தேதி : 27.11.2021
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்!
நிரந்தர முழுநேர ஆசிரியர்களை தேவைக்கேற்ப நியமனம் செய்!
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்து!
பத்திரிகை செய்தி
மிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமித்துக் கொள்ள  தலைமை ஆசிரியர்களுக்கு  அனுமதி அளித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை.
நடப்பு கல்வி ஆண்டில் (2021-22) தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், நியமிக்கப்படும் முதுநிலை ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே பணி புரிய வேண்டுமென்றும், அவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு கல்வி ஆண்டு முழுவதும் (2020-21) பாடம் கற்பதில் தடையேற்பட்டுள்ள  இந்த நெருக்கடியான நிலையில்,  இந்த கல்வியாண்டில் ஐந்து மாதங்கள் கழித்துதான் பள்ளிகள் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாத காலம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமலேயே மாணவர்கள் சென்று வந்திருக்கிறார்கள் என்பதே வேதனையான செய்தி.
படிக்க :
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்
பள்ளிகள் திறக்கும் முன்பே, காலி பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை நியமிப்பது குறித்து  பள்ளிக் கல்வித் துறையும், தமிழக அரசும் ஏன் அக்கறை காட்டவில்லை?  திமுக அரசு கடந்த மே மாதம் பதவியேற்றதில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான ஆசிரியர்களை நியமிப்பது குறித்தோ, அதற்கான நிதியை ஒதிக்கி கட்டமைப்பை ஏன் மேம்படுத்தவில்லை என்பதே ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கேள்வியாக உள்ளது.
தற்போது நியமிக்கப்படவிருக்கும் முதுநிலை ஆசிரியர்கள் சென்ற கொரோனாவிற்கு முந்தைய கல்வியாண்டின் மாணவர்கள் எண்ணிக்கையை வைத்தே தீர்மானித்திருக்கிறார்கள். இந்த 2021-22 கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்த்திருக்கிறார்கள் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே! ஆனால், இந்த புதிய எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், ஆசிரியர்கள் பற்றாக்குறையை தற்காலிகமாக சரிசெய்யத் திட்டமிட்டிருக்கிறது பள்ளிக் கல்வித் துறை. அப்படி நியமிக்கப்படவிருக்கும் முதுநிலை ஆசிரியர்களும் கூட ரூ.10,000 சம்பளத்திற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர்களால் வேலைக்கு எடுக்கப்படவிருக்கும் ஐந்து மாத ஆசிரியர்கள் தான் என்பதே அபத்தமான செய்தி!
கொரோனா காலத்தில் பள்ளி படிப்பின் தொடர்ச்சியில் இருந்து விலகிய மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பெடுப்பது மிகவும் சிரமமானப் பணி. இப்பணியை மாணவர்கள் மீது அக்கறைக் கொண்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பலரும் தற்போது செய்து வருகிறார்கள். ஆனால், பள்ளி மாணவர்களில் நலனில் துளியும் அக்கறைக் கொள்ளாத தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் இதுபோன்ற வேலைக்குதவாத திட்டங்களை முன்வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
தகுதி வாய்ந்த முதுநிலை ஆசிரியர்களை புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடனே பணி வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும், தரமான இலவசக் கல்வியை வழங்கிட வேண்டும் என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானவை.
புதிய கல்விக் கொள்கை, மறுகாலனியாக்கத்தின் ஓர் அங்கமே இத்திட்டம். கல்வியில் அக்கறை கொள்ளாத தமிழக அரசே, ஐந்து மாத தற்காலிக  ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்! ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அனைத்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்! அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்து! கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்!
மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டிட, கல்வியில் தனியார்மயத்தை ஒழித்துக்கட்ட, தனியார் பள்ளிகளில் இருந்து கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுப் பள்ளிகளை நோக்கி வந்த மாணவர்களை தக்கவைத்துக்கொள்ள, அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-மாணவர்-ஆசிரியர் கொண்ட கூட்டமைப்பை உருவாக்கப் போராடுவோம்.

இவண்,
இர. துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புமாஇமு, தமிழ்நாடு.

1 மறுமொழி

  1. பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன? இக்குழுவில் 80 சதவிகிதம் பேர் பெற்றோர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இடம் பெறவேண்டும். மீதமுள்ள 20 சதவிகிதம் பேரில் கல்வியாளர்கள், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வாலர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்களிலும் 50 சதவிகிதம் பெண்கள் இடம்பெற வேண்டும், இந்தக் குழு மாதம் ஒருமுறை கூட வேண்டும் அதில் பள்ளி மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, மாணவர்களுக்குத் தேவையானதைப் பூர்த்திசெய்து கொடுப்பது ஆகியவற்றை கவனிக்க வேண்டும். குறிப்பாகப் பெற்றோர்கள் பார்வையில் பள்ளி நடைபெற வேண்டும் என்பதுதான் பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம்…

    கல்வியாளர்கள் இதில் பங்கெடுத்து முன்நிற்கின்றனர்.களப்பணிக்கு இதையும் கணக்கிலெடுக்கவும்.

    ////www.minnambalam.com/politics/2021/11/29/15/surya-agaram-foundation-tamilnadu-govt-school-education-department-school-management-committee////

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க