உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!

பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ம்மு காஷ்மீர் மாநில சிறப்புரிமை ரத்து, அயோத்தி இராமர் கோயில் திறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக்கொள்வதற்கு நீண்டகாலமாக பிரச்சாரம் செய்துவரும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

உத்தராகண்ட் மாநில சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்”, “வந்தே மாதரம்” என கூச்சலிட்டுக் கொண்டே “உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் 2024”-ஐ நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் இச்சட்டத்தின் வரைவை தயாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்தது அம்மாநில பா.ஜ.க. அரசு. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான குழுக்களை அமைக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக செயல்பட்ட இக்குழு கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி 392 சட்டப்பிரிவுகளை நான்கு பகுதிகளாக கொண்ட 172 பக்க அறிக்கையை சமர்பித்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனேயே அவசர அவசரமாக, பிப்ரவரி 5-ஆம் தேதி பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரை உத்தராகண்ட் அரசு கூட்டியது. 6-ஆம் தேதி மசோதாவை தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவை படிக்கவும் பரிசீலனை செய்யவும் அவகாசம் வழங்காமல், கேள்வி நேரத்தை (Question Hour) ரத்து செய்தும் குரல் வாக்கெடுப்பின் மூலமும் தனக்கே உரிய பாசிச வழிமுறைகளில் மசோதாவை நிறைவேற்றியது. மேலும், சட்டத்தின் வரைவை தயாரித்து மக்களிடம் முன்வைத்துக் கருத்துகள், ஆலோசனைகள் கேட்பதற்கு பதிலாக முதலில் கருத்து கேட்பதாக நாடகமாடிவிட்டு வரைவை தயாரித்தது உத்தராகண்ட் பா.ஜ.க. அரசு.


படிக்க: பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?


இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஸ்கர் சிங் தாமி, “திருமணம், பராமரிப்பு, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து போன்ற விஷயங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம உரிமையை பொது சிவில் சட்டம் வழங்கும். முக்கியமாகப் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்கவும், பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் தவறான செயல்களை ஒழிப்பதற்கும் உதவும். மாத்ரி-சக்திக்கு (பெண்கள்) எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டிய நேரம் இது. நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிரான பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் சம உரிமையைப் பெற வேண்டும்” என்று பேசினார்.

அதாவது, பெண்களின் நலனில் பா.ஜ.க. அரசு மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது என்பதே முதல்வர் புஸ்கர் தாமி பேச்சின் சாரம். ஆனால், பாசிச பா.ஜ.க. கும்பல் பெண்கள் மீது கொண்டுள்ள அக்கறைக்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இன்றுவரை நீதி கிடைக்காமல் போராடிவரும் பில்கிஸ் பானுவும், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்ட பெண்களுமே போதுமான சாட்சி. உண்மையில், காவிக்கும்பல் போடும் பெண்ணுரிமை வேடத்திற்கு பின்னால், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் உரிமைகள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு, சட்டப்பூர்வமாக ‘ஒரே நாடு ஒரே பண்பாடு’ கொண்ட இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் சதித்திட்டமே ஒளிந்திருக்கிறது.

இஸ்லாமிய வெறுப்புணர்வு சட்டம்

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில், குற்றவியல் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக பின்பற்றப்படுகிறது. ஆனால், திருமணம், விவாகரத்து, மறுமணம், சொத்துரிமை, வாரிசுரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை கையாள்வதற்கு ஒவ்வொரு மதத்தினருக்கும் அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தனிநபர் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதனை நீக்கிவிட்டு அனைத்து மதத்தினருக்கும் ‘ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை’ அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரப்போவதாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அந்த வகையில் 1947 அதிகார மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட்டில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உத்தராகண்ட்டில் கொண்டுவந்துள்ள பொது சிவில் சட்டத்தில் உள்ள பெரும்பாலான சட்டப் பிரிவுகள் “முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்கு (ஷரியத்)” எதிராக உள்ளதை சமூக செயற்பாட்டாளர்களும் பத்திரிகையாளர்களும் அம்பலப்படுத்தி உள்ளனர். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் உத்தராகண்ட் பெண்கள் குழு போன்ற சமூக செயற்பாட்டு குழுக்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமியர்களின் சட்ட நூலான ஷரியத்தே (Sharia) இந்தியாவில் இஸ்லாமிய மக்களின் தனிநபர் சிவில் சட்டமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதில், ஒரு ஆண் தனது மனைவியின் ஒப்புதலோடு நான்கு பெண்கள் வரை திருமணம் செய்துகொள்ளும் பலதார மணம்; இஸ்லாமிய பெண்களை வயதுக்கு வந்தவுடன் (15 வயதை எட்டியிருந்தால்) திருமணம் செய்து வைக்கும் வழக்கம் உள்ளிட்டவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்த அம்சங்களை குறிவைத்தே உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை கொண்டுவந்துள்ளது பா.ஜ.க. கும்பல். உத்தராகண்ட் பொது சிவில் சட்டப் பிரிவு 4(1), ஓர் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதை குற்றமாக்குகிறது; பிரிவு 4(3), பெண்களின் திருமண வயதை 18 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 21 ஆகவும் நிர்ணயிக்கிறது; விபச்சாரத்தில் ஈடுபடுவது, கொடுமைப்படுத்துவது, இரண்டு ஆண்டுகள் பிரிந்து செல்வது உள்ளிட்ட பல காரணங்களுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை கொண்டிருந்தாலும் விவாகரத்து அளிக்கப்படலாம் எனக் கூறுகிறது. இவையெல்லாம் கேட்பதற்கு முற்போக்கானதாக தோன்றலாம். ஆனால், உண்மையில் இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்தை ஒழித்துக்கட்டி அதன்மூலம் இஸ்லாமியர்களை அடக்கி ஒடுக்குவதே பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஏனெனில், இஸ்லாமிய மதத்தில் மட்டுமின்றி இந்து மதம் உள்ளிட்ட எல்லா மத தனிநபர் சட்டங்களிலும் வாரிசுரிமை, சொத்துரிமை உள்ளிட்ட பல விதிகளில் பெண்களுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அதற்கு எதிரான விதிகள் எதுவும் உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பெண்களுக்கு சம உரிமை வழங்குவதற்குதான் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதென்றால், இந்துமத சட்டத்தில் மூதாதையர்களின் சொத்தில் பெண்களுக்கு சொற்ப உரிமை அல்லது உரிமை மறுக்கப்படுவது போன்ற அநீதிகளை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டலாம் அல்லவா? அவ்வாறு செய்யாமல் இஸ்லாமிய தனிநபர் சட்டத்தை மட்டும் குறிவைப்பதிலிருந்தே இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான பாசிச தாக்குதல் என்பது தெளிவாகிறது.

மேலும், தற்போது இஸ்லாமிய பெண்களின் உரிமையை மீட்பதாக சொல்லும் பா.ஜ.க-வின் மூதாதையர்கள்தான், சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றபோது அம்பேத்கரை மூர்க்கமாக எதிர்த்தனர். 1951-இல் ஒருதார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்டத்திருத்தம் போன்ற சில திருத்தங்களை கொண்டுவருவதற்கான இந்துச் சட்ட மசோதாவை அன்றைய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். காவிக்கும்பலின் கடும் எதிர்ப்பால், மசோதாவின் ஒரு பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இதனையடுத்து, “தான் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதில் அர்த்தமில்லை” என்றுக் கூறி அம்பேத்கர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த காவி கும்பல் தான் இப்போது பெண்ணுரிமை, சமத்துவம் என்றெல்லாம் நாடகமாடுகிறது.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


“ஒரு முஸ்லீம் நான்கு மனைவியை வைத்துக் கொள்கிறான். நினைத்த நேரத்தில் ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்கிறான். வதவதவென பிள்ளைகளை பெற்றெடுத்து தங்கள் மதத்தவரின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்கிறான். இந்துக்கள் சிறுபான்மையாகிறார்கள். முசுலீம் ஷரியத் சட்டத்தை நாட்டின் சட்டமாக கொண்டுவந்துவிடுவான்” என்பதெல்லாம் காவிக் கும்பல் நெடுங்காலமாக பெரும்பான்மை‘இந்து’ மக்களிடையே அடித்தளத்தை உருவாக்குவதற்காக செய்துவரும் வெறுப்பு பொய் பிரச்சாரங்களாகும். இதனோடு பெண்கள் மீதான அக்கறை என்ற நாடகத்தையும் இணைத்து அரங்கேற்றிதான் மோடி கும்பல் முத்தலாக் சட்டத்தையும் தடை செய்திருந்தது. முத்தலாக் முறை தடை செய்யப்பட்டபோதே அது பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே என்பதை பலரும் அம்பலப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது பாசிசக் கும்பல் பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்துள்ளது.

மேலும், உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தின் விதிகளை மீறுபவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் சம்மந்தப்பட்ட நபரை நீதிமன்ற பிடி ஆணை (வாரண்ட்) இல்லாமலேயே கைது செய்யவும் அனுமதிக்கிறது. இவ்வாறு, சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வரையறுத்துள்ளதன் மூலம் வருங்காலங்களில் இஸ்லாமிய மக்களின் மீது சட்டப்பூர்வமாகவே பாசிச அடக்குமுறைகளை செலுத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளது பாசிசக் கும்பல்.

பாசிசக் கும்பலின் சோதனை முயற்சி!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க. கும்பல் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதை வைத்து நாடு முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் பெரும்பான்மை ‘இந்து’க்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை அறுவடை செய்துகொள்ளும்.

இன்னொருபுறம், பழங்குடி மக்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இச்சட்டத்திற்கு எதிரான பழங்குடியின மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துகிறது பா.ஜ.க. கும்பல். மேலும், இச்சட்டம் நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும் பழங்குடியின மக்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி பா.ஜ.க-வின் முக்கிய வாக்குவங்கியாக உள்ள அம்மக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும்.

இருப்பினும், உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போது பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தி என்று மட்டும் சுருக்கி பார்க்கக் கூடாது. பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக, சோதனை முயற்சியாகவே பாசிசக் கும்பல் தற்போது உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஏனெனில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துபோவதாக பா.ஜ.க கும்பல் அறிவித்தபோது அதற்கு பழங்குடியின மக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளிலிருந்தும் கூட எதிர்ப்புகள் கிளம்பின. பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ள தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பி தோல்வி முகத்தை மேலும் ஆழப்படுத்தும் என அஞ்சும் காவிக் கும்பல் தற்காலிகமாக பின்வாங்கியது. ஆனால், தற்போது மதங்களுக்கான தனிநபர் சிவில் சட்டங்கள் பொதுப்பட்டியலில் உள்ளதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, உத்தராகண்ட் மாநிலத்தில் சோதனை முயற்சியாக பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.

இதுகுறித்து பேசிய பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி, “உத்தராகண்ட்டில் இந்த மசோதாவை பரிசோதித்துப் பார்க்க பா.ஜ.க. விரும்புகிறது. இதற்கு என்ன எதிர்விளைவுகள் என்பதையும், ஒரு சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைத்தோ, அல்லது குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறியோ, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமா, நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் முன் இது நிற்குமா என்ற சட்ட அம்சங்களையும் பா.ஜ.க. ஆராய விரும்புகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இது ஒருவகையான பரிசோதனைதான். ஆனால் அதே நேரத்தில் தாங்கள் இதில் தீவிரமாக இருப்பதாக காட்டவும் பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது” என்கிறார்.

அதாவது, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் இந்துராஷ்டிரத்திற்கான சோதனைச்சாலையாக உள்ளதை போல தற்போது உத்தராகண்ட் மாநிலத்தை பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சோதனைச்சாலையாக கையிலெடுத்துள்ளது பாசிசக் கும்பல். அவ்வாறு உத்தராகண்ட் மாநிலம் தேர்தெடுக்கப்பட்டதற்கு குறிப்பான காரணங்கள் உள்ளன.

உத்தராகண்ட் மாநிலம் இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு சிறிய பசுவளைய மாநிலமாகும். சமவெளி முதல் மலைப்பகுதிகள் வரை எல்லா இடங்களிலும் இந்துக்கள் பரவி வசித்து வருகின்றனர். பத்ரிநாத், கேதர்நாத், ஹரித்வார், ரிஷிகேஷ், கங்கோதிரி, யமுனோதிரி போன்ற இந்துக்களின் புனித தளங்களும் இம்மாநிலத்தில் அதிகளவில் உள்ளன. இம்மாநிலத்தில் அடித்தளத்தை விரிவுப்படுத்தும் வேலையிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டு வருகிறது. இன்னொருபுறம் சமவெளி பகுதிகளில் வசித்துவரும் இஸ்லாமிய மக்கள் 13 சதவிகிதமே உள்ளனர். இதனால், காவி குண்டர்களால் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக கலவரங்கள், வெறுப்பு பிரச்சாரங்கள், வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்துவதற்கு ஏற்றவாறு இம்மாநிலம் உள்ளது. இவ்வாறு புவியியல் ரீதியாகவும் மக்கள் தொகை அடிப்படையிலும் இம்மாநிலம் பொது சிவில் சட்டத்தை சோதனை செய்வதற்கேற்ப உள்ளது.

உத்தராகண்ட்டை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுவருகிறது. இதுகுறித்து பேசிய ராஜஸ்தான் அமைச்சர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகான சட்டமன்றக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படும் என்று கூறினர். இஸ்லாமிய எதிர்ப்பு, அந்நிய எதிர்ப்பு மனநிலை ஊறிப்போன அசாம் மாநிலத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முதல் படியாக, பிப்ரவரி 24-ஆம் தேதி “இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935”-ஐ ரத்துசெய்ய அசாம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து பிற பசுவளைய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகிறது.

இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் காவி பாசிஸ்டுகள்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பழங்குடியின மக்கள் போன்ற பல்வேறு பிரிவு மக்களின் வெவ்வேறு பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு ஒரே நாடு ஒரே கல்வி வரிசையில் ஒரே பண்பாட்டையும் கலச்சாரத்தையும் நிறுவுவதையே காவிக் கும்பல் நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், காவிக் கும்பல் கொக்கரிக்கும் ஒரே நாடு – ஒரே கல்வி, ஒரே மொழி, ஒரே வரி என்பதெல்லாம் அனைவருக்கும் பொதுவானதோ குறைந்தபட்சம் இந்துக்களுக்கானதோ அல்ல. மாறாக அது அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் நலனுக்கானது என்பதுதான் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டத்தின் அனுபவம். பொது சிவில் சட்டமும் அத்தகையதுதான்.

பார்ப்பன சனாதன மரபுகள், பழக்கவழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை ‘இந்துக்கள்’ என்ற பெயரில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள்மீதும் திணிப்பதற்கான ஏற்பாடே பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள உத்தராகண்ட் பொது சிவில் சட்டம். காவி-கார்ப்பரேட் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஒரே வரி, ஒரே கல்வி, ஒரே தேர்தல் என பல்வேறு சட்டத்திட்டங்களை வைத்திருக்கும் பாசிசக்கும்பல் அடுத்தக்கட்டமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளதன் மூலம், இந்துராஷ்டிரத்திற்கான அடித்தளத்தை வேகமாக அமைக்க தொடங்கியுள்ளது.

தற்போது வேண்டுமானால் பாசிசக் கும்பலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பழங்குடியின மக்கள் உள்ளிட்டோருக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படலாம். ஆனால், பாசிசக் கும்பலின் கனவான இந்துராஷ்டிரத்தில் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்படும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள், பழங்குடியின மக்கள் ஆகியோரை ஒடுக்கும் வகையிலேயே இச்சட்டம் கொண்டுசெல்லப்படும்.

எனவே, தற்போது நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டமென்பது இஸ்லாமிய மக்களின் பிரச்சினையோ உத்தராகண்ட் மாநில மக்களின் பிரச்சினையோ அல்ல. இந்திய நாட்டின் பன்முகத்தன்மை, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் சாரந்த உரிமைகள் குறித்தான பிரச்சினை. எனவே, இப்பாசிச சட்டத்திருத்தத்தின் அபாயத்தை உணர்த்தி இதற்கு எதிரான போராட்டத்தை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் உடனடியாக கட்டியமைக்க வேண்டியுள்ளது.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க