நேற்று (19.07.2024) அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “2041 ஆம் ஆண்டில் அசாம் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமாக மாறிவிடும்” என்று முஸ்லிம் வெறுப்பைக் கக்கியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாமில் முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. 2041 ஆம் ஆண்டிற்குள் அசாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலமாக மாறும். இது உண்மை. இதை யாராலும் தடுக்க முடியாது. அசாமில் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் முஸ்லீம் மக்கள் தொகை சுமார் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் இந்துக்களின் மக்கள்தொகை சுமார் 16 சதவீதம் அதிகரித்து வருகிறது. புள்ளிவிவரங்களின்படி அசாமின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் இப்போது 40 சதவீதமாகிவிட்டனர்.
முஸ்லிம்களின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் பிராண்ட் அம்பாசிடராக ராகுல் காந்தி மாறினால், அது கட்டுப்படுத்தப்படும். ஏனெனில், அந்த சமூகம் அவர் சொல்வதை மட்டுமே கேட்கிறது” என தெரிவித்தார்.
முன்னதாக, ஜூன் 17 அன்று செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “1951 ஆம் ஆண்டு அசாமில் 12 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள்தொகை தற்போது 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் பல மாவட்டங்களை இழந்துள்ளோம். இது எனக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது எனக்கு வாழ்வா சாவா பிரச்சினை” என்று தெரிவித்திருந்தார்.
ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “1951 இல், முஸ்லிம் மக்கள் தொகை 24.68 சதவீதமாக இருந்தது. அவர் ஒரு பொய்யர். அவர் அசாம் முஸ்லிம்களை வெறுக்கிறார். 1951 இல் அசாம் இருந்தது. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அங்கு இல்லை (அசாமில் இருந்து பின்னர் உருவாக்கப்பட்டன). 2001 இல் 30.92 சதவீதமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 34.22 சதவீதமாக இருந்தது. அவரது பொய்களால், முழு நிர்வாகமும் முஸ்லிம்களை வெறுக்கிறது” என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.
படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!
ஜூலை 1 ஆம் தேதியன்று ஹிமந்த பிஸ்வா சர்மா, ஒரு ‘குறிப்பிட்ட மதத்தின்’ மக்களில் ஒரு பிரிவினரின் குற்ற நடவடிக்கைகள் கவலைக்குரிய விஷயம் என்று முஸ்லிம்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
“ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே குற்றம் செய்யப்படுகிறது என்று நான் கூறவில்லை, ஆனால் சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சமீபத்திய சம்பவங்கள் கவலைக்குரியவை” என்று சர்மா கூறியிருந்தார்.
ஜூன் 23 அன்று, மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் செய்த வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்களவைத் தேர்தலில் பங்களாதேஷ் சிறுபான்மை சமூக உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு வாக்களித்ததாக சர்மா கூறினார். அசாமில் பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த சிறுபான்மை சமூகம் மட்டுமே வகுப்புவாதத்தில் ஈடுபடுகிறது என்றும் அவர் கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி – மெய்தி மக்களிடையே இனக் கலவரத்தை உருவாக்கியதைப் போல், அசாமில் இந்து – முஸ்லிம் மதக் கலவரத்தை உருவாக்க முயல்கிறது பாசிச பா.ஜ.க. அதில் முன்னணியாகச் செயல்படுபவர் தான் வடகிழக்கின் அமித்ஷா என்று கூறப்படும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
இந்த பாசிச சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே சமூக நல்லிணக்கத்தைப் பேண முடியும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube