“என் மகன் நஜீப் அகமது எங்கே..?” இதுதான் நீதியின் முன்னால் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ் எழுப்பியிருக்கும் முதலும் கடைசியுமான கேள்வி. நஜீப் அகமது ஏ.பி.வி.பி. கொலைகார கும்பலால் காணாமலடிக்கப்பட்டு இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பயோடெக்னாலஜி பிரிவின் ஆராய்ச்சி மாணவர் நஜீப் அகமது, நம்மைப் போல முதல்தலைமுறை பட்டதாரி.

நீதி கேட்கும் நஜீபின் தாய்.

2016ம் ஆண்டு ஜே.என்.யு. மாணவர் சங்க தேர்தலின்போது நஜீப் அகமது தங்கியிருந்த ஜே.என்.யு மஹிமந்தவி விடுதி உணவகத்தின் சுவரில் பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யினர், முஸ்லீம்கள் தீவிரவாதிகள், முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று முஸ்லீம் மாணவர்களை குறிவைத்து எழுதுகின்றனர். இதை தட்டிக்கேட்ட காரணத்திற்காக ஏ.பி.வி.பி. குண்டர் படையைச் சேர்ந்த 9 பேர், நஜீப் அகமதுவை தாக்குகின்றனர். விடுதியில் இருக்கும்போது விடுதிகாப்பாளர் முன்னிலையிலே இரண்டாவது முறையாக நஜீப் மீது ஏ.பி.வி.பி.யினர் கொலைவெறி தாக்ககுதல் நடத்தியிருக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு மறுநாள் 2016 அக்டோபர் 15-ம் தேதி முதல் அவர் காணாமலடிக்கப்படுகிறார்.

மகன் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்கிறார் நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ். காவல்துறையின் விசாரணையில் திருப்தி பெறாத டெல்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சி.பி.ஐ. ஆர்வம் காட்டவில்லை; இதில் அரசியல் தலையீடு இருக்கிறது என்று டெல்லி உயர்நீதிமன்றமே சி.பி.ஐ. மீது குற்றம்சாட்டுகிறது. இப்படி பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் தலையீட்டால் கொலைகார ஏ.பி.வி.பி. கும்பலைச் சேர்ந்தவர்களை காப்பாற்றுவதற்காகவே வேலை செய்வதைப்போல் சி.பி.ஐ. எடுபிடி வேலை செய்துள்ளது.

படிக்க:
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்

காவல்துறை, சி.பி.ஐ. என குற்றவாளிகளை காப்பதற்கு வேலை செய்ய டெல்லி உயர்நீதிமன்றமும் தன் பங்கிற்கு கடந்த 8ம் தேதி வழக்கை முடித்து வைக்குமாறு உத்தரவு போட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு அமைப்பிடம் இந்த வழக்கை மாற்றுமாறு கோரியதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்றதிலிருந்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் காவிமயமாக்கும் வேலையை செய்து வருகிறது.

இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள்  சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொல்லும் கொலைக்களங்களாக மாறிவிட்டன. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பாசிச கும்பலை எதிர்த்தால் மாணவர்கள் நிறுவனப் படுகொலை செய்யப்படுகிறார்கள் அல்லது காணாமலடிக்கப்படுகிறார்கள். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா பா.ஜ.க.வின் கைக்கூலியான ஏ.பி.வி.பி.யை எதிர்த்த காரணத்திற்காக நிறுவனப் படுகொலை செய்யப்பட்டார். பாசிச  அச்சுறுத்தலுக்கு மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் உள்ளடங்குவர். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியர் ஒருவரை காலில் விழவைத்துள்ளது ஏ.பி.வி.பி.. சென்னை பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்த துறை தலைவர் பேரா.நல்லூர் சரவணன் அவர்களை உளவியல் ரீதியாக மிரட்டியுள்ளது.

இந்தவகையில் ஜே.என்.யு. மாணவர் நஜீப் அகமதுக்கு நீதி கிடைக்கக்கோரியும், அவர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி. குண்டர்களை கைது செய்யக்கோரியும்; அந்த அமைப்பை தடை செய்யக்கோரியும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், எஸ்.ஐ.ஓ. மாணவர்கள் என 30 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் உரையாற்றிய தோழர்கள், சென்னை பல்கலைக்கழகம் காவிமயமாகிவருவதை அம்பலப்படுத்தியும், இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் போராடுவதே ஒரே வழி என்று உரையாற்றினர்.

படிக்க:
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !

நஜீப் விவகாரத்தில் ஏ.பி.வி.பி. குண்டர்கள்தான் குற்றவாளிகள் என்பதற்கு போதிய பின்னணியிருந்தும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது நீதியின் முன்னால் நஜீப் எங்கே..? என்ற கேள்வி மட்டும் எஞ்சியிருக்கிறது. பாசிச கும்பலை எதிர்த்தால் நாளை நாமும் கூட காணமலடிக்கப்படலாம், கொல்லப்படலாம். நஜீப் எங்கே என்ற கேள்விக்கு வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறுவழியில்லை. மாணவர்களாகிய நாம் நஜீப்புக்காக வீதியில் இறங்கி போராடுவோம். நீதியைப் பெறுவோம். வாருங்கள்..!

இவண்:  அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் (APSC_UNOM)
சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்க வளாகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க