ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு:
சி.பி.ஐ-யின் யோக்கியதையை நாறடித்த உயர்நீதிமன்றம்!
மக்கள் போராட்டங்களே குற்றவாளிகளை தண்டிக்கும்!
17.07.2024
பத்திரிகை செய்தி
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ விசாரணை சரியில்லை; இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்து மதிப்பை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது என்பதே வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்தையும் மோடி, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட போலீசுத்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக தான் என்று மக்கள் அதிகாரம் தொடக்க காலம் முதல் தெரிவித்து வருவது தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் “சிபிஐ-யின் கையாலாகாத் தனத்தையே காட்டுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபிஐ துணை போயுள்ளது. பொது மக்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கியுள்ளனர். இதில் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூட சிபிஐ விசாரிக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 7 கி.மீ தூரம் உள்ள வீட்டில் எப்படி ஒருவர் பலியாகியிருக்க முடியும்? இதையெல்லாம் சிபிஐ ஏன் விசாரணைக்கு கொண்டு வரவில்லை” என்றும், “இறுதி அறிக்கையில் ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில் யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள்?” என்றும் சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தது.
“இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட போலீசுத்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்கள், சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கான சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
ஒரு முதலாளிக்காக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தூய்மையான நீர், காற்று, நிலம் வேண்டும் என்று போராடிய தூத்துக்குடியின் மாவீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 16 வயதான ஸ்னொலின், மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன் உள்ளிட்ட 15 பேர் தமிழ்நாடு போலீசால் காக்கை, குருவிகளை போல சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் பல நூறு பேர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதும் ஒருபோதும் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மறக்கப்போவதில்லை.
ஆண்டுகள் ஆறு ஆன பின்னும் கூட, இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது மிகவும் துயரமானது.
ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டெர்லைட் குற்றவாளிகளை தண்டிப்போம் என்று வாய்கிழிய பேசிய திமுக தற்பொழுது அடக்கி வாசிக்கிறது. கொலைக் குற்றவாளிகள் அத்தனை பேரும் பதவி உயர்வு பெற்று விட்டார்கள்.
இதற்கு எதிரான கோபத்தீ தமிழ்நாட்டு மக்களின் மனதில் பற்றிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவு சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள்.
அடுத்த வாரம் நீதிமன்றம் எவ்வித கருத்தையும் கூறலாம். அதற்காக தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை சுட்டுக்கொன்ற அன்றைய முதலமைச்சர், டிஜிபி, உள்துறைச் செயலாளர் தலைமைச் செயலாளர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்கான பணியை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை ஏற்காவிடில் கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதற்கான மிகப்பெரிய போராட்டத்தை தமிழ்நாடு மக்களும் தமிழ்நாடும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube