24.05.2022

கல்வியில் இருந்தே ஏழை மாணவர்களை வெளியேற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பாசிச உத்தரவை வன்மையாக கண்டிக்கின்றோம் !

கண்டன அறிக்கை!

நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,89,800-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்புகளுக்கு குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900 அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. M.E., M.Tech., M.Arch., படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200 அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

படிக்க :

♦ அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

♦ பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு

3 ஆண்டு MCA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500 அதிகபட்சமாக ரூ.1,94,100-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு MBA படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இருந்த தொழில்நுட்ப கல்வி கட்டணங்களே சாதாரண உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து படிப்படியாக அகற்றி கொண்டிருந்தது.

அதன் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் இந்த உத்தரவு. அதாவது கல்வியிலிருந்து ஏழை மாணவர்களை  சுத்தமாக துடைப்பதொழிப்பது என்பதுதான் நோக்கம்.

மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது எனவும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ-ன் இந்த உத்தரவு என்பது பகிரங்கமாக உழைக்கும் மக்களின் வீட்டுப் பிள்ளைகளை தொழில்நுட்ப கல்வியிலிருந்து வெளியேறுங்கள் என்று அறிவிப்பதாக உள்ளது. அதற்கானதான் “மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம்காட்டி கட்டணத்தை குறைக்கக் கூடாது  என்றும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின் கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும்” என திமிர்த்தனமாக அறிவித்துள்ளது.

தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கல்வி என்பது படிப்படியாக தனியாரின் வசம் ஒப்படைக்கப்பட்டு இலாப நோக்கத்திற்காக கல்வி என்பது மாற்றியமைக்கப்பட்டது. இது படிப்படியாக மாணவர்களின் மக்களின் மீதான சுமையை மேலும் மேலும் தீவிரப்படுத்தியது. அதிலிருந்து உழைக்கும் வர்க்கத்து வீட்டு மாணவர்கள் கல்வியிலிருந்தே படிப்படியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாகத்தான் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவருகிறார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும்போதே இவ்வளவு கட்டண உயர்வு என்றால் புதிய கல்விக் கொள்கையின் படி பல்கலைக் கழகங்கள் படிப்படியாக கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்பட்டு அரசு, பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்தாது, கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனும்போது எவ்வளவு கட்டணத்தை உயர்த்துவார்கள்?

கார்ப்பரேட்டுகளின் நோக்கம் சேவை செய்வதா? அல்லது கொள்ளையடிப்பதா?

ஒரு காலத்தில் அரசின் சேவைத் துறைகளால் மிகவும் குறைந்தபட்ச கட்டணங்களாக இருந்தவை இன்று கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்திய பிறகு கட்டண உயர்வு பல்வேறு துறைகளிலும் மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, செல்போன் ரீசார்ஜ் தொடங்கி கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்களின் கழுத்தை நெரிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதிக்கம்.

காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை; காசு இருப்பவனே கல்வி போன்ற நவீன தீண்டாமையை கொண்டுள்ளது ஏ.ஐ.சி.டி.இ-ன் அறிவிப்பு. அரசின் சுரண்டலும் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலும் மலைப் பாம்பாக மாணவர்களையும் மக்களையும் நெறிக்கிறது.

படிக்க :

♦ சாதி வெறியைத் தூண்டி, மாணவர்களைக் காவு வாங்கும் சாதிக்கயிறு ! திமுக அரசின் மௌனம் கண்டிக்கத்தக்கது ! | புமாஇமு

♦ அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை

இதிலிருந்து விடுபட உழைக்கும் மக்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம். அதுவே நாம் வாழப்போகிறோமா? அல்லது சாகப்போகிறோமா? என்பதை தீர்மானிக்கும்.

மேலும், தொடர்ச்சியாக கல்வியில் காவிமயத்தையும் திணித்து வருகிறது மோடி அரசு. பிற்போக்கு குப்பைகளை பாடத்திட்டத்தில் திணித்து வருபவர்கள் நாட்டிற்காக தூக்கிலேறிய பகத்சிங் போன்றவர்களின் வரலாற்றை பாடத்திட்டத்திலிருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

உழைக்கும் மக்களாகிய நம்மையும், நமக்காக நின்ற பகத்சிங்கையும் அப்புறப் படுத்துகிறார்கள். பகத்சிங்கை நாம் எடுத்துக் கொண்டு அவர் வழியில் நின்று இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்.

♠ ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே இலவசமாக கல்வி வழங்க போராடுவோம்!
♠ மாணவர்கள் நாம் ஒன்றுபட்ட போராட்டங்களை கட்டியமைப்போம்!
♠ காவி – கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து முறியடிப்போம்!
♠ புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க