அசாம் மாட்டுக்கறி தடை: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே காவி கும்பல் பசு பாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட தாங்கள் விரும்பும் உணவை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டந்த டிசம்பர் 4 அன்று அசாம் மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறிசைச்சியை விற்பதற்கும், சாப்பிடுவதற்கும் மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே மாநிலத்தில் உள்ள மாடுகள், மற்ற கால்நடைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதாகக் கூறி இஸ்லாமியர்களை ஒடுக்கும் விதமாக 2021 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட பசு பாதுகாப்புச் சட்டமானது இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மட்டும் மாட்டிறைச்சி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிற சமூகங்களைச் சேர்ந்த மக்களும் கோவிகள், சைவ மடாலயங்கள் அமைந்திருக்கும் 5 கி.மீ சுற்றளவிற்குள் மாட்டிறைச்சியை வாங்குவதற்கும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பசுபாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா “2021 சட்டம் வெற்றிகரமானது. இனிமேல் மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள், வீட்டு நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் போன்றவற்றில் மாட்டிறைச்சி விற்கவும் வாங்கவும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கொண்டு வந்த சட்டத்தை தற்போது மாநிலம் முழுவதும் விரிவு படுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷெர்மன் அலி அகமது “பா.ஜ.க எப்போதும் மத சிறுபான்மையினருக்கு எதிரானது. இந்த சட்டமானது அரசியல் அமைப்பின் மீதான தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: அசாம்: மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா


அசாம் மாநிலத்தின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (All India United Democratic Front – AIUDF) கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபிகுல் இஸ்லாம் “பா.ஜ.க அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள கோவா போன்ற மாநிலங்களில் இச்சட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “யார் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது” என்று அசாம் அரசிற்கு தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அசாம் அரசின் அறிவிப்பிற்குக் கண்டம் தெரிவித்துள்ள கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.டிசதீசன் “மாநிலத்தில் உள்ள மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காக சங்பரிவார் கும்பலானது திட்டமிட்டே இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரமாகவும் கலாச்சாரமாகவும் உள்ள நிலையில் அம்மக்களின் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிப்பதற்காகவே காவி கும்பல் பசு பாதுகாப்பு சட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளில் கூட தாங்கள் விரும்பும் உணவை உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி- ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறிப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தி வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க