05.06.2022

“பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’

நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் ஜுன் 1 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எதிர்காலத்துக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்தும் விதமாக ‘பிஎம் ஸ்ரீ பள்ளிகள்’ அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த அதிநவீன பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020 திட்டத்தின் ஆய்வகமாக இருக்கும் என்றார்.
மேலும், தேசிய கல்வி கொள்கை 2020 வரைவை தாக்கல் செய்த கஸ்தூரிரங்கன் அவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இவர்தான் புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான குழுவின் தலைவரும் ஆவார்.
இந்த பள்ளிகளை தான் ஆய்வகம் என்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் சோதனை செய்து அதை நாடு முழுவதும் அமல்படுத்துவார்கள். அதனால்தான் இதை நாம் விசக் குஞ்சுகள் என்கிறோம். இது பரவும் இடங்களிலெல்லாம் காவி ஆதிக்கமும் கார்ப்பரேட் ஆதிக்கமும் நிலைநாட்டப்படும்.
தேசிய கல்வி கொள்கை 2020-ன் முன்னுரையில் இவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தை பார்த்தாலே இது எவ்வளவு அபாயகரமானது என்பது நம் கண்முன்னே அரங்கேறும்.
தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரையில் “அனைவருக்கும் உயர்தரமான கல்வியை அளிப்பதே நமது நாட்டின் அறிவுத்திறனை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும். தனிநபர்களுக்கு மட்டுமல்ல, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் அதுவே நல்லது. அடுத்த பத்தாண்டுகளில் உலகளவில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா விளங்கும். அவர்களுக்கு உயர்தரமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதே நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்கள்.
படிக்க :
♦ பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அரசியல் பேச தடை உத்தரவு ! | புமாஇமு கண்டனம்
♦ தொழில்நுட்ப கல்வி கட்டணங்களை உயர்த்தும் ஏ.ஐ.சி.டி.இ | புமாஇமு கண்டனம்
உயர்தரமான கல்வியை யார் தரப் போகிறார்கள்? மத்திய அரசே அனைவருக்குமான இலவசக் கல்வியை தந்து தனியார் கல்வியை ஒழிந்துவிடுமா? இல்லை மாறாக இந்த அறிக்கையில் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. அப்படி என்றால் இவர்கள் அனைவருக்குமான உயர்தரமான கல்வி என பேசுவதெல்லாம் யாருக்கானது? அம்பானிகளும் அதானிகளும் பல்கலைக் கழகங்களை தொடங்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். அம்பானியின் ஜியோ பல்கலைக் கழகத்தை அரசே ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பிக்கச் சொல்கிறது.
அனைவருக்குமான உயர்தரக் கல்வி என்பது ஒரு வெற்றுப் பேச்சு இதனால் ஏழைப் பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் கல்வியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மேலும், இந்த முன்னுரையில் “உலகளாவிய கல்வி இலக்குகளையும் கருத்தில் கொள்கிற அதே சமயம், இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக மரபுகளையும் விழுமியங்களையும் ஒருசேரக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இது உறுதியெடுத்துக் கொண்டிருக்கிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தியாவின் மரபு என இந்த காவி கும்பல் சொல்வதெல்லாம் அப்பட்டமான புராண இதிகாசக் குப்பைகளையும் சாதி – மத வேறுபாடுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும் ஆகப் பிற்போக்கான கலாச்சாரங்களையும் கொண்டுள்ளதாகும். அவர்கள் மொழியிலேயே சொல்வதென்றால் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான கல்வித் திட்டம்தான் இது. இது ஒட்டுமொத்த மாணவர்களையும் அடிமைச் சிந்தனைக்குள் தள்ளி அடிமைகளாகவே மாற்றக் கூடியது.
பள்ளிக் கல்வியுடன் திறன் மேம்பாட்டை ஒருங்கிணைப்பது என்ற பெயரில் நவீன குலக் கல்வியை கொண்டு வருகிறார்கள். இதில்தான் அப்பா அம்மா செய்த தொழில் பகுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழில் என சாதிய குலக்கல்வி முறையை திணிக்கிறார்கள் மேலும் மாணவர்களை கூலி அடிமைகளாக மாற்றுவதற்கான திட்டத்தையும் இதனுள் இணைத்துள்ளார்கள். மாணவர்களை கார்ப்பரேட் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இது வழிவகுக்கும்.
படிக்க :
♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு
♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு
ஆசிரியர்களே கல்விச் சீர்திருத்தங்களின் மையம் என்பதால் ஆசிரியர்களுக்கான தகுதியும் புதிய வரையறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தப் புதிய கொள்கை வலியுறுத்துகிறது.
இது ஆசிரியர்களை தகுதி என்ற பெயரில் நிரந்தரமற்ற பணியாளர்களாக மாற்றி கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்றமாதிரி வடிவமைக்க நினைக்கிறார்கள். மேலும் காவி சிந்தனையும் முக்கியம் என்பது கூடுதல் தகுதி. இதில் ஆசிரியர்களின் அரசு வேலை பறிக்கப்பட இருக்கிறது.
இன்னும் இதுபோல இந்த கல்விக் கொள்கையில் உள்ள வெற்று சவடால்களையும், நடைமுறையில் இவர்கள் செய்ய இருப்பதையும் நாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அதுதான் இந்த விசக் குஞ்சுகளை அழித்தொழிப்பதை நோக்கி முன்னேறும்.
மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்!
அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை களத்தில் இறங்கி அம்பலப்படுத்தி முறியடிப்போம்!


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.
rsyftamilnadu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க