ஜார்கண்டில் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க-வின் கடைசி எம்.எல்.ஏ. இருக்கும்வரை இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்னொருபுறம் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமும் நடந்துகொண்டிருக்கிறது. இவ்விரண்டு மாநிலங்களிலும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. காவி கும்பல் இந்துமதவெறி பிரச்சாரத்தை முதன்மை ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளது. அதன் ஓர் அங்கமாக, ஜார்கண்ட் மாநில முதற்கட்ட தேர்தலுக்கான இறுதிநேர பரப்புரையில் ஈடுபட்ட அமித்ஷா இஸ்லாமிய வெறுப்புணர்வையும் எதிர்க்கட்சிகள் மீதான பொய் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார்.

நேற்று ஜார்கண்டில் மாநிலத்தின் தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “காங்கிரஸ் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி. அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்தி முஸ்லிம்களுக்கு வழங்க உள்ளனர். பா.ஜ.க-வின் கடைசி எம்.எல்.ஏ. இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்” என்று பேசி இஸ்லாமிய மக்கள் மீது அப்பட்டமான மத வெறுப்பை கக்கியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இஸ்லாமியர்களுக்கு வேலைகளில் நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்போவதாக அம்மாநிலத்தில் செய்திகள் பரவின. இதனைக் குறிவைத்தே அமித்ஷா இவ்வாறு பேசினார். ஆனால், இதற்கெதிராக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியதன் நியாயத்தை எடுத்துரைக்காமல், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, வேலைகளில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.


படிக்க: மணிப்பூர்: துஷார் மேத்தாவின் பொய்யை அம்பலப்படுத்திய குக்கி எம்.எல்.ஏ-க்கள்


மேலும், “(ஆளும்) ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலம் வீட்டில் ரூ.35 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. வீட்டில் ரூ.350 கோடி கைப்பற்றப்பட்டது. இவை யாருடைய பணம்? இந்தப் பணம் முழுக்க தன்பாத்-இன் இளைஞர்கள் மற்றும் தாய்மார்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம். இவ்வாறு கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் (எதிர்க்கட்சியினர்) நினைக்கின்றனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றை நாங்கள் சரிசெய்வோம்” என்று எதிர்க்கட்சிகள் மீதும் வெறுப்பைக் கக்கினார்.

அதேபோல், வங்கதேச மக்களை ‘ஊடுருவல்காரர்களாக’ சித்தரித்து பிளவுவாத அரசியல் பேசிய அமித்ஷா. “ஜார்கண்ட் மாநிலத்தின் உணவு மற்றும் வேலைகளை அவர்கள் பறிக்கிறார்கள். பழங்குடியினப் பெண்களை 2, 3-ஆவது திருமணம் செய்து அவர்களின் நிலத்தை கையகப்படுத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவோம்” என இனவெறியைத் தூண்டினார்.

இன்னொருபுறம், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல், நில ஊழல், சுரங்க ஊழல் என ஊழல் நிறைந்த அரசாங்கத்தை (எதிர்க்கட்சியினர்) நடத்தி வருகின்றனர். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்தால் “சங்கல்ப் பத்ரா” திட்டத்தை செயல்படுத்துவோம். நாங்கள் வழங்கும் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம். பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். நாடு முழுவதும் உள்ள எரிவாயு விலை போன்று இல்லாமல் இங்கு ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். மேலும், தீபாவளி மற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகைகளுக்கு இரண்டு இலவச கேஸ் சிலிண்டர்களை பா.ஜ.க. அரசு வழங்கும். பா.ஜ.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும். விவசாயிகளின் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்,” என்று சாத்தியமற்ற பல கவர்ச்சிவாத திட்டங்களைப் பட்டியலிட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் இறங்கினார்.


படிக்க: ராஜஸ்தான்: கல்வி மட்டுமல்ல, கல்விகூடங்களும் காவிமயம்!


அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை சேர்ந்த ஒட்டுமொத்த சங்கி கூட்டமும் வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமும் இந்துமதவெறி பிரச்சாரத்தின் மூலமுமே இந்து மக்களை தம் பின்னால் அணிதிரட்டிக்கொள்ளத் துடிக்கிறது. சான்றாக, ஜார்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத், இஸ்லாமிய மக்களை இந்து திருவிழாக்களின் மீது ‘கல்லெறிபவர்கள்’ என்று குறிப்பிடுவது; நில ஜிகாத், லவ் ஜிகாத், மக்கள் தொகையை இஸ்லாமியர்கள் மாற்றிவிடுவார்கள் என இஸ்லாமிய வெறுப்பு-பொய் பிரச்சாரம் செய்வது; இதன் உச்சமாக, “நாம் பிரிந்தால் படுகொலை செய்யப்படுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்து-இஸ்லாமிய பிரிவினையில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்.

2029 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதை உடனடி இலக்காகக் கொண்டுள்ள பாசிசக் கும்பல் அதற்கு உட்பட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெறத் துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்காக, பல்வேறு இந்துத்துவ-கவர்ச்சிவாதத் திட்டங்களின் மூலம் மக்களை அணுகுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தை அடிமையாக மாற்றிக்கொண்டு அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பூட்டுகிறது. எனவே, பாசிசக் கும்பலுக்கு எதிராகச் சரியான சித்தாந்தமும் பொருளாதார முன்திட்டமும் முன்வைக்கப்பட்டால் மட்டுமே பா.ஜ.க. கும்பலைத் தேர்தலில் கூட வீழ்த்த முடியும் என்பதையே இச்சம்பவங்கள் நிரூபிக்கின்றன. இல்லையெனில், பாசிசக் கும்பலின் அரசியலுக்கு நிகழ்ச்சிநிரலுக்கும் பலியாவதையும் விளக்கம் கொடுப்பதையும் தவிர்க்க முடியாது.


ஆலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க