அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!

பா.ஜ.க ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் அனைத்து மதத்தினருக்கும் ‘பொதுவான’ சில தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அசாமில் பலதார மணம் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி, அசாம் மாநிலத்தில் பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவின் மீது மக்கள் தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக மாத இறுதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது, ஆளும் அசாம் மாநில பா.ஜ.க. அரசு.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பலதார மணத்தை தடை செய்யும் மசோதாவிற்கு ‘பலமான மக்கள் ஆதரவு’ கிடைத்துள்ளது என்று அறிவித்தார், அம்மாநில முதலமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மா. மசோதாவின் மீது பெறப்பட்ட பொதுமக்கள் கருத்து குறித்து X-இல் கருத்து தெரிவித்த அவர், “எங்கள் பொது அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் மொத்தம் 149 பரிந்துரைகளைப் பெற்றுள்ளோம். இவற்றில், 146 பரிந்துரைகள் மசோதாவுக்கு ஆதரவாக உள்ளன. இது வலுவான பொது ஆதரவைக் குறிக்கிறது” என்று தெரிவித்திருந்தார். மேலும், 45 நாட்களுக்குள் இம்மசோதாவின் இறுதி வரைவைத் தயாரிக்கும் பணியை அசாம் அரசு மேற்கொள்ளும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

கடந்த மே மாதமே அசாம் அரசு, இம்மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையின் சட்டபூர்வத் தன்மை குறித்து ஆராய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது. கௌஹாத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரூமி புகான் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில், அசாமின் அட்வகேட் ஜெனரல் தேபாஜித் சைகியா, அசாம் கூடுதல் அட்வகேட் ஜெனரல் நலின் கோஹ்லி மற்றும் கவுகாத்தி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நெகிபுர் ஜமான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், “பலதார மணம் தொடர்பான சட்டங்களை உருவாக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு” என்று குழு ஒருமனதாகக் கூறியதாக கடந்த மாதம் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார். மேலும், 2023-ஆம் ஆண்டு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய அசாம் அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.


படிக்க: பீமா கோரேகான் வழக்கு ஐந்து ஆண்டுகள் நிறைவு: உறுதியான பாசிச எதிர்ப்பு மட்டுமே இவர்களின் விடுதலைக்கான ஆயுதம்!


ஆளும் அசாம் பா.ஜ.க அரசின் சுயரூபத்தைப் பற்றியும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தாவின் பாசிச தன்மையை பற்றியும் அறியாதவர்களுக்கு அசாம் அரசின் இந்நடவடிக்கை முற்போக்கானதாகவோ பெண்ணுரிமை சார்ந்த திட்டமாகவோ தோன்றலாம். ஆனால், இது அசாம் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கான ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசின் அடுத்தக்கட்ட பாசிச திட்டமாகும்.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்கும் ஒரே குற்றவியல் சட்டமே பின்பற்றப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மதத்தினருக்கும் சிவில் சட்டம் வேறுபடும். அந்தவகையில், இந்துக்களின் சிவில் சட்டத்தின்படி ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும்போது ஒருவரால் இன்னொரு மணம் செய்துகொள்ள முடியாது. மனைவியை முறையாக விவாகரத்து செய்துகொண்ட பிறகே இன்னொருவரை மணக்க முடியும். ஆனால், இஸ்லாமியர்களின் சிவில் சட்டப்படி ஒருவர் மனைவியின் விருப்பத்துடன் நான்கு பேர் வரை மணந்துகொள்ள முடியும். இதனை, குறிவைத்தே தற்போது அசாம் பா.ஜ.க அரசு பலதார மணத்தைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது.

ஏனெனில், இஸ்லாமியர்களின் சிவில் சட்டத்தை ரத்து செய்து பொது சிவில் சட்டத்தை நிறுவ வேண்டும் என்பது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் நெடுநாள் திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க ஆட்சியில் உள்ள பல மாநிலங்களில் அனைத்து மதத்தினருக்கும் ‘பொதுவான’ சில தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது அசாமில் பலதார மணம் தடை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், லவ் ஜிகாத், நில ஜிகாத், வெள்ள ஜிகாத் என்று அசாமில் இஸ்லாமியர்களைக் கொடூரமாக ஒடுக்கிவரும் பாசிச ஹிமந்தா சர்மா அரசு, இந்த நரித்தனமான திட்டத்திற்கு ‘இஸ்லாமியப் பெண்களின் மேம்பாடு’ என்ற அரிதாரம் பூசுகிறது. 2017-ஆம் ஆண்டு முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தபோதும் மோடி அரசு இதே கதையைத்தான் கூறியது. ஆனால், இவர்களின் இஸ்லாமிய பெண்கள் மீதான அக்கறையின் லட்சணத்தை எடுத்துக்காட்ட பில்கிஸ் பானுவின் வாழ்க்கை ஒன்று போதும்.

எனவே, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் அனைத்து புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அசாம் பா.ஜ.க அரசின் பலதார மணம் தடை சட்டத்தையும் அம்பலப்படுத்தி அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.


சோபியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க