JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை

2

ஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிசத்துக்குப் பதிலடி!

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் இப்படியொரு பதிலடி கிடைக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் எதிர்பார்க்கவில்லை. நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோரில் தொடங்கி எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரிடமிருந்தும் சீறி வரும் கண்டனங்களால் தனிமைப்பட்டிருக்கிறது மோடி அரசு.

ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.பி.வி.பி. சங்கத்தின் நிர்வாகிகளே மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வெளியேறியிருக்கின்றனர். தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பா.ஜ.க.-வினர் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர்களுக்கே புதிய சிக்கல்களை உருவாக்கி, உடும்பு வேண்டாம், கையை விடு” என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கின்றன.

JNU Protest
ஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிச கொழுப்புக்கு செருப்படி!

மோடி என்ற பாசிசக் கோமாளியின் மீது பந்தயம் கட்டியது முட்டாள்தனமோ?” என்று ஆளும் வர்க்கமே சிந்திக்கும் அளவுக்கு இந்த ஆட்சி சந்தி சிரித்துவிட்டது. மதவெறி அரசியல் மூலம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், சப் கா சாத், சப் கா விகாஸ்” (அனைவருடனும் முன்னேற்றம், அனைவருக்குமான முன்னேற்றம்) என்றெல்லாம் மோசடி செய்து மக்களை நம்ப வைத்த மோடி மஸ்தானால் வாக்களித்த எதையும் வரவழைக்க முடியவில்லை.

பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்டு அப் இந்தியா என்று புதுப்புது படங்களுக்குப் பூசை போடப்படுகிறதேயொழிய, ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒற்றைச்சாளர முறை, நான் தான் அனைத்தையும் முடிவு செய்வேன்” என்பன போன்ற சவடால்களால், இந்த அரசுக் கட்டமைவுக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தி போலத் தன்னைக் காட்டிக் கொண்ட மோடியை நம்பிய பன்னாட்டு, இந்நாட்டு பெரு முதலாளிகள் ஏமாந்து விட்டார்கள்.

JNU Professors protest for student
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆசிரியர்கள், தமது மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை கண்டித்து துணைவேந்தர் அலுவலகம்

முதலாளிகளின் நிலை இதுவென்றால், மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளால் குறுகிய காலத்தில் எல்லாத் தரப்பு மக்களின் வெறுப்பையும் ஈட்டியிருக்கிறார் திருவாளர் மோடி. நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். சுவச் பாரத், யோகாசனம், மன் கி பாத்” போன்ற சுயவிளம்பர கேலிக்கூத்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் பல்லிளிக்கின்றன.

தான் 56 அங்குல மார்பு கொண்ட ஆண்மகன் என்றும் மன்மோகன் சிங்கிடம் வாலாட்டுவதைப் போல பாகிஸ்தான் தன்னிடம் வாலாட்ட முடியாதென்றும் தேர்தல் பிரச்சாரத்தில் வெறியூட்டிய மோடி, நவாஸ் ஷெரிபைச் சந்தித்து விருந்துண்டு திரும்பிய சூட்டில், பதான்கோட்டில் தாக்குதல் நடக்கிறது. 56 அங்குல மோடி பிரதமரான பின்னர்தான் பாக். இராணுவம் 52 முறை எல்லை தாண்டி வந்திருக்கிறது” என்று மோடியைக் கேலி செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. எதிரில் இருப்பவர்கள் பேச மாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருக்கும் மேடைகளிலெல்லாம் பொளந்து கட்டும் மோடி, பத்திரிகையாளர்களையும் நாடாளுமன்றத்தையும் கண்டு நடுங்குகிறார்.

மொத்தத்தில், பொருத்தமான இயக்குநர் மட்டும் இருந்தால், மோடியைக் கதாநாயகனாக வைத்து சாப்ளினின் கிரேட் டிக்டேட்டர்” படத்தையொத்த ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும்.

ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதலையும், அதில் சங்கப் பரிவாரத்தினர் காட்டும் வெறித்தனத்தையும் கண்டு, மோடி அரசு மிகவும் வலிமையான நிலையில் இருந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதிவிடக் கூடாது. கல்வி நிறுவனங்கள் முதல் அரசு நிறுவனங்கள் வரையிலான அனைத்தையும் இந்துத்துவமயமாக்குவதும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்ற போதிலும், தங்கள் தோல்வியை மறைக்கும் பொருட்டும், பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் பொருட்டும், மென்மேலும் இத்தகைய நடவடிக்கைகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் காணத்தவறக் கூடாது.

கண்ணைய்யா குமாரை விடுதலை செய்யக் கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டு டெல்லியில் நடத்திய பேரணீ
கண்ணைய்யா குமாரை விடுதலை செய்யக் கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டு டெல்லியில் நடத்திய பேரணீ

உ.பி.-யில் நாடாளுமன்ற நாற்காலிகளை வெல்வதற்கு லவ் ஜிகாத்” என்ற முஸ்லிம் எதிர்ப்புப் பொய்ப் பிரச்சாரத்தையும், முசாஃபர்நகர் கலவரத்தையும் பயன்படுத்தினர். லவ் ஜிகாத் என்பதே சங்கப் பரிவாரம் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது பின்னர் அம்பலமானது. மாட்டுக் கறியை வைத்து தூண்டப்பட்ட மதவெறி பல முஸ்லிம்களின் உயிரைக் காவு கொண்டது. பின்னர் அக்லக் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறிதான் என்று அம்பலமானது. இந்து என்ற துருப்புச்சீட்டு செல்லாது என பிகார் தேர்தல் காட்டியது.

அரசியல் சார்பற்றவர்கள் என்று கருதப்படும் இலக்கியவாதிகள், அறிவுத்துறையினர், அறிவியலாளர்கள் என சுமார் 400- க்கும் மேற்பட்டவர்கள் தமது விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சிரிப்பாய்ச் சிரித்துத் தனிமைப்பட்ட பின்னரும், தங்களது நடவடிக்கைகளை சங்கப் பரிவாரத்தினர் நிறுத்திக் கொள்ளவில்லை. காரணம் அவர்களது பார்ப்பன வெறி என்பது மட்டுமல்ல, அரசியல்ரீதியில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லை.

அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கை களையும், மதவெறி, சாதிவெறி, தேசவெறி பிடித்த கருத்துக்களையும் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் மற்றவர்களை ஏற்கச் செய்வது என்பது அவர்களுக்குச் சாத்தியமில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வு மையம், பாடத்திட்டக் குழு, திரைப்படக் கல்லூரி, உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமது ஆட்களைத் திணிக்கிறார்கள். இந்துத்துவ பாசிசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நபர்களை வெளியேற்றுகிறார்கள், தாக்குகிறார்கள், கொலை செய்கிறார்கள். தபோல்கர் முதல் வெமுலா வரையிலானோரின் படுகொலைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.

ஐ.ஐ.டி. சென்னையில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஐ.ஐ.டி. சென்னை என்பது ஒரு பார்ப்பனக் கோட்டை. இந்துத்துவ சார்பு அமைப்புகள்தான் அங்கே எண்ணிக்கையில் அதிகம். பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதில் மிகச் சிறுபான்மையினர். எனினும், இந்துத்துவத்தையும் மோடி அரசின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி அவர்கள் நடத்திய கூட்டங்களைப் பார்ப்பனக் கும்பலால் கருத்துரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க இயலவில்லை. காரணம், கருத்துரீதியாக அவர்கள் தரப்பில் நியாயம் இல்லை. அவ்வாறு கருத்துப் போராட்டம் நடத்தும் ஜனநாயக வழி முறையில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. எனவேதான் ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடிதம் போட்டு நடவடிக்கை எடுக்க வைத்தார்கள்.

மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்ததன் மூலம் தமது அறிவின் மேன்மையை நிலைநாட்டிக் கொண்ட பார்ப்பனர்கள்” என்று இந்தியாவைப் பற்றிய ஆய்வில் குறிப்பிடுவார் கார்ல் மார்க்ஸ். அது ஐ.ஐ.டி. பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். மற்றவர்கள் பேச அனுமதிக்கப்படாத, எதிர்க்கேள்விகள் எழுப்பப்படாத மேடைகளில் சண்டப்பிரசண்டம் செய்யும் மோடிக்கும் பொருந்தும்.

ரோகித் வெமுலா விசயத்தில் நடந்ததென்ன? சென்னை ஐ.ஐ.டி.-யைப் போலவே ஐதராபாத் பல்கலைக்கழகமும் பார்ப்பன, ஆதிக்க சாதியினரைப் பெரும்பான்மையாக கொண்ட இடம்தான். முசாஃபர்நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப்படத்தையோ, யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் கருத்தையோ பார்ப்பனக் கும்பல் தனது வாதத்திறமை மூலம் எதிர் கொள்ளவில்லை. மாறாக, தமது அதிகாரத்தின் துணை கொண்டு ரோகித் வெமுலாவைக் கொன்றார்கள். தற்போது ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருப்பது இவற்றின் தொடர்ச்சி.

ஜே.என்.யு. என்பது 1969-இல் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம். அறிவுத்துறையினரை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மற்ற உயர்கல்வி நிறுவனங்களைப் போன்றதுதான் இதுவும் என்றாலும், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இல்லாத அளவிலான கருத்துச் சுதந்திரமும் விவாத சுதந்திரமும் அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்துமான மாணவர்களைத் திட்டமிட்டே சேர்க்கின்ற ஒரு நிறுவனமாக இருப்பதும் இதன் தனித்தன்மைகள். அது மட்டுமல்ல, மாணவர் சங்கத்தினருக்கு மற்ற பல்கலைக் கழகங்களில் இல்லாத பல உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கும் உள்ளது.

””
”நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். ”

ஆண்டுதோறும் அங்கே மாணவர் சங்கத் தேர்தல் முறையாக நடக்கிறது என்ற போதிலும், அதில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற முடிந்ததில்லை. பாரதிய ஜனதா தோன்றுவதற்கு முன்னர் டெல்லியில் ஜனசங்கம் செல்வாக்கு செலுத்திய காலத்திலும், வட இந்தியா முழுவதும் இந்து மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்ட அயோத்தி கலவர காலத்திலும், மத்தியில் வாஜ்பாயி ஆட்சி செலுத்திய காலத்திலும், தற்போது மோடி வெற்றி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும், அதாவது எந்தக் காலத்திலும் காவிக்கோமாளிகள் அங்கே வெற்றி பெற்றதில்லை.

தங்களுடைய மதவெறிக் கருத்துக்களை பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதிலும், இந்துத்துவக் கருத்துகள் அங்கே செல்வாக்கு பெற முடிந்ததில்லை. அதேபோல, முஸ்லிம் மாணவர்கள் அங்கே கணிசமாக இருந்தபோதிலும் அவர்கள் இசுலாமிய மாணவர் அமைப்பில் சேருவதில்லை. அறிவியல் கண்ணோட்டமும் ஜனநாயக விழுமியங்களும் செல்வாக்கு செலுத்தும் இடங்களில் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, எந்த மதவாத அமைப்பும் காலூன்ற இயலாது என்பதற்கு ஜே.என்.யு. ஒரு எடுத்துக்காட்டு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்? அவசரநிலைக் காலத்தில் இந்திராவை உள்ளே வராதே என்று தடுத்து நிறுத்திய பாரம்பரியம் கொண்ட மாணவர்களை, சீக்கியர் படுகொலையின்போது சீக்கிய மக்களை வளாகத்தினுள் அடைக்கலம் தந்து பாதுகாத்த மாணவர்களை, பாபர் மசூதி இடிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த மாணவர்களை சங்கப் பரிவாரம் எப்படித் தன் பக்கம் ஈர்க்க முடியும்? முடியாது என்பது பா.ஜ.க.வினருக்கும் தெரியும்.

ஜே.என்.யு.வில் பயின்று வெளியே வருபவர்கள் அதிகார வர்க்கம் முதல் ஊடகங்கள் வரை பல்வேறு இடங்களிலும் பொறுப்புகளிலும் அமர்ந்திருப்பதும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் கட்டோடு வெறுக்கப்படும் மதச் சார்பின்மை, கடவுள் மறுப்பு, கலப்பு பொருளாதாரம், ஜனநாயகம்” என்பன போன்ற கோட்பாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பதும், இந்தப் பல்கலைக்கழகம் தலைநகரமான டில்லியிலேயே இருப்பதும் பார்ப்பனப் பாசிசக் கும்பலுக்கு சகிக்க முடியாததாக உள்ளது.

Rajnath singh, Smiruthi Irani and Basi
ஆர்.எஸ்.எஸ். இந்து தேசியத்தை மறுத்து நிற்கும் மாணவர்களை வன்மத்தோடு வேட்டையாடும் தாக்குதலில் தளபதியாகச் செயல்படும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனித வளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் டெல்லி போலீசு ஆணையர் பாஸி.

எனவே, பாபர் மசூதியை இடித்ததைப் போல, ஜே.என்.யு. வை மூடுவது என்பதுதான் அவர்களது நோக்கம். அந்த இலக்கை நோக்கியதுதான் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்.

ஜே.என்.யு.வில் சில மாணவர்கள் அப்சல் குருவுக்கு நினைவுநாள் கடைப்பிடித்ததாகவும், அதில் இந்தியாவைத் துண்டு துண்டாக்குவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும், இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகள் உள்ளே நடந்ததற்கு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லி சில வீடியோ காட்சிகளை ஜீ டிவி” என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பிறகு அதே வீடியோவை, டைம்ஸ் நௌ’’, நியூஸ் எக்ஸ்” போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் இவர்களைச் சார்ந்த இந்தி தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாகக் காட்டி, ஜே.என்.யு. மாணவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்பதைப் போன்றதொரு பொதுக்கருத்தை திட்டமிட்டே உருவாக்கின.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்?

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.என்.யு. மாணவர்களுக்கு டிவிட்டர் மூலமாக லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அவர் பேசி முடிப்பதற்குள் அந்த டிவிட்டர் கணக்கே போலியானதென்று அம்பலமானது. இருப்பினும் ஜே.என்.யு. வளாகத்துக்குள் போலீசு நுழைந்தது; விடுதிகளுக்குள் புகுந்து சோதனை போட்டது. குறிப்பிட்ட சில மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களைத் தேடியது. கன்னையா குமாரைக் கைது செய்தது. கன்னையா குமார் மட்டுமின்றி, டெல்லி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கிலானியும் அப்சல் குரு நினைவு நாளை ஒட்டிப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றிய மோசடி நாடகம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது.

அப்சல் குரு நினைவு நாள் கூட்டம் என்பது தற்போது முதன் முறையாக நடப்பது அல்ல. கடந்த 3 ஆண்டுகளாக ஜே.என்.யு.வில் மட்டுமல்ல, டில்லியிலும் நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அப்சல் குரு மீது போடப்பட்டது பொய்வழக்கு என்ற குற்றச்சாட்டில் தொடங்கி அந்த தீர்ப்பே அநீதியானது என்பது வரையிலான விமரிசனங்களை இப்போது நாம் விவரிக்கப் போவதில்லை. ஜே.என்.யு.வில் முறையாக அனுமதி பெற்று நடைபெறவிருந்த அப்சல் குரு நினைவு நாள் கூட்டத்திற்கு, ஏ.பி.வி.பி. தூண்டுதலின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் கடைசி நேரத்தில் தடை விதித்தது. தடையைக் கண்டித்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்ட பேரணியின் மீது ஏ.பி.வி.பி. காலிகள் தாக்குதல் தொடுத்து ஆத்திரமூட்டியிருக்கின்றனர். ஆத்திரமடைந்த காஷ்மீர் மாணவர்கள் எதிர் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர்.

இதையெல்லாம் ஏ.பி.வி.பி.யினர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதும், ஜீ தொலைக்காட்சியினரையும் அழைத்து வந்து படம் பிடித்திருக்கிறார்கள் என்பதும் பின்னர் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல; ஏ.பி.வி.பி. யினரின் ரவுடித்தனத்தைக் கண்டித்து பிப்ரவரி 11-ஆம் தேதியன்று ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இவர்கள் படம் பிடித்திருக்கின்றனர். கன்னையா குமாரின் ஆர்ப்பாட்ட வீடியோவில், பாகிஸ்தான் வாழ்க, இந்தியாவைத் துண்டாக்குவோம்” என்பன போன்ற முழக்கங்களை ஒட்ட வைத்து தயாரிக்கப்பட்ட மோசடி வீடியோவைத்தான் ஜீ டிவி, டைம்ஸ் நௌ உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன.

இந்த மோசடியை இந்தியா டுடே தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திய பின்னரும், வெட்கமே இல்லாமல் மோடி அரசு மாணவர்கள் மீதான தனது தாக்குதலை தொடர்ந்தது. நாத்திகரும் இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவருமான உமர் காலித் என்ற மாணவருக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது” என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் அவரும் ராம் நாகா, அநிர்பன் போன்ற சில மாணவர்களும் தலைமறைவாகி விட்டதாகவும் வதந்தியைப் பரப்பியது. இவற்றை மறுதலித்து உமர், அநிர்பன் ஆகிய மாணவர்கள் தாமாக முன்வந்து கைதாகினர்.

மோடி அரசின் எல்லாப் பொய்களும் உடனுக்குடன் அம்பலமானது மட்டுமல்ல, வேண்டுமென்றே இந்தப் பொய்களைப் பரப்பி, ஜே.என்.யு. மாணவர்களுக்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சி சானல்களும் சேர்ந்து அம்பலமாகின. ஜீ டிவி பத்திரிகையாளர் விசுவ தீபக் இதனை எதிர்த்து அறிக்கை விட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்து வெறி மோடி அரசுக்கு கைக்கூலி வேலை செய்த அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரை சக பத்திரிகையாளர்கள் (மரபை மீறி) முதன் முறையாகப் பெயர் சொல்லி அம்பலப்படுத்தினர். நானும் தேசத்துரோகி’’தான் என்று கட்டுரை எழுதினார் பிரபல பத்திரைகையாளர் ராஜ்தீப் சர் தேசாய். மொத்தத்தில் மோடி அரசுடன் சேர்ந்து அதற்குத் துணை போன ஊடகங்களும் அம்மணமாகின.

ஆட்டுக்கறியை மாட்டுக்கறி என்று கூறி தாத்ரியில் அக்லக் என்ற முதியவரைக் கொலை செய்தது போல, லவ் ஜிகாத் என்று பொய் பிரச்சாரம் செய்து உ.பி.யில் கலவரத்தை தூண்டியது போல, மாலேகானில் குண்டு வைத்து விட்டு இசுலாமியர்கள் மீது பழி போட்டதைப் போல, நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையைத் கொண்டு வந்து வைத்ததைப் போல – ஜே.என்.யு. விவகாரமும் ஒரு திருட்டுத்தனம்தான் என்பது முற்று முழுதாக அம்பலமாகிவிட்டது.

RSYF Protest chennai for JNU
ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.

கையும் களவுமாகப் பிடிபட்ட கிரிமினல்களுக்கு வீராவேசமாகப் பேசுவது ஒன்றுதானே தற்காப்பு? நாடாளுமன்றத்தில் சாமியாடினார் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. அவரது பேச்சின் வீடியோவை வெளியிட்டு, சத்யமேவ ஜெயதே” என்று டிவிட்டரில் அதனைப் பாராட்டியிருந்தார் மோடி. ஆனால், இரானி பேசியவை அனைத்தும் அசத்தியம்” என்பதை ரோகித் வெமுலாவின் தாயார் முதல் இரானி மேற்கோள் காட்டிப் பேசிய அனைவரும் அடுத்த நாளே அம்பலப்படுத்தினர்.

