10.11.2024
அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா?
பத்திரிகை செய்தி
நவம்பர் இரண்டாம் தேதியன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை – அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேரை கந்த சஷ்டி கவச பாராயணம் செய்ய வைத்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மேலும் 738 மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும், அடுத்தடுத்து 12 கோவில்களில் இதுபோல் பாட அனுமதிக்கப் போவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார்.
இந்நிகழ்வு குறித்து பல்வேறு ஜனநாயக சக்திகளும் எதிர்த்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இது குறித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?” என அனைவர் காதிலும் பூசுற்றுகிறார் அமைச்சர் சேகர்பாபு. ஆனால், இது ஏதோ வழக்கமாக நடக்கும் நிகழ்வு அல்ல. இதை சாதாரணமாகக் கடந்து போகவும் முடியாது. முன்பு இது போன்ற நிகழ்வுகளில் பள்ளி – கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை. ஆனால், தற்போது ஈடுபடுத்தி வருகிறார்கள் என்ற வித்தியாசம் கூட தெரியாதவர்களா நாம்.
சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட “முத்தமிழ் முருகன் மாநாட்டில்”, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கந்த சஷ்டி பாராயணம் கற்றுக்கொடுத்து பாட வைப்பது என்ற தீர்மானம் போடப்பட்டது. அத்தீர்மானங்களை திரும்ப பெற வேண்டும் என புரட்சிகர, ஜனநாயக சக்திகள் குரலெழுப்பியிருந்த நிலையில், அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது மட்டுமின்றி, காலங்காலமாக நடப்பதுதான் என்றும் நியாயப்படுத்துகிறார் அமைச்சர் சேகர்பாபு.
இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில்களை நிர்வாகம் செய்வதற்கான துறையே ஆகும். மாணவர்களிடையே மதப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது அதன் வேலை அல்ல. ஆனால், சேகர்பாபு தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை மாணவர்கள் மத்தியில், இந்துத்துவ கருத்துகளை திணிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இது, தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்எஸ்எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.
ஒருபுறம் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே அதனை வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தி வருகிறது தி.மு.க அரசு. மறுபுறம் அரசு சார்பிலேயே அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும், பெண்களை இழிவுப்படுத்தும் கந்தசஷ்டி கவசம் மாணவர்களை வைத்து பாராயணம் செய்ய வைக்கப்படுகிறது. இவையெல்லாம், பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழ்நாட்டில் வளர்வதற்கு அடித்தளமிடுவதாகவே அமையும். அறிவியலுக்கு புறம்பான விஷயங்களை மாணவர்கள் சிந்தனையில் திணித்து எதிர்காலச் சமூகத்தை முடக்கும் தி.மு.க அரசின் இந்த அபாயகரமான போக்கிற்கு எதிராக வலுவான கண்டனத்தை எழுப்ப வேண்டும் என எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக, தமிழ்நாட்டு மாணவர்களையும் மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram