இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மொழி, இனம், கலாச்சாரத்தை ஒழித்து இந்துராஷ்டிர இந்தியாவை கட்டியமைப்பதே பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுவதின் நோக்கமாகும்.
உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர், கேசவ் பிரசாத் மவுரியா, கடந்த ஏப்ரல் 23 அன்று பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து யோகி அரசு தீவிரமாக பரீசிலித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளார். “பொது சிவில் சட்டம் அனைவரின் தேவையாகவும் உள்ளது. சட்டங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும், எங்கள் அரசாங்கம் சட்டத்தை ஒரே மாதிரியாக பயன்படுத்த போகிறது. பாஜக ஆளும் மாநிலம் அனைத்திலும், பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து விவாதம் நடந்து வருகிறது. உ.பி அரசாங்கத்தின் “சப்கா சாத், சப்கா விகாஸ்” அணுகுமுறையின்கீழ் நாட்டில் உள்ள அனைத்து சமூக பிரிவினருக்கும், அனைத்து அரசாங்க திட்டங்களும், ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படுகின்றன. பொது சிவில் சட்டம் உத்தரப்பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் நல்லது. அச்சட்டத்தை அமல்படுத்துவது, பா.ஜ.க.விற்கு எப்போதும் முதன்மையானவை, இச்சட்டத்திருத்தத்தை எதிர்கட்சிகள் ஆதரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
படிக்க :
♦ பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
♦ பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, “அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்தச்சட்டம், காஷ்மீர் சிறப்பு சட்டம் 370, முத்தலாக் பிரச்சினைகள் ஆகியவை தீர்க்கப்பட்டுள்ளன. தற்போது பொது சிவில் சட்டத்தின் மீது கவனத்தை குவிக்க வேண்டும். உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். எனவே அம்மாநில சட்டமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்படும். உத்தரகாண்ட் அரசை தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டபேரவை மூலம் படிப்படியாக, பொது சிவில் சட்டம் அமல்படுத்தபடும்” என்று அமித்ஷா கருத்து தெரிவித்திருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பாஜக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் பொது சிவில் சட்டத்தை அம்மாநிலத்தில் அமல்படுத்துவோம் என்று கருத்து தெரிவித்திருந்தார். பாஜக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் பொது சிவில் சட்டமும் ஒன்று எனகூறி, பொது சிவில் சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உத்தரகாண்ட் மாநில அமைச்சரவை குழுவில் சிறப்பு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ராஜ்ய சபா உறுப்பினர், அஜய் மிஸ்ரா, மத்தியப்பிரதேச அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநிலத்தில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து, பாஜக ஆளும் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து அரசியல் பிராச்சாரம் தொடங்கியுள்ளது. சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.
இச்சட்டம் குறித்து, பேசிய அசாம் மாநிலத்தில் உள்ள முக்கிய பாஜக தலைவர், ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய தலைவர்களின் ஒருவர், எங்கள் மாநிலத்தில் பழங்குடியினருக்கு என்று தனி மனித உரிமைகள் உள்ளன. அதனை நாங்கள் சீர்குலைக்க விரும்பவில்லை என்று தனது கருத்தை வெளிபடுத்தியுள்ளார். பொது சிவில் சட்டத்தை அமுல்படுத்துவதில் தற்போது, பழங்குடியின மக்களின் பண்பாடு கலாச்சாரம் இதற்கு தடையாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க பல்வேறு முயற்சிக்களை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின், பன்முகத்தன்மை கொண்ட மொழி, இனம், மதம், கலாச்சாரம், உணவு பழக்கவழக்கங்கள் இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு தடையாக இருந்து வருகின்றன.” என்று கூறியுள்ளார் என ஆங்கில இந்து செய்தி வெளியிட்டுள்ளது.