உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது செய்து உளவியல் ரீதியாக அச்சுறுத்திய சென்னை பல்கலைக்கழக நிர்வாகம், போலீசு!
புமாஇமு கண்டனம்!
மாணவர்களே, பேராசிரியர்களே!
ஜனவரி மாதம் ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, சென்னை பல்கலைக்கழக விடுதி மாணவர்களிடம் 2020 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரைக்கான விடுதிக் கட்டணமாக 8,500 ரூபாய் பணம் கேட்டு பில் அனுப்பியது விடுதி நிர்வாகம். கொரோனா காலம் முழுவதும் பல்கலைக்கழகம் மூடிக்கிடந்த போதும் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைக் கண்டித்து அன்றே தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்கள்.
படிக்க :
♦ சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
இரவு பகல் பாராமல் பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள் படுத்துக் கிடந்து விடாப்பிடியாக நடத்திய போராட்டத்திற்கு பிறகு கட்டணம் குறைக்கப்பட்டது. ஆனால், போராடிய மாணவர்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
கட்டணக் கொள்ளையடிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதற்காக, தொல்லியல் துறை தலைவர் பேரா.சௌந்திரராஜனை தனது அடியாளாக பயன்படுத்திக் கொண்டு போராடிய அனைத்து மாணவர்களையும் ஃபெயில் ஆக்கி பழி தீர்த்தது நிர்வாகம். நிர்வாகத்திற்கு எதிராகப் போராடினால் உன்னை ஒழித்துக்கட்டி விடுவேன் என்பதே இந்த ஃபெயில் நடவடிக்கையின் கருப்பொருள். கொரோனா ஊரடங்கில் கல்லூரிகள் மூடப்பட்டாலும் மாணவர்களிடம் அடித்த கட்டணக்கொள்ளை அம்பலமானதுதான் நிர்வாகத்தின் கடும் கோபத்திற்குக் காரணம்.
தங்களை திட்டமிட்டு ஃபெயில் ஆக்கிய சௌந்தரராஜன் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை எதிர்த்தும் மாணவர்கள் போராடினார்கள். அந்தப் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு குறுக்கு வழிகளில் முயன்றும், போராட்டம் பொதுவெளியில் பத்திரிக்கைகள் வெளியாகியும், மாணவர்கள்-பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் ஆதரவைப் பெற்றதால், மண்ணைக் கவ்வியது பல்கலைக்கழக நிர்வாகம். மீண்டும் விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண் பட்டியல் வெளியிடுகிறேன் என்று பணிந்தது.
மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது பற்றி மாணவர்கள் தொல்லியல் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனிடம் கேட்டபோது, மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டு, போராடிய மாணவியின் மீது பாலியல் சீண்டல் வக்கிரத்தையும் அரங்கேற்றியுள்ளார். இந்த வக்கிரச் செயலைக் கண்டித்து மாணவர்கள் நிர்வாகத்திடம் புகார் செய்தும் சௌந்தர்ராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதற்கு மாறாக பாலியல் வன்கொடுமையை விசாரிக்க வந்த கமிட்டியோ, பாதிக்கப்பட்ட மாணவியையே காயப்படுத்துவிதமாகப் பேசியிருக்கிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை தற்கொலை முயற்சிக்கு தள்ளியது இந்தக் கமிட்டி உறுப்பினர்களும், பல்கலைக்கழக நிர்வாகமும், துணைவேந்தரும், பதிவாளரும் தான்.
பேரா.சௌந்திரராஜனை தொடர்ந்துக் காப்பாற்றி வருவதன் மூலம் போராடும் மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் வெளிப்படையாகவே இறங்கியது பல்கலைக்கழக நிர்வாகம்.
இன்னொரு பக்கத்தில் மாணவர்களைக் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வேலையில் இறங்கிய நிர்வாகம், போலிசை தன் அடியாளாகப் பயன்படுத்தி மாணவர்களைக் கைது செய்ததையும், பல்கலைக்கழகத்தின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் புமாஇமு வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிய DYFI மற்றும் ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களையும் கைது செய்ததையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக அரசே!
- போராடிய மாணவி மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றவாளி சௌந்திரராஜன், தலித் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள அனுமதிக்காமல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நிரந்தர பணி நீக்கம் செய்!
- போராடிய மாணவர்களை ஒடுக்கிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது உரிய நடவடிக்கை எடு!
- போராடிய மாணவர்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்துசெய்!
இவண்,
இரா. துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.