பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?

பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

ன்றிய சட்ட ஆணையம் இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை காவிக் கும்பல் மற்றும் அவர்களின் சில அடிமைகளைத் தவிர பல்வேறு கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 27-ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில், “ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டம், இன்னொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டம் என்று இருவேறு விதிமுறைகளின் கீழ் இருந்தால் அந்த குடும்பம் முறையாகச் செயல்பட முடியுமா? அதேபோல, ஒரு நாடு எப்படி வெவ்வேறுவிதமான சட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்? நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால் பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துக்களைப் பரப்பி, மக்களைத் தூண்டிவிடுகின்றனர்” என்று பேசினார் பிரதமர் மோடி.

மோடியின் இந்தப் பேச்சுக்கும் பொது சிவில் சட்டத்திற்கும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், பழங்குடிகள், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்களின் பல்வேறு பிரிவினரும்கூட பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வின் சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேகாலயா முதல்வரும், பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, “வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்தியச் சிந்தனைக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.


படிக்க: பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !


மேகாலயா மட்டுமின்றி, மிசோரம் மற்றும் நாகாலாந்தும் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. நாகாலாந்தில், ஆளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சித் தலைவரான சிங்வாங் கோன்யாக், “நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம். நாகாலாந்தைப் பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371 (அ)-வால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம். ஒருவேளை, நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும், நாகாலாந்து சட்டமன்றத்தில் அமலாக அனுமதிக்கமாட்டோம்” என்று இந்தியா டுடே பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

ஏனெனில், ஒன்றிய அரசு அமல்படுத்தும் எந்தச் சட்டங்களும் நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலச் சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே அமலாகும். ஏற்கனவே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நாகாலாந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொது சிவில் சட்டத்திலிருந்து கிறித்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். கிறித்தவர்களுக்கும், சில பகுதி பழங்குடியினருக்கும் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்களிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நாகாலாந்து அமைச்சர் கே.ஜி.கென்யே.

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்ற கட்சிகளை, “வாக்கு பசிக்காக இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன” என்று இழிவுபடுத்துகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நாடு முழுவதற்கும், அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் என்று பேசினாலும், கிறித்தவர்கள், பழங்குடிகள், சீக்கியர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாபில் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்பதற்காகவே இந்த பிரிவு மக்களுக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்திருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்த முடிவானது, அவர்கள் கொண்டுவரத் துடிக்கிற “பொது” சிவில் சட்டத்தின் சொல்லிக் கொள்ளப்படும் நியாயவாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.


படிக்க: பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?


பொது சிவில் சட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்த முடியாது என்று அம்பலமாகியுள்ள இந்த உண்மையைத்தான், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர் சிங் சௌகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில், குடும்பச் சட்டங்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்டது, அன்றைய சட்ட ஆணையம். அது குறித்த, ஆலோசனைகளைக் கட்டுரையாகவும் வெளியிட்டிருந்தது.

அதில், “இந்தக் காலகட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது அல்லது விரும்பத்தக்கதும் அல்ல. மேலும் வேறுபாடுகள் இருப்பது பாகுபாட்டைக் குறிப்பதல்ல, ஆனால் அது ஒரு வலுவான ஜனநாயகத்தைக் குறிக்கிறது. கலாச்சார ரீதியாக வேறுபட்ட மக்களின் வேறுபாடுகளை பொதுவான சட்டத்தின் மூலம் அங்கீகரிப்பது என்பதை பெரும்பாலான நாடுகள் முன்னெடுக்கின்றன, இது பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு அநீதியாக இருக்கும்” என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது.

ஒரு இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி!

நாடு முழுவதிலும் எழுந்து வரும் எதிர்ப்புகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகள் காரணமாக, காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கியது போலவோ அல்லது குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது போலவோ, பொது சிவில் சட்டத்தை தடாலடியாக நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பாசிசக் கும்பல் தான் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் திட்டம்தான் என்றாலும், பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

அதனால்தான், பொது சிவில் சட்டம் என்று தாங்கள் என்ன கொண்டுவரப் போகிறோம் என்பதை வெளிப்படையாக வரைவறிக்கையாக மக்கள் முன் வைக்காமலேயே சட்ட ஆணையத்தை தனது கைப்பாவையாக்கிக் கொண்டு பொத்தாம் பொதுவாக கருத்து கேட்கிறது பா.ஜ.க. அரசு. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 44 மற்றும் ஷா பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டி, “இஸ்லாமியப் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்”, “நீதி வேண்டும்”, அதற்காகத்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது இக்கும்பல்.

“நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிற சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அது அவர்களின் எண்ணம். ஆனால் நான் சொல்கிறேன், இனி அவர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள முடியாது. அந்த நாள் முடியப்போகிறது. அத்தகைய நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தியாவில் பொது சிவில் சட்டம் வரப்போகிறது. இந்தியாவை உண்மையான மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் பொதுவில் நாடுதழுவிய அளவில் எதிர்க்கப்பட்டாலும், காவிக் கும்பல் செல்வாக்காக உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பசு வளைய மாநிலங்களில் இந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் வாக்கு வங்கியை உத்திரவாதப்படுத்தும். இக்காரணத்திற்காகவே தற்போது இதை விவாதப் பொருளாக்கியுள்ளது காவிக் கும்பல்.

ஆக மொத்தத்தில், இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இருக்கும், ஒரே நாடு, ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கும் பொது சிவில் சட்டமானது தற்போது இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமாக நம் முன் பாய்ந்து அச்சுறுத்தவில்லை. அது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக கையிலெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி, வெற்று புஸ்வானம்!


அப்பு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க