ள்ளி குழந்தைகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இத்தொலைக்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளே நடத்தி வந்த நிலையில், தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காகவும் கூடுதலாக ஒரு தொலைக்காட்சியை அமைப்பதற்காகவும் முதன்மை செயல் அலுவலரை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்காக சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில், ஊரறிந்த சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனல் இணை நிறுவனரும் அவரது நண்பருமான சங்கி மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது திமுக ஆதரவாளர்கள் மத்தியிலும் ஜனநாயக சக்திகள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை விமர்சித்தும் மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து செய்ய கோரியும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்தே, தற்போது மணிகண்ட பூபதியின் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

***

கல்வித் தொலைக்காட்சிக்கான முதன்மை செயல் அலுவலரை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது; தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளைக் கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

70 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 16 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதி நேர்காணலில் பங்கேற்ற 3 பேரில், சங்கியான மணிகண்ட பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்நியமனத்திற்கு எதிர்ப்பு எழத் தொடங்கியது. நடிகர் கவிதா பாரதி உட்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் “ரிசைன் அன்பில் மகேஷ்” (#Resign_Anbil_Mahesh) என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கியது திமுக ஆதரவாளர்கள்தான் என்றும், தீவிர திமுகவினர் இதில் பங்கேற்றனர் என்றும் ட்விட்டர் ட்ரெண்டிங்கின் போக்கை அவதானிப்பவர்களும், பல்வேறு கட்சிகளின் ஐடி விங்கைச் சேர்ந்தவர்களும் கூறினர். பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் பகிரங்கமாகவே தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மனித நேய மக்கள் கட்சியைச் சார்ந்த ஜவாஹிருல்லா; எஸ்.டி.பி,ஐ. கட்சியின் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் மூத்த பத்திரிகையாளரும் அரசு நடத்திய நேர்காணலில் பங்கேற்றவருமான திருஞானம் என்பவர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஸ்டாலினுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதினார். “பல்வேறு முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும்; ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை போன்ற கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டுக் காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?” – என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், “தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?” என்று கேள்வி எழுப்பிய அவர், “சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை, இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்” என்றும் எழுதியுள்ளார்.

***

முதன்மை செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த 70 பேரில், தேர்வு செய்யும் குழுவால் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மணிகண்ட பூபதி பிரபல சங்கியான ரங்கராஜ் பாண்டேவின் மூளையாகச் செயல்பட்டவர். பல ஆண்டுகள் தினமல(ம்)ர் பத்திரிகையிலும், தந்தி, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளிலும் வேலை செய்தவர். குறிப்பாக ரங்கராஜ் பாண்டே தான் கூறிய பொய்யினால் அம்பலப்பட்டு மூலையில் ஒதுக்கப்படும் போதெல்லாம், மணிகண்ட பூபதி ஓர் மீட்பரைப் போல பாண்டே-வை காப்பாற்றி மறுவாழ்வு அளித்திருக்கிறார்.

தோழர் செங்கொடி ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி உயிர் தியாகம் செய்தபோது தினமலரில் வேலைப் பார்த்த பாண்டே, அவர் காதல் விவகாரத்தால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தார். பின்னர் அது பொய் தகவல் என்று நிரூபிக்கப்படவே தினமலரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். அப்போது பாண்டே-வை தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தார் மணிகண்ட பூபதி. சமீபத்தில் தந்தியும் பாண்டே-வை ஓரங்கட்டிய போது அவருடன் சேர்ந்து யூடியூப்-இல் “சாணக்யா” சேனலை நடத்தி வந்தார்.

“சாணக்யா” என்பது மற்ற யூடியூப் சேனல்களைப் போன்றதல்ல. அது ஆர்.எஸ்.எஸ்-இன் பிரச்சார ஊடகம். இச்சேனலிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு காணொளிகளின் தொடக்கத்திலும் திருவள்ளுவரின் சித்திரத்தைப் பட்டையும் கொட்டையும் அணிந்துகொண்டு காவி ஆடை உடுத்தியிருப்பதாகக் காட்சிப்படுத்துவார்கள்.

போலித் தகவல்களை அடுக்கிவைத்து, பொய் பிரச்சாரங்களை உண்மை போன்றே சித்தரிக்கும் வேலையை அச்சேனல் தொடர்ந்து செய்துவருகிறது. மோடி அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது, நம் பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்று நமக்கு தெரிய வேண்டாமா? என்றும் காஷ்மீரிகளுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கும் நமக்கு முகவட்டு வித்தியாசம் தெரியாது என்றும் அதற்காகத்தான் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்தது சாணக்யா.

நீட்-க்கு ஆதரவாக போலியான புள்ளிவிவரங்களை அடுக்கி பிரச்சாரம் செய்வது, உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது என ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு ஆதரவாக கருத்து பிரச்சாரம் செய்வதையே முதன்மை கடமையாக ஏற்று செய்யும் சங்கி சேனல் சாணக்யா. ஆர்.எஸ்.எஸ்.-இன் சித்தாந்தத்திற்கு சேவை செய்யும் சேனலின் இணை நிறுவனராக இருந்த மணிகண்ட பூபதியைத்தான் பள்ளி குழந்தைகள் படிக்கும் தொலைக்காட்சியில் அரியணையிட்டு அமரவைத்தது திமுக அரசு.

ஒருவேளை மணிகண்ட பூபதியின் நியமனம் நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், கல்வி தொலைக்காட்சியிலும் திருவள்ளுவர் காவியிலேயே காட்சி தந்திருக்கக் கூடும்; தமிழ் பாட வேளையில் ராமாயணமும் மகாபாரதமும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும், அறிவியல் பாடத்தில் விநாயகருக்கு யானை தலையை வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி என்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.

***

இந்த ஆபத்துக்களுக்கு எதிராக தமிழக ஜனநாயக சக்திகள் குரல்கொடுத்து முறியடித்துள்ள போதும் திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் மணிகண்ட பூபதியின் நியமன விவகாரத்தில் கூட திமுகவை நோகாமல் விமர்சனம் செய்ய எண்ணுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் நகைக்கத் தக்கதாக உள்ளது.

தேர்வுக் குழுவைச் சேர்ந்தவர்களே மணிகண்ட பூபதியை நியமித்திருப்பார்கள், எனவே இந்நியமனம் குறித்து மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது; திமுக எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்; இது குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும்; கல்வித்துறை அமைச்சர்தான் பிரச்சனை – என்று பேசுகின்றனர்.

திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போகிறது என்று முற்போக்காளர்களில் ஒரு பிரிவினரும் புரட்சிகர சக்திகளும் விமர்சனம் வைக்கும் போதெல்லாம் இதே வகையான வாதங்களே கிளப்பிவிடப்படுகின்றன. எனில் ஒரு கேள்வி எழுகிறது, ஸ்டாலினைத் தவிர திமுகவில் அனைவரும் சங்கிகளா, திராவிட உணர்வு ஒருவருக்குமே இல்லையே?

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பேசிய ஸ்டாலின், “ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் திமுக குறைந்தபட்ச சமரசம்கூட செய்துகொள்ளாது” என்று கூறினார். ஆனால் மணிகண்ட பூபதியின் நியமனம் குறித்து திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது என்ன? “பாண்டே என்னுடனும்தான் வாட்சப் தொடர்பில் உள்ளார்; அதற்காக நான் என்ன அந்த சித்தாந்தம் உடையவனா? ஒருவருடைய செயல்பாடுதான் முக்கியம்” என்றார்.

இதுதான் சமரசமற்ற போக்கிற்கு சான்றா? கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகுதான், நான் பெரியாரின் வாரிசு.. கலைஞரின் வாரிசு! திமுக இவ்விசயத்தில் ஏமாறாது, மணிகண்ட பூபதி நியமனம் குறித்து விசாரணை நடத்துகிறோம் என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.

நமக்கு வெளிப்படையாக தெரிந்தவகையில் மட்டும் திமுக ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அரசுப் பொறுப்பில் அமர்த்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பச்சை சங்கி ராமசுப்ரமணியன் என்பவர் அறநிலையத் துறைக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கோவில்களை மேம்படுத்தவும் புனரமைக்கவும் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் தலைமைக்குழுவில் சங்கியான ராமசுப்ரமணியன் ஓர் உறுப்பினர்.

ராமசுப்பிரமணியன் முன்னாள் பாஜக ஆதரவாளர். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் கட்ட முதல் செங்கல் வாங்கி கொடுத்தவன் நான்” என்று தன்னை பெருமைக்குரிய சங்கியாக வெளிப்படையாகவே காட்டிக் கொள்பவர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மீது கருத்து முரண்பாடு கொண்டதாக காட்டிக்கொண்டு தனது பேட்டிகளில் அக்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். இன்று திமுக ஆதரவாளராக யூடியூப் சேனல்களில் பேட்டியளித்துவருகிறார்.

ஆனால் பாஜகவை விமர்சித்தாலும்கூட இன்றும் தன்னை பல்வேறு பேட்டிகளில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராகவே கூறிக்கொள்கிறார். வீடு தேடி கல்வித் திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் சிறந்த முறையில் சேவையாற்றுவார்கள் என்று கூறியது, தில்லை சிற்றம்பல மேடையில் பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் மறுத்த விவகாரத்தில், அப்பட்டமாக தீட்சித பார்ப்பனர்களுக்கு ஆதரவாக பேசியது ஆகியவற்றை முன்பே நாம் புதிய ஜனநாயகத்தில் அம்பலப்படுத்தியுள்ளோம்.

மணிகண்ட பூபதி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக ஆதரவு மனநிலை கொண்டவர்கள் யாரும் ராமசுப்ரமணியன் விவகாரத்தைக் கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் பாஜக எதிர்ப்பாளராகவும் திமுக ஆதரவாளராகவும் காட்சி தருகிறார். மணிகண்ட பூபதியும் அப்படி ஒரு மருவை வைத்துக் கொண்டு வந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளச் சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் விவகாரம், காந்தியைச் சுட்டது கோட்சே என்று சொல்லக்கூடாது என்று கோவை போலீசு மிரட்டிய விவகாரம், இந்து முன்னணி கோரிக்கையை ஏற்று வாணியம்பாடி உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறிக்கு தடை உள்ளிட்டு பல்வேறு விவகாரங்களில் அரசுக்கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ். நுழைந்துள்ளது என்று திமுக ஆதரவாளர்கள் கூறிவந்தனர். அது உண்மைதான் என்றபோதும் தனது வாதங்களில் திமுக ஆர்.எஸ்.எஸ்-பாஜகவுடன் சமரசமாகப் போவதை மறைப்பதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!

தற்போது ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!

இந்த விசயத்தில் திமுக-வை இஸ்லாமியக் கட்சிகள் கண்டித்ததே தவிர வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கூட்டணிக் கட்சிகள் யாரும் கண்டிக்கவில்லை. எங்கு விமர்சனம் வைத்தால் கூட்டணிக்கு கேடு வந்துவிடுமோ, இல்லை ஆர்.எஸ்.எஸ்-பாஜக எதிர்ப்பின் பலம் குறைந்துவிடுமோ என்று கருதுகின்றனர். ஆனால் இதுபோன்ற தருணங்களில், திமுக-வை விமர்சிக்காமல் போவதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிற்கு சாதகமாகப் போய்விடும். ஒருவேளை மணிகண்ட பூபதி நியமனத்தை எதிர்த்து புரட்சிகர-ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்காமல் இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

திமுக-வின் தவறுகளையும் சமரசங்களையும், எந்த அளவிற்கு அம்பலப்படுத்தி புரட்சிகர – ஜனநாயக சக்திகள் கேள்வி எழுப்புகின்றனவோ அந்த அளவிற்குதான் ஆர்.எஸ்,எஸ்-பாஜக-வின் நடவடிக்கைகளை முறியடிக்க முடியும். திமுக-வில் ஒரு பிரிவினரையும் பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு கொண்டு வரமுடியும். அவ்வாறு செய்யத் தவறினால் அது ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் வெற்றிக்கே வழிவகுக்கும்.


துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க