ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசானது, மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் வாயில் கதவுகளுக்கு காவி சாயம் பூச வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவர்களிடத்தில் நேர்மறை உணர்வை வளர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் கல்விச்சூழல் மற்றும் கல்வித் தரம் குறித்த நேர்மறையான செய்தியை தெரிவிப்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
முதற்கட்டமாக, 10 பிரிவுகளில் தலா இரண்டு கல்லூரிகள் என மொத்தமாக 20 கல்லூரிகளில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏழு நாட்களுக்குள் கல்வி வளாக வாயில்களுக்கு காவி வண்ணம் பூசி முடிக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் சரிபார்ப்பதற்காக அதனை புகைப்படம் எடுத்து கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது கல்வி நிறுவனங்களின் சூழ்நிலையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஓர் அங்கம் என காவி கும்பலும் அதன் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.க. கும்பலின் இந்த காவிமயமாக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ், ராஜஸ்தானின் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசு அற்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வினோத் ஜாகர், “மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், சில பகுதிகளில் மாணவர்களுக்கு உரிய வசதிகளோ வகுப்பறைகளோ இல்லை. அத்தகைய சூழ்நிலையில், வாயிலுக்கு வண்ணம் தீட்டுவதால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முக்கியமான கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அரசியல் நிகழ்ச்சிநிரல்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பொது நிதியைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாசிச பா.ஜ.க. கும்பல் 2014-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்ததிலிருந்து இந்தியா முழுவதும் காவிமயமாக்க நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசும் காவி கும்பலின் முயற்சி இதற்கு எடுத்துக்காட்டாகும். ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வந்தே பாரத் தொடர்வண்டி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலின் லோகோ, அண்மையில் பி.எஸ்.என்.எல். லோகோ என அனைத்திலும் காவி நிறம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.
இந்த காவி திணிப்பானது வெறுமனே வெளிப்புற வடிவங்களில் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை. இந்திய கிரிக்கெட் அணி, தூர்தர்ஷன், பி.எஸ்.என்.எல். என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். கயவர்கள் திட்டமிட்டு புகுத்தப்பட்டு அதன் உள்ளடக்கமும் காவிமயமாக்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே காவி நிற மாற்றம் என்பது நடந்தேறுகிறது. தற்போது ராஜஸ்தானில் கல்வி நிறுவனங்களின் வாயில் கதவுகளுக்கு காவி சாயம் பூச வேண்டும் என்ற உத்தரவும் அத்தகைய நடவடிக்கையே.
கல்வி பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை பற்றிய பாடங்கள் புகுத்தப்படுவது; காவி-புராண குப்பைகளை புகுத்துவது; அறிவியல் பாடங்களை அகற்றுவது; சீர்த்திருத்த-முற்போக்கு சிந்தனையாளர்களின் பாடங்களை நீக்குவது; இஸ்லாமிய வெறுப்பூட்டும் கட்டுகதைகளை இணைப்பது; உண்மை வரலாற்றை திரிப்பது; கல்வித்துறையில் சங்கிகளை நுழைப்பது உள்ளிட்டு கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை பாசிசக் கும்பல் இந்தியா முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இந்த கல்வி காவிமயமாக்க நடவடிக்கையில் ராஜஸ்தான் மாநிலம் முன்னணியில் விளங்குகிறது. அதன் ஓர் அங்கமாகவே தற்போது கல்வி நிறுவனங்களின் வாயில்களுக்கு காவி சாயம் பூசும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram