2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு ஒன்று, நேற்று (ஜூலை 29) விசாரணைக்கு வந்த நிலையில், “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது” என சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது.
கழிவுகள் மூலமாக காற்றை, நிலத்தை, குடிநீரை பாழ்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018 மே 22 அன்று அதிமுக ஆட்சியில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது போலீசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு ஜூலை 15 அன்று நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவத்தில் அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, “துப்பாக்கிச்சூடு குறித்த சி.பி.ஐ விசாரணை சரியில்லை; அது ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டிய நீதிபதிகள், முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உள்ளதாகவும், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய போலீசுத்துறை அதிகாரிகளின் சொத்து விபரங்களை கணக்கிடவும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.
படிக்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு: சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் அமர்வு முன்பு நேற்று (ஜூலை 29) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசு உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று, 3 மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், “அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்; அந்த சொத்துகளை வாங்குவதற்கான வருவாய் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரிக்க வேண்டும்; லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டிஜிபி ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
அத்துடன், “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர். மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்த வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம்? ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செயல்படுவது சமூகத்துக்கு மோசமானது; தூத்துக்குடியில் அனுமதி இன்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரியும், இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் குடிமக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது அனைவரும் நங்கு அறிந்த உண்மை. ஆனால், அனில் அகர்வாலையும் அவனுக்காக மக்களைப் படுகொலை செய்தவர்களையும் பாதுகாக்கவே சி.பி.ஐ-யும் மனித உரிமை ஆணையமும் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டன என்பதும் அம்பலப்பட்டுவிட்டது. எனினும், குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. திமுக அரசும் மௌனம் காத்து வருகிறது.
நீதிமன்றங்களின் ஆவேசமான பேச்சுகள் பல சமயங்களில் தீர்ப்புகளில் பிரதிபலிப்பதில்லை. மக்களின் மனதில் இருக்கும் தணியாத கோபம் மட்டுமே நீதிமன்றங்களில் நீதியைப் பெற்றுத்தரும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube