மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் ! | மக்கள் அதிகாரம்

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்
ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
ஸ்டெர்லைட் ஆலையை அகற்றும் வரை போராடுவோம்!


21.05.2024

பத்திரிக்கைச் செய்தி,
மா
பெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு இது. லட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் ! என்று முழக்கமிட்டு செய்து காட்டினார்கள்  தூத்துக்குடியின் வீரமிக்க போராளிகள்.

நிலத்தையும் காற்றையும் நீரையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான மக்களின் தீரமிக்க போராட்டம் அது .

மே 22, 2018 ஆம் ஆண்டு  நீதி கேட்டு குடும்பம் குடும்பமாக ,குழந்தை, குட்டிகளோடு  மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மக்களை ஸ்டெர்லைட் ஆலையும்  தமிழ்நாடு போலீசும் இணைந்து, மறைந்திருந்தும் வேன்மீது ஏறி இருந்தும் மக்களை சுட்டுக் கொன்றனர்.

15 வயது சிறுமி ஸ்னோலின், எமது மக்கள் அதிகாரம் தோழர் மதுரை ஆரியப்பட்டி ஜெயராமன்  உட்பட  13 பேர்  போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டு தியாகியானார்கள். உடல்கள் மரித்தாலும் உணர்வுகள் மரிப்பதில்லை என்பது போல ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடலை பெற மாட்டோம் என்று உறுதியாய் நின்றார்கள் தூத்துக்குடியின் மக்கள்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் கைது செய்வதும் ஊர்களில் சென்று மக்கள் மீது வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்தி கைது  – சித்திரவதை  போன்ற போலீசின் அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன.

எமது மக்கள் அதிகாரம் தோழர்களும் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டு பலர் சித்திரவதைக்குள்ளப்பட்டனர்.

அன்று முதல் இன்று வரை அதிமுக அரசு போய் திமுக அரசு வந்த பிறகும் கூட ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு கூட போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை என்பதே உண்மை.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் சுட்டிக்காட்டிய,  மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அன்றைய தினம்  தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன்,   டிஜிபி,  முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி ஆகியோர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் போராட்டத்தின் விளைவாகவே ஸ்டெர்லைட் மூடப்பட்டது. அதன் காரணமாகவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அதனை அங்கீகரித்து இருக்கிறது. உடனடியாக திமுக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்தையே அப்புறப்படுத்த வேண்டும்.

மாபெரும் மக்கள் போராட்டத்தின் நினைவாக தியாகிகளுக்கு மணி மண்டபத்தை தமிழ்நாடு அரசே கட்ட வேண்டும் .

மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு முன் வைக்கிறது.

மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் ஆறாம் ஆண்டு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க