25.09.2022

அக்டோபர் 2 : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி!
தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்!

புமாஇமு கண்டன அறிக்கை !

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் காவி பயங்கரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதற்கு உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

சாலையின் இடது புறம் செல்ல வேண்டும், சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது, காயம் ஏற்படுத்தக் கூடிய கம்பு, ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது என்ற பல்வேறு விதிமுறைகளை சொல்லி போலீசுத்துறை அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காவி பாசிச கும்பலுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால் நிச்சயம் கலவரத்தை திட்டமிட்டு நடத்துவார்கள். இது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என்றும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தினால், தமிழகத்தில் அது ஒரு கருப்பு நாள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி சமூக நல்லிணக்கத்துக்கான பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். முற்போக்கு, புரட்சிகர ஜனநாயக சக்திகள் பலரும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

சூத்திரர்கள் – வேசி மக்கள் என்று சொல்லும் மனுதர்மத்தை வைத்து நம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்தி வரும் பார்ப்பன சனாதன கும்பலுக்கு எதிராக இந்து மதத்தைவிட்டு வெளியேறுவோம் என்று சொன்ன ஆ.ராசாவை, மனுதர்மத்தை இழிவாக பேசிவிட்டார் என்று அவருக்கு எதிராக தமிழகத்தில் பல இடங்களில் திட்டமிட்டு கலவரத்தை அரங்கேற்றியது இந்து முன்னணி உள்ளிட்ட காவி பாசிச கும்பல்.

அதில் ஒரு பகுதியில் இந்து முன்னணியின் கடை அடைப்பு நாடகத்திற்கு ஒத்துழைக்காத முஸ்லீம்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கடைகளையும் வீடுகளையும் அடித்து நொறுக்கினார்கள் என்பது சமீபத்தில் நாம் கண்க்கூடாக பார்த்தோம்!

ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் மலையளவு விநாயகர் சிலைகளை வைத்து முஸ்லீம்களுக்கு எதிராக கலவரத்தை நடத்துவார்கள். இந்த காவி பாசிச கும்பலை தமிழகத்தில் பேரணி நடத்துவதன் நோக்கம் தமிழகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தாக மாற்றும் முயற்சியின் முதல் படியே. இதற்கு ஒருபோதும் முற்போக்கு புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது! சாதி, மதப் பிரிவினைகளை ஏற்படுத்தி உழைக்கும் மக்களை மோதவிட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க துடிக்கும் இந்துமதவெறி பாசிச கும்பலை விரட்டியடிப்போம்!


இவண்,
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க