சாதிரீதியாகவும், மதரீதியாகவும், இனரீதியாகவும் பிரித்து வரையறுப்பதன் மூலம் வாக்குவங்கியையும் காவிமயமாக்க தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க. கும்பல்.

அசாம் மாநிலத்தில் முஸ்லிம் மக்களை எதிரிகளாக காட்டி பெரும்பான்மையான இந்து மக்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்து இருக்கிறார்கள், இந்துமதவெறியர்கள். “வங்கதேச குடியேறிகள்-அந்நியர்கள்” என்ற இன அடிப்படையிலான வெறுப்பையும், “முஸ்லிம்” என்ற மத அடிப்படையிலான வெறுப்பையும் அசாமியர்களிடையே திட்டமிட்டு பரப்பி வருகிறது காவிக் கும்பல்.


படிக்க: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!


2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, அசாமின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் 34.22 சதவிகிதம். இதில் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த வங்காள வம்சத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் நான்கில் ஒரு பகுதியாக உள்ளனர். இது பாசிசக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு சாதகமாக உள்ளது.

அசாமை பொறுத்தவரை 35 சட்டமன்றத் தொகுதிகளிலும், 6 மக்களவைத் தொகுதிகளிலும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 31 சட்டமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். முஸ்லிம் மக்கள் மத்தியில் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) ஆகிய இரு கட்சிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.க கட்சியில் ஒரு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

அசாமில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. மாறாக, ஆளும் பா.ஜ.க. கும்பலின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் வகையில் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு; முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தொகுதிகளுக்கான பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 24-லிருந்து 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டில் புதிதாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சான்றாக, 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக முஸ்லிம் மக்கள் வசிக்கும் பார்பெட்டா பிராந்தியத்தில் சில தொகுதிகள் பட்டியலின மக்களுக்கும், மேற்கு கோல்பாரா தொகுதி பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ.க. வலுவான அடித்தளம் கொண்ட இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் வடக்கு அசாமில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால், முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் கீழ் மற்றும் மத்திய அசாமில் பெரும்பாலான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்துக்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

சான்றாக, போடோலாந்து பிராந்தியப் பகுதியில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 12-லிருந்து 15 ஆகவும், கர்பி அங்லாங் தன்னாட்சி பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாகவும், மூன்று வடக்கு அசாம் மாவட்டங்களில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதியும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பார்பெட்டா பிராந்தியத்தில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எட்டிலிருந்து ஆறாகவும், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியும் குறைக்கப்பட்டுள்ளன.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ரஃபிகுல் இஸ்லாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜானியா தொகுதியின் பெரும் பகுதியும் காங்கிரஸின் ஷெர்மன் அலி அகமது பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்பர் தொகுதியும் இணைக்கப்பட்டு புதிய மாண்டியா தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது இக்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்றத் தொகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் மற்றும் இந்துக்கள் வாழும் கிராமங்களை உள்ளடக்கிய கிராம பஞ்சாயத்துகள் கூட பிளவுப்படுத்தப்பட்டுள்ளன. பார்பெட்டாவில் உள்ள ஹல்தியா காவ்ன் பஞ்சாயத்து 10 கிராமங்களை உள்ளடக்கியது. ஜானியா சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த இந்த பஞ்சாயத்து உடைக்கப்பட்டு மூன்று வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது. “பாஜகவின் நலனை உறுதி செய்வதற்காக அவர்கள் பஞ்சாயத்துகளை கூட உடைத்துள்ளனர்” என்று தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் பார்பெட்டா நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் கலீல்.

மேற்கூறியவாறு அசாம் மாநிலத்தில் தொகுதிகளை மறுவரையறை செய்துள்ளதன் மூலம் வாக்குவங்கியை காவிமயமாக்கி ஒரு புதிய மாடலை உருவாக்கியுள்ளது, காவி பாசிச கும்பல். இனிவருங்காலங்களில் அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், காவிக் கும்பல் உருவாக்க இருக்கும் ‘புதிய’ இந்தியாவில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைமையை உருவாக்கி வருகிறது.


படிக்க: புதிய நாடாளுமன்றம் – யாருக்கு இது? | கவிதை


வாக்குவங்கியை காவிமயமாக்குவது என்ற பாசிச நடவடிக்கைக்கு எதிராக மாநில எதிர்க்கட்சிகள் பெயரளவிலான எதிர்ப்பையே தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் பா.ஜ.க. அரசின் வலது கையாக செயல்படுவதாக விமர்சித்து சில அடையாளப் போராட்டங்களை நடத்தியுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தொகுதிகள் மறுவரையறை நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. ஆனால், உச்சநீதிமன்றம் தொகுதி மறுவரையறைக்கு தடைவிதிக்காமல், பா.ஜ.க.வின் மற்றொரு ஏஜெண்டு போல செயல்பட்டுள்ளது.

சமீபகாலமாக, அசாம் மாநில அரசு முஸ்லிம் மக்கள் மீது “வங்கத்தேசத்தவர்கள்-அந்நியர்கள்” என்று இனவெறி நடவடிக்கைகளையும் “முஸ்லிம்கள்” என்று மதவெறி நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன்மூலம் முஸ்லிம் மக்களை எந்த உரிமைகளுமற்ற இரண்டாம்தர குடிமக்களாக மாற்றி வருகிறது.

ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசாமில் வசித்துவரும் வங்காள முஸ்லிம் மக்களின் வீடுகள், ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது’ என்ற பெயரில் இடிக்கப்படுகின்றன; அம்மக்கள் நிர்கதியாக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வங்காள முஸ்லிம் மக்களே குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர். கடந்த ஜூலை மாதத்தில் காய்கறிகளின் விலை உயர்வுக்கு வங்காள முஸ்லிம்கள் தான் காரணம் என்று வெறுப்பைக் கக்கினார், முதல்வர் சர்மா.

அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்குவங்கியை காவி மயமாக்குவதற்கான ஒரு தொடக்கக்கட்ட நடவடிக்கை ஆகும்.

“நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம்” என புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் உரையாற்றினார், பிரதமர் மோடி. மதவாத, இனவாத, சாதிவாத, கவர்ச்சிவாத, அடையாள அரசியல் என ஏற்கெனவே தேர்தல் ஜனநாயகம் சீரழிந்து போயுள்ளது. இப்போது வாக்குவங்கியை காவிமயமாக்கி வருவதன் மூலம் தேர்தலை ஒரு சடங்காக்கி, பாசிச சர்வாதிகாரத்தை நிரந்தரமாக்கியுள்ளது.

இருப்பினும் இந்த அடையாள தேர்தல் மூலமே பாசிஸ்டுகளை வீழ்த்தி விட முடியும் என எதிர்க்கட்சிகள் பகல்கனவு கண்டு வருகின்றன.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் செப்டம்பர் மாத இதழ்)விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க