உங்களுடைய சகோதரிக்கோ, மகளுக்கோ, தோழிக்கோ பாலியல் அத்துமீறல் நடந்தால் இப்படிதான் மௌனமாக கடந்து செல்வீர்களா?

அன்பார்ந்த மாணவர்களே / பேராசிரியர்களே,

வணக்கம்,

டந்த ஜனவரியில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா விடுதியின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடியதால், எங்களது துறைத்தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு 8 மாணவர்களை ஃபெயில் ஆக்கினார். இதற்கு எதிராக, நாங்கள் போராடியதால், வேறொரு பேராசிரியரை பணியமர்த்தி, எங்களது விடைத்தாள்களை சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் திருத்தியது. இதன் முடிவுகள் அறிவிக்கப்படாதிருந்த நிலையில், கடந்த 12-ம் தேதி மாணவர்களுக்கே தெரியப்படுத்தாமல் முடிவுகள் வெளியானது.

சென்னைப் பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, தேர்வு முடிவுகளை மதிப்பெண்கள் மற்றும் கிரேட் அடிப்படையில் அந்தந்த துறையின் நோட்டீஸ் போர்டில் வெளியிட வேண்டும். ஆனால், எங்கள் துறையிலோ நோட்டீஸ் போர்டில் தேர்வு முடிவுகளை வெளியிடமால், வாய்வழியாகவே சொன்னார்கள்; அதுவும், மதிப்பெண்களை சொல்லாமல் கிரேடை மட்டுமே பேரா.சௌந்திரராஜன் கூறினார்.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பேரா.சௌந்திரராஜனை அணுகி, எங்களுடைய மதிப்பெண்களை பல்கலைக்கழக விதியின் அடிப்படையில் நோட்டீஸ் போர்டில் வெளியிடுமாறு கேட்டோம். உடனடியாக, ஆத்திரமடைந்த பேரா.சௌந்திரராஜன் எங்களை நோக்கி,“வெளியில போங்கடா நாய்ங்களா, ரவுடி பசங்களா, நீங்க பெரிய மயிரா” என்றும் பொதுவெளியில் சொல்ல முடியாத ஆபாச வார்த்தைகளாலும் எங்களை திட்டித்தீர்த்தார்.

எங்களோடு மதிப்பெண்ணை தெரிந்துகொள்ள வந்த சக மாணவியை பார்த்து, “நீயெல்லாம் ஒரு பொண்ணா, ரொம்ப ஆட்டம் போட்டுட்டு இருக்க, பொறுக்கிகளோடு சேர்ந்து பொறுக்கித்தனம் பண்ணாத, உன்னால என்ன ஒன்னும் புடுங்க முடியாது” என்று மிரட்டினார். இதைத்தொடர்ந்து, எங்களை அடிக்க வந்த பேரா.சௌந்திரராஜன் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் அருவருக்க தக்கமுறையில் நடந்து கொண்டார்.

மூன்றுமுறை அதேபோல, எங்கள் கண்ணெதிரிலேயே சக மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தட்டிக்கேட்ட எங்களையும் அடிக்க வந்தார். இறுதியாக, மாணவியின் மார்பகத்தில் கைவைத்து தள்ளினார். இது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. உடனடியாக இது குறித்து புகார் தெரிவிக்க, பதிவாளரை அணுகியபோது, அவர் எங்களை சந்திக்க மறுத்தார். இந்த சம்பவங்கள் அனைத்தும் 16-ம் தேதி மாலை 5:45 மணிக்குமேல் நடந்தது.

இதையடுத்து, எங்கள் தரப்பில் பேரா.சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் கொடுத்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு, பதிவாளர் தரப்பில் இருந்து விசாரணை கமிட்டியில் கலந்துகொள்ளுமாறு எங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், “16 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் பேரா. சௌந்திரராஜன் எங்கள்மீது புகார் அளித்துள்ளதாகவும், அதேபோல் அதற்கடுத்தநாள் (17-ம் தேதி) நாங்கள் அளித்த புகாரையும் விசாரிக்கவுள்ளதாகவும்” குறிப்பிடப்பட்டிருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படிக்க :
♦ சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !
♦ கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

ஏனென்றால், பேரா. சௌந்திரராஜன் எங்களை ஃபெயில் ஆக்கியபோதே, பதிவாளர் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டது. அவரது தரப்பை பதிவாளர் நியாயப்படுத்தி வந்தார். எங்களது தொடர் உள்ளிருப்பு போராட்டத்தின் விளைவாகவே, மற்றொரு பேராசிரியரை வைத்து விடைத்தாள்களை திருத்தியது சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம். இதையடுத்து, ஃபெயில் செய்யப்பட்ட அனைவரும் பாஸ் ஆனோம்.

ஆக, பேரா. சௌந்திராரஜன் உள்நோக்கத்தோடு எங்களை ஃபெயில் ஆக்கியதை தற்போது வந்துள்ள முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு, பல்கலைக்கழக விதிமுறைக்கு எதிராக, உள்நோக்கத்தோடு எங்களது கல்வி எதிர்காலத்தையே அழிக்கும் நோக்கோடு, செயல்பட்ட பேரா.சௌந்திராரஜன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை பாதுகாத்தது சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம். திட்டமிட்டு மாணவர்களை காழ்புணர்ச்சியோடு ஃபெயில் ஆக்கியதற்கு அவர்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் பிரச்சனை இவ்வளவு தூரம் நீண்டிருக்காது.

தற்போதும் அவர் எங்களை அடிக்க வந்தது மற்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து முறையாக விசாரணை செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், முன்தேதியிட்டு சம்பவம் நடந்த அன்றே பேரா.சௌந்திரராஜன் எங்கள்மீது புகார் அளித்ததாக ஒரு போலிக் கடிதத்தை ஜோடித்து பாலியல் அத்துமீறலுக்கு நிர்வாகம் துணைபோகிறது. குற்றவாளியான பேரா.சௌந்திரராஜனை பதிவாளர் பாதுகாக்கிறார். அதாவது, பாதிக்கப்பட்ட எங்களையே குற்றவாளிகளாக்கும் நோக்கோடு பதிவாளர், பேரா.சௌந்திரராஜனோடு கூட்டு சேர்ந்து சதி செய்கின்றார்.

எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணைக் கமிட்டியில் நாங்கள் நேற்று கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து. பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட மாணவியை செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கமிட்டியில் நேற்று மதியம் 3:30 மணிக்கு கலந்துகொள்ளுமாறு நேற்று மதியம் 3:35க்கு கடிதம் வழங்கினார்கள். இதனடிப்படையில், கமிட்டியின் விசாரணையில் கலந்துகொள்ள மாணவி சென்றார். அந்த செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கமிட்டியில், பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பைக் கேட்காமல் மைனர் குஞ்சுவின் கட்டப்பஞ்சாயத்தில் நாட்டாமை நடந்துகொள்வதைப் போல கமிட்டியினர் நடந்து கொண்டுள்ளனர்.

ஒரு மணிநேரம் 20 நிமிடம் நடந்த விசாரணையில், பேரா.சௌந்திரராஜனை எப்படியெல்லாம் காப்பாற்றலாம் என்று, பாதிக்கப்பட்ட மாணவி மீதுதான் குற்றம் என்று சித்தரிக்கும் வகையில் டிசைன் டிசைனாக, சாந்தகுமாரி, ரீட்டா ஜான், சசிகலா, உசைன், சம்பூரணி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பேசியுள்ளனர். இந்த குரூப்பில் டூப்பாக மாணவர்கள் தரப்பு என்று நிர்வாகமே நியமித்துள்ள ஆய்வு மாணவி உமா மகேஸ்வரியும் செயல்பட்டுள்ளார்.

உதாரணமாக, பாதிக்கப்பட்டவரின் தரப்பை முழுமையாக கேட்டறியாமல், மாணவியை குற்றவாளியைப்போல் நடத்தி, அதட்டி மிரட்டி, பிரச்சனையை ஊத்திமூட முயற்சித்துள்ளார் நாட்டாமை சாந்தகுமாரி. அதுமட்டுமின்றி, பேரா.சௌந்திரராஜன் வேண்டுமென்றே மார்பகத்தில் மூன்றுமுறை கைவைக்கவில்லை, போகிற போக்கில் அது நடந்துவிட்டது. இதை நீங்கள் தவறாக சித்தரிக்கிறீர்கள் என்று தீர்ப்பையும் வழங்கியுள்ளனர் மைனர்குஞ்சு கட்டப்பஞ்சாயத்தின் நாட்டாமைகள்.

மேலும், கமிட்டியில் இருந்த உசைன் பாதிக்கப்பட்ட மாணவியைப் பார்த்து, செக்ஸூவல் ஹராஸ்மண்ட் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு, குடும்பத்தை விட்டுட்டு பாய்ஸோட நைட்ல உட்காருவது சரியா?” என்று கிரிமினல் தனமாக கேட்டுள்ளார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேரா.சௌந்திரராஜனை தண்டிக்க துப்பிலாத உசைன் போன்ற ஜால்ராக்கள், பாதிக்கப்பட்ட மாணவியையும், அவரோடு போராட்டத்தில் உள்ள மாணவர்களின் கேரக்டரையும் தவறாக சித்தரித்து தனது அல்பப் புத்தியை காட்டியுள்ளனர்.

சௌந்தரராஜன்

அதுமட்டுமின்றி, இந்த பாலியல் அத்துமீறலை நேரில் பார்த்த சாட்சியங்களான மாணவர்களை அழைத்து பேசாத கமிட்டியினர், பேரா.சௌந்திரராஜன் செட்அப் செய்து கூட்டி வந்த, சம்பவ இடத்திலேயே இல்லாதவர்களை சாட்சியங்களாக விசாரித்துள்ளனர். இந்த கமிட்டியின் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு, பாதிக்கப்பட்ட மாணவியின் பிரச்சனையையே கேட்காமல், கேடுகெட்ட தனமாக பேரா.சௌந்தரராஜனுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள் என்பதை நீண்ட பட்டியலே போடலாம்.

இவ்வளவு அநீதிகளும் அட்டுழியங்களும் எங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பகல் இரண்டு இரவுகளை கடந்து எங்களுடைய போராட்டம் சென்று கொண்டிருக்கிறது. எங்களது குரலை நசுக்கும் வேலையைத்தான் பேரா.சௌந்திரராஜனும், பல்கலைக்கழக நிர்வாகமும் செய்து கொண்டிருக்கின்றனர். எங்களுடைய கோரிக்கையே, தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கும் பேரா.சௌந்திரராஜனால் எங்களைப்போல் இன்னொரு மாணவரும், மாணவியும் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான்.

எனவே, இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரிக்குமாறு கோருகிறோம். மேலும், ஃபெயில் ஆக்கியது முதல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது வரை கல்விச் செயல்பாட்டுக்கே முற்றிலும் தகுதியில்லாத பேரா.சௌந்திரராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு
பாதிக்கப்பட்ட தொல்லியல்துறை மாணவர்கள்
சென்னை பல்கலைக்கழகம்
தொடர்புக்கு : 96001 62343

1 மறுமொழி

  1. முதல்ல இந்த ரவுடி சௌந்தரராஜன் முறையா படிச்சித்தான் ஆசிரியர் பணிக்கு வந்தானா என்பதிலிருந்து துப்பு துலக்க வேண்டும்… பல்கலைக்கழக நிர்வாகமே!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க