‘ஆதாரபூர்வமாக’ ஜே.என்.யு.வை அம்பலப்படுத்த முயன்ற ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஞானதேவ், இரவு 8 மணிக்கு மேல் ஜே.என்.யு.-வில் மாணவ, மாணவிகள் நிர்வாண நடனம் ஆடுவதாகவும், 50,000 எலும்புகள், 3,000 ஆணுறைகள், 10,000 சிகரெட் துண்டுகள் அன்றாடம் குப்பையில் வீசப்படுவதாகவும் புள்ளி விவரங்களை வெளியிட்டார். பார்ப்பன பாசிஸ்டுகளின் ‘அறிவுத்திறன்’ கண்டு உலகமே வயிறு வலிக்கச் சிரித்தது.

மொத்தத்தில் ‘புனிதம்’ என்றும் ‘விவாதத்துக்கு அப்பாற்பட்டது’ என்றும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த அனைத்து விசயங்களையும், புரட்டி எடுப்பதற்கான வாய்ப்பைத் தமது சொந்த நடவடிக்கைகளின் மூலம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல்.

அரசியல் சட்டம், ஒருமைப்பாடு , தேசபக்தி, நீதிமன்றத் தீர்ப்பு போன்ற விவகாரங்களில் இதுநாள் வரை எச்சரிக்கையாக சட்ட வரம்புக்குள் நின்று பேசிக்கொண்டிருந்த அறிவுத்துறையினரும் இந்துவெறி அரசியலுக்குப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளும் தமது வரம்பைத் தாண்டி வந்து பார்ப்பன பாசிசத்தை விமரிசிக்கின்றனர்.

‘தேசியம்’ என்ற சொல்லுக்குள் இந்து தேசியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு, மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். எது தேசம், எது தேசத்துரோகம்?”, தேசியத்தை வரை யறுப்பதற்கு நீ யார்? என்று பல கோணங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

wrong videoமகிஷாசுரனுக்கு நினைவுநாள் கொண்டாடு கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள்” என்ற ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டுக்கு, ஆம், அப்படித்தான் கொண்டாடுவோம். மகிஷாசுரன் மட்டுமல்ல, இராவணனுக்கும் மகாபலிக்கும் கொண்டாடுவோம். இது அசுர மரபு” என்று பல முனைகளிலிருந்து பதிலடி வருகிறது.

முன்னாள் இராணுவ அதிகாரிகளை வைத்து மாணவர்களுக்கு எதிராக தேசபக்தக் கூச்சல் எழுப்புகிறது சங்கப் பரிவாரம். தேசபக்திக்கு ராணுவம்தான் அத்தாரிட்டியா, இந்த நாட்டின் விவசாயி, தொழிலாளி, மாணவர்கள் போன்ற நாங்களெல்லாம் தேசமில்லையா?” என்று திருப்பியடிக்கிறார்கள் மாணவர்கள்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை விமரிசிப்பதும் அரசியல் சட்டத்தை விமரிசிப்பதும் எப்படி தேசத்துரோகமாகும்? ஏன் விமரிசிக்கக் கூடாது?” திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்திலேயே அண்ணாதுரை பேசவில்லையா?”, காஷ்மீருக்கு விடுதலை என்ற கருத்தை முன்வைப்பது எப்படித் தவறாகும்?” என்பன போன்ற கேள்விகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் இன்று எழுப்பப்படுகின்றன.

இந்து மதவாத, தேசியப் பூச்சாண்டிகளைத் தாக்கி தகர்ப்பதற்கான வாசலை எதிரிகளே திறந்து விட்டிருக்கின்றனர். தேசியம், ஒருமைப்பாடு, முதலாளித்துவ கருத்து சுதந்திரம், ஜனநாயகம், சுதந்திரமான ஊடகங்கள், சட்டத்தின் ஆட்சி” போன்ற கருத்துகள் அனைத்தையும் பாட்டாளி வர்க்க அரசியல் பார்வையிலிருந்து தெளிவுபடுத்தவும், அம்பலப்படுத்துவதற்குமான வாய்ப்பை எதிரிகளே வழங்கியிருக்கின்றனர்.

