டந்த ஜனவரி மாதம் கல்விக் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் பழிவாங்கும் நோக்கில் தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளார்.  அதைக் கண்டித்து, மறு திருத்தம் செய்யக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள்.

அதன்பின், அவர்கள் அனைவரும் தேர்வில் தேறிவிட்டதாக வாய்வழித் தகவல் கூறியிருக்கிறது பல்கலை நிர்வாகம். பெற்ற மதிப்பெண் பற்றி கேட்டதற்கு கல்லூரி நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில் கடந்த மார்ச் 16-ம் தேதி அன்று நீண்ட நேரம் காத்திருந்து, தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை துறை அலுவலகத்தில் சந்தித்துக் கேட்டுள்ளனர். அதற்கு சௌந்திரராஜன் தகாத வார்த்தைகளில் பேசி, பெண் மாணவியின் மீது பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்துக் கேட்ட சகமாணவர்களையும் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

படிக்க :
♦ நஜீப் அகமது எங்கே ? ஏ.பி.வி.பி.யை தடைசெய் | சென்னை பல்கலையில் ஆர்ப்பாட்டம்
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

சென்னை பல்கலைக்கழக பதிவாளர், பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டி, துணைவேந்தர் ஆகிய மூன்று பேருக்கும், இந்த பாலியல் வன்கொடுமை சம்மந்தமாக, புகார் கடிதம் கொடுத்துள்ளார்கள் மாணவர்கள். அந்த கடிதங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவந்தனர் மாணவர்கள்.

பல்கலை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள், பிரச்சினையை பற்றி ஒன்றுமே பேசாமல், என்ன காரணத்திற்கு என்று முறையாக தெரிவிக்காமலேயே, கடிதங்கள் தந்துள்ளது. “கடிதங்களில் எழுதியிருப்பது முன்னுக்குபின் முரணாக உள்ளது. பேரா.சௌந்திரராஜனுக்கு ஆதரவாக உள்ளது” என்ற அடிப்படையில் அனைத்துக் கமிட்டிகளையும் நிராகரித்துள்ளார்கள் மாணவர்கள்.

பாலியல் குற்றத்தை விசாரிக்க வந்த கமிட்டிக்கு மட்டும் மாணவர்கள் சென்றார்கள். ஆனால், அந்த கமிட்டியோ, மாணவியைக் கொச்சையான கேள்விகளைக் கேட்டு மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் உசைன் என்பவர் “உனக்கு குடும்பம் இருக்கு, பாலியல் துன்புறுத்தல் வழக்குக் கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே, அதை விட்டுட்டு நடவடிக்கை எடு என்று பசங்களுடன் உட்கார்ந்து இருக்கியே” என்று கேவலமாகப் பேசியுள்ளார். அதே கமிட்டியில் இருந்த ஒரு பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி என்பவர் “அவர் போகிற போக்கில் தெரியாமல் உன்னைத் தொட்டுட்டுப் போயிருப்பார்” என்று அலட்சியமாகப் பேசியிருக்கிறார். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவி “ஒரு முறை, இரண்டு முறை அல்ல, மூன்று முறை நடத்திருப்பது என்பதால், இது பாலியல் வன்கொடுமைதான்” என்று உறுதியாகக் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் வழக்கறிஞர் சாந்தக்குமாரி “அவருக்குத் தெரியாமல் நடந்திருக்கும்” என்று மீண்டும் அலட்சியமான பதிலையே கூறியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 20-ம் தேதி அன்று இரவு, D1 போலீசு நிலைய இன்ஸ்பெக்டர் சீதாராமன் பல்கலைக் கழகத்திற்குள் வந்து, “ஒருவேளை உங்களை இடைநீக்கம் செய்யும் உத்தரவு வந்து, உங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று போராடும் மாணவர்களைக் கேட்கிறார். அவர் கேட்டுச் சென்ற பத்து நிமிடத்திற்குள், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு கடிதம் தருகிறது. அதில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடன் இருந்த நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்வதாகக் கூறியுள்ளார்கள். அந்தக் கடிதத்தை மாணவர்கள் முழுவதுமாகப் படித்து முடிப்பதற்கு முன்பே மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்த வந்துவிட்டது போலீசு. ஆனால், மாணவர்கள் பலரின் எதிர்ப்பினால் திரும்பிச் சென்றது போலீசு.

தவறு செய்த ஒரு பேராசிரியரை பதிவாளரும், துனைவேந்தரும், போலீசும் ஏன் காப்பாற்ற நினைக்கிறார்கள் என்று புரியவில்லை என்கிறார் மாணவர் சிவப்பிரகாசம்

குற்றவாளியான சௌந்திரராஜனைக் காப்பாற்ற கல்லூரி நிர்வாகமும், போலீசும் தீவிரமாக இறங்கி, போராடும் மாணவர்களையே குற்றவாளிபோல் பொது வெளியில் சித்தரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று விடியற்காலையில் கைகளை கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் பாதிக்கப்பட்ட மாணவி. சகமாணவர்கள் மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

மாணவர்களின் போராட்டத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு அதிகரித்தவண்ணம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி, அன்று மதியம் மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் தற்கொலைக்கு முயலக் காரணம் இந்த பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர், பதிவாளர், துணைவேந்தரும்தான் என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள் போராடும் மாணவர்கள்.

பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று அவர்களை மிரட்டி வெளியேற்ற முயற்சித்துள்ளது போலீசு. அதையும் மீறி மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

கடந்த 5 நாட்களாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக மாணவர்களை, போராட்டத்தின் ஆறாம் நாளான மார்ச் 22-ஆம் தேதி அன்று காலையில் கைது செய்து பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு எதிரில் இருக்கும் போலீசு நிலையத்தின் அருகில் ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடம்

மாணவி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை பெயரளவுக்குக் கூட போலீசு கண்டித்ததாகத் தெரியவில்லை. பாலியல் புகார் அளித்த பேராசிரியர் சௌந்தர ராஜன் சுகவாசியாக உலா வருகையில், நியாயம் கேட்டுப் போராடிய பாதிக்கப்பட்ட மாணவர்களை குற்றவாளிகள் போல் கைது செய்திருக்கிறது போலீசு. இந்த மாணவர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள்தான் அநியாயக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினார்கள். அதற்காகவே அவர்கள் மதிப்பெண் குறைக்கப்பட்டு, பெயிலாக்கப்பட்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிராகவும் அவர்கள் போராடியிருக்கிறார்கள். இறுதியில் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டிருப்பதோடு இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மாணவர்களின் போராட்டம், மாணவர்களைக் கொள்ளையிடும் சென்னைப் பல்கலை நிர்வாகம், அதற்குத் துணை போன பேரா. சௌந்தரராஜன் ஆகியோரின் அதிகாரத் திமிரையும், இக்கும்பலுடனான போலீசின் கூட்டுக் களவானித்தனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரையில் நமக்கு சொல்ல வரும் செய்தி, கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்க முயன்ற சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்துப் போராடியதே மாணவர்கள் செய்த முதல் தவறு. போராடிய ‘குற்றத்திற்காக’ தேர்வில் ஃபெயில் போட்ட பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகப் போராடியது இரண்டாவது தவறு. தேர்வின் மதிப்பெண்ணைப் பொதுவெளியில் வெளியிடுங்கள் என்று மாணவர்கள் கேட்டது மூன்றாவது தவறு. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராக புகார் கொடுத்ததும், நீதி கேட்டு போராடியதும் நான்காவது தவறு.

சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வர்க்கத்தில் இருந்து தங்கள் வாழ்க்கைக்காகப் படிக்க வந்த மாணவர்களின் மேற்கூறிய ‘தவறு’களுக்காகத்தான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகமும், போலீசும் சேர்ந்து வெறியாட்டம் போடுகிறது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டதை அறிவித்து நடத்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த தோழர்களை அடித்து, பெண் தோழர்களை பாலியல் துன்புறுத்தல் செய்து கைது செய்துள்ளது D1 நிலைய போலீசு.

படிக்க :
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை இடைநீக்கம் செய்ய வேண்டும், அவருக்கு துணைப்போகும் பதிவாளர், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு கமிட்டி அமைத்து விசாரித்தால் மட்டுமே நாங்கள் உட்படுவோம். எங்கள் தேர்வு மதிப்பெண்களை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை தொடர்ந்துப் போராடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சென்னை பல்கலைக்கழக கிரிமினல் நிர்வாகத்தை எதிர்த்துத் தொடர்ந்து அஞ்சாமல் போராடும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஜனநாயக சக்திகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் துணை நிற்பது மிகவும் அவசியம். இன்றைய நமது ஆதரவுதான் சமூகத்தின் மீதான  போராடும் மாணவர்களின் நம்பிக்கைக்கான அடிப்படையாகும்.


வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க