09.12.2024
பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெறு!
பாசிஸ்டுகளுக்கு துணை போகும் செயல்களை உடனே நிறுத்து!
கண்டன அறிக்கை
கடந்த டிசம்பர் 4 அன்று, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பொன்று, கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மகாவிஷ்ணு என்ற சங்கி பிற்போக்குத்தனமாகப் பேசிய வீடியோ வெளிவந்து வைரலாகப் பரவியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்நபர் கைது செய்யப்பட்டார்.
இனிமேல் அரசுப் பள்ளிகளில் இதுபோன்று நடக்காது என அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு அரசு, இனி சில வழிமுறைகளை உருவாக்க இருப்பதாகக் கூறியது.
அப்படி உருவாக்கப்பட்ட வழிமுறைகள் குறித்த அறிக்கையில், இனிமேல் பள்ளிகளில் நிகழ்ச்சி நடத்த யாரேனும் அனுமதி கோரினால், மாவட்ட அளவில் உருவாக்கப்பட இருக்கும் கமிட்டியிடமோ, மாநில அளவிலான கமிட்டியிடமோ முதலில் அனுமதி கோர வேண்டும். இரண்டாவது, நிகழ்ச்சி நடத்துபவர்களைக் குறித்து போலீஸ் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வு நடத்தி அனுமதி கொடுத்தால் தான் நிகழ்வு நடத்த முடியும்.
இந்த அரசின் அறிவிப்பின் மூலம், அறிவியல் பூர்வமானது எது, சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதைக் கூட பிரித்தறிந்து பார்க்கும் திறனற்றதாக அரசு மாறிவிட்டது அம்பலமாகிறது.
ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக, அதை மேலும் சிக்கலாக்குவதோடு, பிரச்சினைக்குரிய ஆட்களிடமே தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கும் வேலையில் அரசு இறங்கியிருக்கிறது. உதாரணமாக மகாவிஷ்ணுவிற்கு அனுமதி கொடுத்தது அரசு அதிகார வர்க்கம் தான். இப்போது அவர்களிடமே மீண்டும் அனுமதி கொடுப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறார்கள் என்றால் இது பாசிச கும்பலுக்கு ஆதரவானது இல்லையா?
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குறிப்பிட்டபோது “மாவட்ட அளவில், மாநில அளவில் அதிகாரிகள் கொண்ட குழுவானது யாரைத் தீர்மானிக்கிறார்களோ அவர்கள் மட்டுமே நிகழ்வு நடத்த முடியும். இந்த அதிகாரிகள் எப்படிப்பட்ட கருத்தியல் சிந்தனையில் இருக்கிறார்களோ அதற்கேற்றார் போல் தான் நிகழ்வு நடத்த அனுமதிப்பார்கள்” என்று மேற்கண்ட அரசின் அறிவிப்பை கேள்விக்குள்ளாக்குகிறார்.
உண்மையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. பின்புலம் கொண்ட பிற்போக்குவாதிகள் அதிகாரிகளாக வலம் வருவதும் ஆதிக்கம் செலுத்துவதும் என்று நகர்ந்து கொண்டிருக்கையில், இது போன்ற குழுக்களை அமைப்பது அவர்களுக்குச் சாதகமானதாகவே அமையும். யாரை அனுமதிக்கக் கூடாது என சொன்னோமோ அவர்களிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பது தெரியாது நடக்கும் முட்டாள்தனமா, தெரிந்தே நடக்கும் அயோக்கியத்தனமா?
மேலும், நிகழ்வு நடத்த விரும்புவோர் குறித்து போலீஸ் கண்காணிக்கும் – ஆய்வு நடத்தும் என்பதன் மூலம் அரசு சொல்ல வருவது என்ன?
இனி கல்வி வளாகங்களில் சுதந்திரமான நடவடிக்கைகளே இருக்கக் கூடாது, அதிகார வர்க்கம் விரும்பும் வகையிலான பிற்போக்குக் கும்பல்கள் தான் கோலோச்ச வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
ஏற்கனவே புதிய கல்விக் கொள்கையில், கல்லூரி பள்ளி வளாகங்களில் போலீஸ் அலுவலகங்கள் அமைப்பது குறித்து குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கண்காணிக்க முடியும், அடக்க முடியும் என்பது தான் அதன் நோக்கம். புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசோ, வேறு பெயர்களில் அதை நடைமுறைப்படுத்துவதை மீண்டும் மீண்டும் செய்து வருகிறது. இப்போது நடப்பதும் அதுதான்.
ஏதேனும் ஒரு பிரச்சினை வந்தால், அதைத் தீர்ப்பதாக சொல்லிக் கொண்டு, காவி கும்பல் முன்னிலும் வலுவாகக் காலூன்றிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தருவதையே தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
பாசிச கும்பலிடம் பணிந்து போகும் திமுக?
ஜனநாயகப் பூர்வமான, அறிவியல் பூர்வமான கல்வியை எல்லா மாணவர்களுக்கும் கொண்டு போய்ச் சேர்ப்பது தான் உண்மையில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் நடவடிக்கையாக இருக்க முடியும். ஆனால் திமுக அரசோ, பாசிசத்திற்கு எதிரானதாகவும் அம்பேத்கர் – பெரியார் சிந்தனைகளை உள்வாங்கி நடைமுறைப்படுத்துவதாகவும் தன்னைக் காட்டிக்கொண்டாலும், பள்ளி – கல்லூரிகளில் இக்கருத்துக்களை கொண்டு செல்ல ஓரடி கூட எடுத்து வைக்கவில்லையே என்ற கேள்வி நம்முன் எழுகிறது.
ஆனால் இதற்கு நேர்மாறாக, பழனி முருகன் பற்றிய பஜனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதிலோ மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி. கும்பலுக்குக் கருத்தியல் அடியாள் வேலை பார்ப்பது என இப்போக்கைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்.
இதன் மூலம் பாசிச கும்பலுக்கு பணிந்து போகிறது திமுக அரசு என்பது பகிரங்கமாக அம்பலமாகி வருகிறது. அதை மேலும் உறுதி செய்யும் வகையில்தான், தமிழ்நாடு அரசின் தற்போதைய அறிவிப்பும் அமைந்துள்ளது. ஆதலால், பாசிச கும்பலுக்குத் துணை போகும் இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஜனநாயக சக்திகள் அனைவரும் வலுவான கண்டனக் குரல்களை எழுப்ப வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.
மேலும், மகாவிஷ்ணு போன்ற பாசிச கும்பலுக்கு துணை போகும் கருத்தியல் கொண்டவர்களை புறக்கணிப்பதற்கு ஏற்றவாறு பாசிச எதிர்ப்பு சிந்தனை கொண்ட கல்வியாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கொண்ட புதிய குழுக்களை உருவாக்குவதன் மூலமாகவே அறிவியல் பூர்வமான ஜனநாயக பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் நிகழ்வுகளை பள்ளியில் ஒருங்கிணைக்க முடியும். அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram