சிவனடியார்கள் என்ற போர்வையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ – சாதிய கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

றிவார்ந்த தமிழ் சமூகமே!

தமிழகத்தின் அறிவுசார் புலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பாரிய பங்களிப்பை செலுத்தி வரும் கல்விநிலையம் சென்னைப் பல்கலைக்கழகம். இதன் அறிவியல் பூர்வமான செயல்பாடுகளை ஒழித்துக்கட்டி, புராணக் கட்டுக் கதைகளை, மூடநம்பிக்கையை புகுத்த சிவனடியார்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தால் இம்முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் ! (கோப்புப்படம்)

சைவ சித்தாந்தப் பெருமன்றத்தால் வெளியிடப்பட்டமாணிக்கவாசகர் காலமும் கருத்தும்   என்ற நூலின் ஆசிரியர் பிரபலமான தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி. இதன் பதிப்பாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத்தலைவரும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவருமான பேராசிரியர் நல்லூர் சரவணன்.  இந்நூல் மாணிக்கவாசகர் குறித்தும் சைவப் பற்றாளரான பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் மீதும் பார்ப்பனிய சக்திகள் பல நூற்றாண்டுகளாக சுமத்தி வந்த அவதூறைத் துடைக்கும் விதமாக ஆதாரபூர்வமான தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது.

சிவநெறியாளரான வரகுணபாண்டியன், அமைச்சரான மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்கக் கொடுத்த அரசு நிதியை கையாடல் செய்து சிவனுக்கு கோயில் கட்டியதாகவும், அப்படி கட்டியதற்காக சிவபக்தரான மன்னனே சிவனடியாரான மாணிக்கவாசகரை தண்டித்ததாகவும் திருவிளையாடல் கட்டுக்கதையும், ஸ்தலபுராணங்களும் அவதூறு செய்கிறது. இதற்கு நரி-பரி எனும் கட்டுக்கதையை பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்தனர். இதன் பின்னால் மாணிக்கவாசகர், பாண்டிய மன்னன் ஆகியோருக்கெதிரான பார்ப்பன சூழ்ச்சி ஒளிந்துள்ளது.  ஆனால் இந்தக் கட்டுக்கதை உருவான வரலாற்றுப் பின்னணியை கல்வெட்டு ஆதாரங்கள், பக்தி இலக்கிய காலப் பாடல்கள், கோயில் வரலாறு, பிற சைவர்களின் ஆய்வுகள் ஆகியவற்றின் துணைகொண்டு ஆய்வுசெய்து, அவை கூறும் உண்மை வேறாக உள்ளதை ஆதாரபூர்வமாக நிறுவி, சமயக்குரவர் மாணிக்க வாசகரையும் சிவ பக்தர் வரகுணபாண்டியனையும் வரலாற்றுப் பழியிலிருந்து விடுவித்துள்ளது இந்நூல்.

மேலும் திருவிளையாடல் புராணத்தில் வரும் நரி-பரி கதை என்பது கட்டுக்கதை என்றும் உண்மையில் சைவ சித்தாந்தில் நரி என்பது அந்த கால புறச்சமயங்களான லோகாயுதவாதம், சங்கரரின் மாயாவாதம் போன்றவற்றை பின்பற்றுபவர்களைக் குறிப்பதாகவும், பரி (குதிரை) என்பது சைவத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிப்பிடுவதையும் ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார் ஆசிரியர்.  இங்கு தான் இந்துத்துவ சக்திகளுக்கு பிரச்சனை வருகிறது. ஆதிசங்கரரின் பார்ப்பனிய தத்துவமான மாயாவாதத்தை எதிர்த்தவர் சமயக் குரவர் மாணிக்க வாசகர் என்ற கருத்தை பார்ப்பனிய சக்திகளால் சீரணிக்க முடியவில்லை.

ஏற்கனவே, சைவத்தை பார்ப்பனிய நீக்கம் செய்து, தமிழ் மதம் தான் சைவம் என நிலைநாட்டுவதற்காக கடந்த பல பத்தாண்டுகளாக உழைத்து வருபவர் பேரா. நல்லூர் சரவணன். ”வரலாற்றை மறுத்து சைவ சித்தாந்தத்தை படிப்பது என்பது அறிவியல் அணுகுமுறைக்கு ஏற்புடையது அல்ல. இன்றைய தலைமுறை அறிவியலை புறம் தள்ளி வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் தொடர்ந்து தத்துவம் என்பதை_’சடங்காகவே’ அமைத்து விடுவர்” என்பது பேரா. நல்லூர் சரவணனின் கொள்கை.

இதை சீரணிக்க முடியாத பார்ப்பனியக் கும்பலும் இடதுசாரி, முற்போக்கு, தலித் ஆதரவு போர்வையில் வலம் வரும் சிண்டிக்கேட் உறுப்பினராக இருக்கும் இன்னொரு துறைத்தலைவரும் இணைந்து பேரா. நல்லூர் சரவணனை துறைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சென்னைப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையில் துணை பேராசிரியராக இருந்த எந்த தகுதியுமற்ற ஒருவரை சைவ சித்தாந்தத் துறையின் தலைவராக நியமித்தனர்.  இந்நியமனத்திற்கெதிராக, பேரா. நல்லூர் சரவணன் நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் முறைப்படி துறைத் தலைவரானார்.  இதை சகித்துக் கொள்ள முடியாத அந்த துறைத்தலைவர் ஊடகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்கள் மூலம் பேரா. நல்லூர் சரவணனை அவதூறு செய்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட வைத்தார்.

மறைமலையடிகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சைவசித்தாந்த பெருமன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறையிலும் இதுவரை அதிகாரம் படைத்த பதவிகளை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களே அனுபவித்து வந்தனர். இந்நிலையில் பிற சாதியை சேர்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனை கொண்ட சைவரான பேரா. நல்லூர் சரவணன் தலைவரானதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை எப்படியாவது பதவிநீக்கம்  செய்யத் துடித்த சாதியாதிக்கக் கும்பல் கடைசியில் சரணடைந்த இடம் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்.  இதற்கு மூளையாக செயல்பட்டவர் தான் அந்த இன்னொரு துறைத்தலைவர் ஆவார். பேரா. சரவணனைப் பழிவாங்க அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் ’மாணிக்க வாசகர் காலமும் கருத்தும்’ நூல்.

பேராசிரியர் நல்லூர் சரவணன்.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இந்த நூல் வெளியிடப்பட்டதும் தங்கள் சதித்திட்டங்களை நிறைவேற்ற இவர்களுக்கு தருணம் கிடைத்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேரா. சரவணனுக்கும், ஆர். பத்மாவதிக்கும் எதிராக காவிக் கும்பல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குத் தொடத்தும் அடங்காத இந்துத்துவக் காலிகள், கவர்னரிடம் பேரா. சரவணனை நீக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.  ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான கவர்னர், இந்த விவகாரம் குறித்து பேரா. சரவணனை விசாரித்து நடவடிக்கை எடுக்க பதிவாளரைப் பணித்துள்ளார். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையேதான் சுயசாதி நலனுக்காக சற்றும் கூச்சமின்றி பார்ப்பனிய-இந்துத்துவ சக்திகளோடு திரை மறைவுப் பேரங்களை நடத்தி இந்துத்துவ சக்திகள் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைந்து அதன் மாண்பை சீர்குலைக்க ஒத்தாசை செய்துக் கொடுத்துள்ளார் அந்த இன்னொரு துறைத்தலைவர். சிண்டிக்கேட் மீட்டிங் நடக்கும் நாளில் சிவனடியார்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவக் காலிகள் சங்கு ஊதிக் கொண்டே சிண்டிக்கேட் மீட்டிங்கில் இருந்த துணை வேந்தரிடம் பேரா. சரவணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுழைய முயன்றதைதான் கிட்டத்தட்ட 5 மணி நேரம் வெறும் 15 மாணவர்கள் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.  சிண்டிக்கேட் உறுப்பினரான அந்த துறைத்தலைவர் அன்றி யார் மீட்டிங் நடக்கும் தகவலை காவிக் கும்பல்களுக்கு தெரிவித்திருக்க முடியும்?  ஒரு பேராசிரியர் ஒரு நூலைப் பதிப்பித்ததற்காக பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து இவ்வளவு அக்கிரமங்களை செய்யத் துணிகிறார்கள் என்றால் இதற்கு ஒத்தாசை செய்தவர்கள் கொடுத்த தைரியம் தான் காரணம்.

படிக்க:
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !
♦ காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

சுய சாதி நலன்களைப் பேணும் இது போன்ற பேராசிரியர்கள் தான் இன்று மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பெரும்பாலானவற்றின் சாபம்.  இம்மாதியானவர்களின் சாதி சார்பு சிந்தனையும் ஒருங்கிணைவும் முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர்கள், பிற சாதி மாணவர்கள் ஆகியோரை பழிவாங்கவும், நிர்வாகத்தில் இலாபி செய்வது, ’பெட்டி பாலிட்டிக்ஸ்’ செய்வது  போன்றவற்றால் பிற ஆசிரியர்களை ஓரங்கட்டி நமைச்சல் கொடுக்கவும் உபயோகப்படுத்துகின்றனர். இதன் நீட்சி தான் இன்று அந்த துறைத்தலைவரை இந்துத்துவக் கும்பலுடன் கைகோர்க்க செய்துள்ளது. சுயசாதி நலன்களுக்கான இந்த பெட்டி பாலிட்டிக்ஸ், உள்ளிருந்தே கொல்லும் வியாதி. இதை உடனடியாக வேரறுக்கவில்லையென்றால் ஒட்டு மொத்த அறிவுத்துறையையும் அழுகச் செய்யும் வல்லமை கொண்டது.

தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி

மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூல் தொல்பொருள் ஆய்வில் புலமை பெற்ற ஆர். பத்மாவதியால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளைக் கொண்ட ஆய்வுநூல். அது பார்ப்பனிய சக்திகளை பயமுறுத்துகிறது. வரலாற்றை புராணக் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதத்துடிப்பவர்கள் இவர்கள். எனவே அந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த பேரா. சரவணனை வேட்டையாடுகிறார்கள்.

இன்று அவர்கள் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும். சுதந்திரமான அறிவியல் பூர்வமான ஆய்வு இல்லாமல் ஒழிக்கப்படும் ஆபத்து நூற்றுக்கணக்கில் நம் வாசற்படியில் சங்கு ஊதிக் கொண்டு நிற்கிறது. அதைத் தடுத்து நிறுத்திய அந்த பதினைந்து மாணவர்களுடன் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கை கோர்த்தால் மட்டுமே இதை முறியடிக்க முடியும். இல்லையென்றால் தமிழ் மண்ணிலும் கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரேக்களின் இரத்தம் சிந்தப்படும்.

தமிழக அரசே! காவல் துறையே!

• சைவ சித்தாந்த துறைத்தலைவர் பேரா. நல்லூர் சரவணன் மீது சிவனடியார்கள் என்ற போர்வையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, மிரட்டும் காவிக் கும்பலை கைது செய்!

• அறிவியலுக்கு புறம்பாக மூட நம்பிக்கையை பரப்புரை செய்ய பேராசிரியர்களையும் துணைவேந்தரையும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து மிரட்டும் இந்து மக்கள் கட்சியை தடை செய்!

பல்கலைக்கழக நிர்வாகமே!

• சுயசாதியினரின் பதவி நலன்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகத்திற்குள் சீர்குலைவை ஏற்படுத்த விழையும் பேராசிரியர்களை அடையாளம் கண்டு வேரறு! அவர்களின் பதவிகளை பறித்திடு!

• இந்துத்துவ-சாதிய சக்திகளின் தலையீடின்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கு! அவர்களின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கு!

• பேராசிரியர்களின் ஆய்வு சுதந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் கவர்னரின் தலையீட்டை அனுமதியாதே!

பேராசிரியர்களே! மாணவர்களே!

•  இந்துத்துவ – சாதிய கூட்டணியின் ஜனநாயகவிரோத அறிவியல்-விரோத நடவடிக்கைகளை முறியடிக்க பேரா. நல்லூர் சரவணனுக்கு ஆதரவாக அணிதிரள்வீர்!

• சுயசாதி பதவி நலனுக்காக மதவாதிகளுடன் திரைமறைவுப் பேரம் நடத்தி பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் ‘பெட்டி பாலிட்டிக்ஸ் பேராசிரியர்களை’ இனங்கண்டு தனிமைப்படுத்துவோம்!

வினவு களச் செய்தியாளர்
தமிழ்நாடு.
நெ.7, மாதா கோவில் தெரு, நொளம்பூர், சென்னை – 95, 9445112675

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க