RSYF Chennai
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பார்ப்பன பாசிசத்தின் தாக்குதலைக் கண்டித்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களைத் திரட்டிப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.

ஜே.என்.யு. வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஜனநாயக மயக்கத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் கதவைத் தட்டும் பாசிசக் காட்டுமிராண்டிகள் கலைத்து விட்டனர். காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கரிலிருந்து உங்களைப் பிரித்துப் பாதுகாக்கின்ற சுவர் ஏதும் இல்லை” என்ற உண்மையை பாசிஸ்டுகள் அவர்களுக்கு உணர்த்துகின்றனர்.

ஜே.என்.யு. அராஜகம் நீதிமன்றத்தின் மீதான அறிவுத்துறையினரின் மயக்கத்தையும் கலைத்து விட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் கன்னையா குமார் தாக்கப்பட்டார். உச்சநீதி மன்ற எச்சரிக்கைக்குப் பின்னரும் மீண்டும் கன்னையா தாக்கப்பட்டார். உச்சநீதி மன்றம் அனுப்பிய மூத்த வழக்கறிஞர் குழு தாக்கப்பட்டது. தாக்கிய ரவுடி வக்கீல்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். நாங்கள்தான் தாக்கினோம்” என்று வீடியோவில் பேட்டி கொடுத்தனர். இவ்வழக்கு விசாரிக்கப்படும்போது உச்சநீதி மன்றத்துக்குள்ளேயே காவி வக்கீல்கள் கலகக் குரல் எழுப்பினர்.

இத்தனைக்குப் பிறகும், தனது அதிகாரம் செல்லுபடியாகாத கிழட்டு நாட்டாமையைப் போல” அமர்ந்திருக்கிறது உச்சநீதி மன்றம். சர்தார்ஜி ஜோக்குகளைத் தடை செய்வது குறித்த பொதுநல வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதி மன்றம். ஆனால், நீதித்துறையையே அச்சுறுத்தும் இந்த நடவடிக்கைகள், சர்தார்ஜி விவகாரத்தை விட முக்கியமானவை என்று நீதிபதிகளுக்குப் புரியவில்லை போலும்!” என்று மூத்த வழக்கறிஞர்கள் வெளிப்படையாக நீதி பதிகளை விமரிசிக்கிறார்கள்.

பொதுக்கருத்தின் நிர்ப்பந்தம் காரணமாக டில்லி உயர்நீதி மன்றம் கன்னையாவுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியுள்ள போதிலும், தேச பக்தி, கருத்து சுதந்திரம் போன்றவை பற்றி அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் பார்ப்பன பாசிசத்தின் கருத்துகளை அடியொற்றி இருக்கின்றன. மொத்தத்தில், அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள், தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளும் போக்கில், இந்த கட்டமைப்பின் எல்லா உறுப்புகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.

அத்வானி, ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் வீழ்த்தி மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த தருணத்தில், ‘காரவன்’ என்ற இணைய இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. குஜராத்தைச் சேர்ந்த சங்கப் பரிவாரத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டதாக அக்கட்டுரை கூறுகிறது. நாங்கள் என்ன செய்வது, சிவலிங்கத்தின் தலையில் உட்கார்ந்து விட்டது இந்தத் தேள். கையால் எடுத்துப் போடவும் முடியாது. செருப்பால் அடிக்கவும் முடியாது” என்றாராம் அந்த முதியவர்.

அடிபடுவதற்கு வாட்டமான இடத்தில் இருக் கிறது தேள். நமக்கென்ன தயக்கம், செருப்பை எடுப்பதற்கு!

– மருதையன்.

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

2 மறுமொழிகள்

  1. அடிபடுவதற்கு வாட்டமான இடத்தில் இருக் கிறது தேள். நமக்கென்ன தயக்கம், செருப்பை எடுப்பதற்கு! Excellent punch line….. maruthu sir am inspired by ur book viduthalaikana vasippu…. superb one…..

  2. Here’s an excellent article about the JNU issue in Tamil, demonstrating the unique and in-depth political far-sightedness of PALA and VINAVU!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க