ந்திய பள்ளிகளை இந்துராஷ்டிரத்திற்கான குரு குலமாக மாற்றி அமைக்கும் பணியில் தற்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதைப் பல்வேறு முனைகளில், பள்ளி பாடத்திட்டத்திலும் மாணவர்கள் மத்தியிலும் திணிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ மாவட்டத்தில் உள்ள அமினாபாத் இன்டர் காலேஜ் பள்ளியில் இந்துத்துவத்தைத் திணிக்கும் விதமாக A என்றால் இனிமேல் Apple இல்லை அர்ஜுனா (Arjuna), B என்றால் பலராமன்  (Balarama), C என்றால் சாணக்யா (Chnakya) என்று பள்ளி மாணவர்களிடையே இந்துத்துவ – பார்ப்பன மதவெறி ஊட்டப்பட்டு வந்தது அம்பலமானது.

இது குறித்து அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, படிக்கும்போதே குழந்தைகளுக்கு இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு, பண்பாடு, விழுமியங்கள் ஆகியவற்றை கதை, பாடல்கள், நாடகங்கள் இதர வழிமுறைகளின் மூலம் கற்றுத்தர வேண்டுமென்றும், அதற்காகத்தான் இந்த மாதிரியான முயற்சிகளை எடுத்திருக்கிறோம் என்றும் கூறினர். அர்ஜுனன் பலராமன் சாணக்கியன் ஆகியோர்தான் இந்தியாவின் விழுமியங்களா? சணக்கியரின் விழுமியங்கள் நமக்குத் தெரியாதா என்ன? இந்த விழுமியங்களைத் தான் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தப் போகிறார்களாம்!

ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்சி செய்யவில்லை. பார்ப்பன – இந்து பயங்கரவாத கலாச்சாரத்தை மேம்படுத்தவே இவ்வாறான முயற்சிகளை வெளிப்படையாகவோ அல்லது  மறைமுகமாகவோ வலுக்கட்டாயமாகச் செய்து வருகிறது. இது மாதிரியான பல்வேறு நிகழ்வுகள் நடந்திருக்கிறது. அதற்குப் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான்; இராமனைப் போல் மறைந்திருந்து அம்பு எய்கிறது.

படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இல்லை; கர்நாடகாவிலும் 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அந்தமானில் சிறையில் இருந்த சாவர்க்கர் புல்புல் பறவையில் அமர்ந்து இந்தியாவுக்கு பறந்து வந்ததாக எழுதப்பட்டிருந்தது. புல்புல் பறவை வேண்டுமானால் சிறைக்குள் செல்லும் அளவிற்குச் சிறியதாக இருந்திருக்கலாம். ஆனால், சாவர்க்கர் இறக்கையில் அமர்ந்து செல்லும் அளவிற்கு மந்திரவாதியா என்ன? இந்த மந்திரவாதியின் உண்மையான வரலாற்றை மறைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவனை சுதந்திரப் போராட்ட வீரராக காட்டுவது போன்று பல சாணக்கியத்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ‘அழகு’ என்னவென்றால், சில மாதங்களுக்கு முன் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், சாவர்க்கர் சொன்னதால்தான் வேலூர் கலகம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னோடியாக அமைந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சாவர்க்கரை ஒரு வரலாற்றாசிரியர் என்றும் கூட எழுதப்பட்டிருந்தது. இது உத்தரப்பிரதேசத்திலோ கர்நாடகாவிலோ நடந்தது அல்ல தமிழ்நாடு அரசின் பாடநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தமிழக மண் பெரியாரின் மண்; இம்மண்ணில் காவிகளுக்கு இடமில்லை என்று கழக கண்மணிகள் சிலாகித்துக் கொண்டிருக்கின்றன. (கழக கண்மணிகள் காவிகளுடன் சமரசம் செய்து கொண்டிருப்பது தனி கதை) ஆனால் தமிழக வரலாற்றையே மாற்றி எழுதிக் கொண்டு இருக்கின்றன ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க பாசிச கும்பல். இவ்வாறு காஷ்மீர் முதல் குமரி வரை கல்வித்துறையை பாசிச கும்பல் கவ்விக்கொண்டு வருகின்றது.

மேலும், பள்ளிகளின் முதல்வராகவோ அல்லது நிர்வாகியாகவோ சங்கர மடத்தின் ஆசியுள்ளவரை பாசிச கும்பல் நியமித்து வருகிறது. இந்நடவடிக்கையின் மூலம் இந்துராஷ்டிரத்தை அமைப்பதில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறுகிறது.

படிக்க: ‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்க வைப்பதற்காக சில மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக மேளம்(Drums) வாசிக்கப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அதேபோல், கராத்தே பயிலும் மாணவர்களையும் பேரணிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயார் செய்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பகலில் எந்தப் பயிற்சியும் கொடுப்பதில்லை. இரவு நேரங்களில் 8 அல்லது 9 மணி போலத்தான் பயிற்சிக் அளிக்கப்படுகிறது.

இரவில் இவ்வளவு தாமதமாகப் பயிற்சி என்ற பெயரில் பள்ளிக்கு வரச்சொல்வதைப் பற்றி விசாரிப்பதற்காக ஒரு மாணவரின் பெற்றோர் பள்ளியின் முதல்வரிடம் கேட்டப்போது, பள்ளியின் முதல்வர் கூறியது, “இந்த மாதிரி இரவில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று எனக்கு எதுவும் தெரியாது” என்று பதிலளித்தார். இந்த விசயத்தைப் பற்றி உடற்கல்வி ஆசிரியரிடம் கேட்ட போதும் அவர் தனக்கும் எதுவும் தெரியாது என்றும், தான் சில நாட்களாக விடுமுறையில் இருப்பதாகவும் கூறினார். பிறகு தான் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நபர் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர் இல்லையென்பதும் வெளியில் இருந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. வெளியிலிருந்து பள்ளிக்குள் ஒருவர் வந்து மாணவர்களுக்கு இதுபோன்று பயிற்சியளிப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் இரகசிய சாகா பயிற்சிக்கான சான்றாக அமைந்துள்ளது.

இதில் மோசமான விசயம் என்னவென்றால், அந்த மாணவர்களுக்கு நாம் எதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் ஆர்.எஸ்.எஸ்–இன் ஊர்வலத்திற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான பயிற்சிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இது ஏதோ சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் மட்டும் நடப்பது அல்ல; தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இது போன்ற சாகாப் பயிற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நாடு முழுவதும் தீவிரமாகத் தனது காவி சூலாயுதத்தை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது. இந்த சூலாயுதத்தை உடைப்பதற்கு நமது பார்ப்பன எதிர்ப்பு மரபை போர்வாளாக ஏந்த வேண்டியுள்ளது.

அசரத்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க